Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜிநாமா !

30.11.2008.

மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல்களை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவி விலகியுள்ளார்.

இதுவரை நிதியமைச்சராக இருந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த ப. சிதம்பரம், புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகலில் சிவராஜ் பாட்டீல் தனது ராஜிநாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்ப்பித்தார்.

தற்போது இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல், சிவராஜ் பாட்டீல் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதேபோல், சிதம்பரத்தை புதிய உள்துறை அமைச்சராக நியமித்திருக்கும் உத்தரவையும் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை சிதம்பரம் கவனித்து வந்த நிதியமைச்சகத்தின் பொறுப்பை, பிரதமர் மன்மோகன் சிங் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.

நரசிம்மராவ் அமைச்சரவையில் ஐந்து ஆண்டுகள் நிதியமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விவாதிக்க நேற்றிரவு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தோல்வியடைந்திருப்பது குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. குறிப்பாக, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மீதும் விமர்சனம் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, காரியக் கமிட்டி என்ன முடிவெடுத்தாலும், அதன்படி செயல்படத் தயாராக இருப்பதாக பாட்டீல் தெரிவித்தார்.

அந்தக் கூட்டத்துக்கு, நிதியமைச்சர் சிதம்பரமும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அப்போதே சிதம்பரத்துக்கு உள்துறை கொடுக்கப்படலாம் என்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

அதன்பிறகு, இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த சிதம்பரம், மும்பை தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

74 வயதான சிவராஜ் பாட்டீல் பதவி விலகியதை அடுத்து, புதிய உள்துறை அமைச்சராகியிருக்கும் 63 வயதான சிதம்பரம், 1980-களின் பிற்பகுதியில் மறைந்த ராஜீவ் காந்தி அமைச்சரவையில் உள்நாட்டுப் பாதுகாப்புக்கான இணை அமைச்சராகப் பதவி வகித்த அனுபவம் பெற்றவர்.

இதனிடையே, மும்பை சம்பவத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனும் பதவி விலக முன்வந்ததாகவும், ஆனால் பிரதமர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

 BBC.
Exit mobile version