அந்தக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“கண்டியில் உள்ள இந்திய உதவித்தூதரகம் மலையகத்தில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதற்காகவே இயங்கிவருவதாக நாம் கருதுகிறோம்.
ஆனால் இத்தூதரகத்திற்கு விசா பெற்றுக்கொள்வதற்காக செல்லும் இந்திய வம்சாவளி மக்களைப் பல்வேறு வகையான அசௌகரியங்களுக்கு அங்குள்ள விசா வழங்கும் அதிகாரிகள் உட்படுத்துவதாகவும், பலருக்கு விசா வழங்க மறுப்பதாகவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். இந்த நிலைமை தற்போதைய உதவித் தூதுவரின் வருகைக்கு பின்னரே ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இலங்கையில் மலையக பிரதேசத்தில் வாழுகின்ற இந்திய வம்சாவளி மக்கள் இந்திய தமிழ் நாட்டுடன் இரத்த உறவுகளை கொண்டவர்கள் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
கல்வி நடவடிக்கைகள், திருமண வைபவங்கள், உறவுகளைப் பார்ப்பதற்கு, பரம்பரை சொத்துக்களை பராமரிப்பதற்கு, நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கு இன்னும் பல்வேறு தேவைகளுக்காக தமிழகம் சென்று வரவேண்டிய கட்டாயத்தேவை மலையகத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு இருக்கிறது. இந்த மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களின் தேவைகளை சாதகமாக பரிசீலிக்க விசா அதிகாரி தயாராக இல்லை. ஸ்ரீமா – சாஸ்த்தி ஒப்பந்தத்தின் காரணமாக ஒரே குடும்ப உறுப்பினர்களில் பலர் இந்தியாவிலும் சிலர் இலங்கையிலும் வாழ்கின்றனர்.
இவ்வாறானவர்களுக்கும் கூட விசா வழங்குவதற்கும் கண்டி இந்திய உதவித் தூதரகத்தால் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன.இந்தியா செல்வதற்கு விசா பெற்றுக்கொள்ள செல்லும் ஒவ்வொரு இந்திய வம்சாவளி தமிழனையும் தூதரக அதிகாரிகள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இல்லை.
விசாபெறுவதற்காக கண்டிக்கு சென்று அல்லல் படுவதை விட கொழும்புக்கு போய் விசா பெற்றுக் கொள்வது சுலபமானதாக இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இந்திய வம்சாவளி மக்கள் பெருமளவு வாழுகின்ற மத்திய மலை நாட்டில் இந்த மக்களின் நலன்களைப் பேணுவதற்கு கண்டி உதவித்தூதரகத்தில் தமிழ் தெரிந்த, இந்த மக்களின் வரலாற்று பின்னணி தெரிந்த அதிகாரிகள் இருப்பது அவசியமாகும்.
அப்படியானதொரு நிலைமையைத் தோற்றுவிக்காவிட்டால் இந்தத் தூதரகத்தின் தேவை கேள்விக்குறியாகிவிடும். ஆகவே இலங்கையில் பல காலமாக இந்திய தூதுவராக கடமையாற்றிய உங்களால் இப்பிரச்சினையை சரியாக கையாள முடியுமென கருதுகிறோம். இவ் விடயத்தில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் நலன் கருதி உங்கள் கவனத்தை செலுத்துமாறு வேண்டுகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.