Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய உயர்மட்டக்குழு யாழ்ப்பாணம் பயணம்;மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான முயற்சி?

 

யாழ்ப்பாணத்துக்கான இரண்டு நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்தியத் தூதுவரும், தூதரக உயர் அதிகாரிகளின் குழுவும் அங்கு முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், தற்போதைய நிலைமைகள் தொடர்பாக மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

தூதுவர் அலோக் பிரசாத்துடன் பிரதித் தூதுவர், அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் உட்பட தூதரக முக்கிய அதிகாரிகள் பலரும் இந்தப் பயணத்தில் இணைந்திருக்கின்றனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை பலாலி வானூர்தி நிலையத்தைச் சென்றடைந்த இவர்கள் பின்னர் அங்கிருந்து யாழ். நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு முன்னர் குடாநாட்டுப் படை அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்றும் பலாலி இராணுவ முகாமில் இடம்பெற்றது.

யாழ். நகரில் கல்வி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக விரிவான பேச்சுக்களை நடத்திய இந்திய தூதரக அதிகாரிகளின் குழு, குடாநாட்டு மக்களின் உணர்வுகளை நாடி பிடித்துப் பார்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதாக குடாநாட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

“சிங்கள மக்கள் சீனாவையே நம்பியிருக்கின்றனர். ஆனால், தமிழ் மக்கள் இந்தியா மீதே முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். இருந்தபோதிலும் இந்தியா தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து மாபெரும் வரலாற்றுத் தவறைச் செய்திருக்கின்றது” என பொது சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் இந்தியத் தூதுக்குழுவினருக்குத் தெரிவித்திருக்கின்றார்.

யாழ். ஆயர் பிதா தாமஸ் செளந்தரநாயகம், நல்லை ஆதீன முதல்வர் சிறீலசிறி சோமசுந்தர பரமாச்சாரிய சுமாமிகள் ஆகியோரையும் சந்தித்த இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் பேச்சுக்களை நடத்தினர்.

யாழ். அரசு அதிகாரி கே.கணேஷ் இந்தியத் தூதுவரையும் அதிகாரிகளையும் யாழ்.பல்கலைக் கழகத்துக்கும் அழைத்துச் சென்றார். அங்கு பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகளுடனான சந்திப்பில் கலந்துகொண்ட இந்தியத் தூதுவர் பல்கலைக்கழகத்தின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து யாழ். பொது நூலகத்துக்குச் சென்ற இந்தியத் தூதுவர் அங்கு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தனித் தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார். இந்தப் பேச்சுக்களின் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இன்று புதன்கிழமையும் குடாநாட்டில் இடம்பெறும் சந்திப்புக்களில் கலந்துகொகொள்ளும் இந்தியத் தூதுவர் தலைமையிலான குழுவினர் இன்று மாலை கொழும்பு திரும்புவார்கள்.

Exit mobile version