Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை:இலங்கை அரசு.

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவே இருக்கின்றார்.

ஆனால், ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பேசுவதில் எத்தகைய அர்த்தமும் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் இந்திய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கு சென்று அங்குள்ள தலைமைகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரியவருகின்றது. ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சி ஒன்று வெளிநாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். அது குறித்து அரசாங்கத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்திருந்தனர். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் இந்திய தலைமைகளுடன் பேசுவதில் அர்த்தம் இல்லை என்றே அரசாங்கம் கருதுகின்றது.

முதலில் ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். அதன்பின்னரே அவர்கள் ஏனைய விடயங்கள் குறித்து ஆராயவேண்டும். காரணம் பிரச்சினைகளுக்கான தீர்வை இரு தரப்புக்களும் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே காண முடியும்

Exit mobile version