டாட்டா, ஜிண்டால், வேதாந்த்தா போன்ற பெரு நிறுவனங்கள் சுரங்கம் அமைக்க தங்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டப்படும் பழங்குடியினருக்கு ஆதரவாக யார் நின்றாலும் அவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்று அரசு முத்திரை குத்துகிறது என்று மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென் கூறினார்.
‘என்ன நடக்கிறது சத்தீஸ்கரில்’ என்று தலைப்பில் மக்கள் சமூக உரிமைக் கழகமும் (பியுசிஎல்), லயோலா கல்லூரியின் சமூகத் தொண்டுத் துறையும் இணைந்து ஏற்பாடு செய்த கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய மருத்துவர் பினாயக் சென், சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் (ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வனப் பகுதி) டின், இரும்புத் தாது, யுரேனியம், வைரம், பாக்சைட், நிலக்கரி என்று நீங்கள் கூறும் எந்த ஒரு கனிம வளமும் அங்கு இல்லாமல் இல்லை. அதுவே இன்று அந்த மக்களின் வாழ்விற்கு வினையாகியுள்ளது என்று கூறினார்.
பஸ்தார் பகுதியில் உள்ள தாண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 650 கிராமங்கள் காலி செய்யப்பட்டுள்ளன. அங்கிருந்த பழங்குடியின மக்கள் அடித்துத் துரத்தப்பட்டுள்ளார்கள். இவையாவும் 2005ஆம் ஆண்டு அங்குள்ள மாநில அரசிற்கும் டாட்டா நிறுவனத்திற்கும் இடையே அப்பகுதியிலுள்ள கனிமங்களை எடுக்க கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகே இப்படிப்பட்ட கொடூரம் துவங்கியது என்று பினாயக் சென் கூறினார்.
“டாட்டா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான உடனே சல்வா ஜூடும் எனும் அடியாள் படை உருவாக்கப்பட்டு அது பழங்குடியினரை அடித்துத் துரத்தத் தொடங்கியது. மாநில அரசிற்கும் டாட்டாவிற்கு இடையே கையெழுத்தான அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரகசியமாகக் காப்பாற்றப்படுகிறது.
சல்வா ஜூடும் படைகளால் துரத்தியடிக்கப்பட்ட மக்களுகுக ஆதரவாக யார் பேசினாலும் அவர்களை மாவோயிஸ்ட்டுகள் என்கின்றனர். மாவோயிஸ்ட் என்றால் யார் என்பதற்கு அரசு பல வரையறைகளை வைத்துள்ளது. அந்தப் பெயரைக் கூறி அங்கு வாழும் மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளன. அங்கு நடப்பது ஒரு ஃபாசிஸ்ட் ராஜ்யமே.
தாங்கள் வாழ்ந்த இடத்திலிருந்து துரத்தப்பட்ட பழங்குடியினர் தங்கள் வாழ்விற்குத் தேவையான அத்யாவசியப் பொருட்கள் எதையும் பெற முடியாமல் துன்பப்படுகிறார்கள்” என்று கூறிய பினாயக் சென், தான் எவ்வாறு அப்பகுதிக்குச் செல்ல நேர்ந்தது என்பதையும் விவரித்தார்.
19966 முதல் 1976ஆம் ஆண்டுவரை தமிழ்நாட்டில், வேலூரிலுள்ள கிறித்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றியப் பிறகு, ஹைதராபாத்திலுள்ள தேச சத்துணவு கண்காணிப்புக் கழகத்தில் இணைந்ததாகவும், அந்த திட்டத்தின் பணி நிமித்தமாகவே தான் சத்தீஸ்கர் சென்று பணியாற்றும் நிலை ஏற்பட்டது என்றும் கூறிய பினாயக் சென், சத்துணவு தொடர்பாக தாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்தும் விளக்கினார்.
உடல் எடைக் குறியீடு (Body Mass Index – BMI) என்பதை மதிப்பீடு செய்யவே நான் அங்கு சென்றேன். ஒருவருடைய, அவருடைய உயரத்தை உடல் எடையைக் கொண்டு வகுத்தால் வரும் அளவே உடல் எடைக் குறியீடு என்பது. இதுவே ஒருவர் சத்துள்ள உணவைச் சாப்பிட்டு, உரிய உடல் பலத்துடன் உள்ளாரா என்பதற்கான அறிகுறியாகும்.
இதன்படி, கிடைக்கும் அளவு 18.5க்கு மேல் இருந்தால் அவர் போதுமான சத்துணவு நலமான உடல் பெற்றுள்ளார் என்று பொருள். ஆனால் அதற்கும் குறைவாக இருந்தால், அந்த மனிதருக்கு சத்துணவுக் குறைபாடு உள்ளது என்பதை முடிவு செய்வோம். இந்தியாவைப் பொறுத்தவரை 45 விழுக்காடு குழந்தைகள் சத்துணவு குறைப்பாட்டுடனும், பெண்களில் 37 விழுக்காடும், ஆண்களில் 33 விழுக்காடும் சத்துணவுக் குறைபாட்டுடன் இருக்கிறார்கள்.
18க்கும் குறைவான உடல் எடைக் குறியீடு உள்ளவர்கள் ஒரு பகுதியில் நிறைந்திருந்தால் அங்கு பஞ்சம் நிலவுகிறது என்று பொருள். நமது நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களில் சத்துணவு குறைவானவர்களில் 60 விழுக்காட்டினர் ஆவர்” என்று பினாயக் சென் கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தேசச் செயலாளர் முனைவர் வீ.சுரேஷ் தலைமை தாங்கினார். லயோலா கலலூரியின் சமூகத் தொண்டுத் துறை தலைவர் முனைவர் சி.ஜே.அருண் வரவேற்புரையாற்றினார்.
மக்கள் சமூக உரிமைக் கழகத்தின் தமிழக பொதுச் செயலர் ச.பாலமுருகன், தேசத் துணைத் தலைவர் சுதா ராமலிங்கம் ஆகியோர் உரையாற்றினர்.