14.03.2009.
இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு பெரும் சந்தேகமாக இருக்கிறது. இது இலங்கை சுகாதார சேவைக்கும் அதன் பணியாளர்களுக்கும் நாட்டின் இறைமைக்கும் பெரும் பாதிப்பாகும்.
இந்திய மருத்துவர் குழு இலங்கைக்கு வருகைதந்திருப்பது குறித்து கடும் எதிர்ப்பு வெளியிட்டிருக்கும் அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் , இந்த மருத்துவ அணியின் வருகையானது இலங்கை மருத்துவ ஒழுங்கு விதிகளுக்கு முரணானது என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் எச்சரித்திருக்கிறது.
அது மட்டுமல்லாது, இவ் விடயத்தில் தங்களது கோரிக்கைக்கு சுகாதார அமைச்சு செவி சாய்க்கவில்லையெனில் சுகாதார சேவை தொழிற்சங்கங்களை மட்டுமல்லாது, எனைய துறை சார்ந்த தொழிற்சங்கங்களையும் மக்களையும் இணைத்துக்கொண்டு எதிர்ப்புப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அச் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வந்திருக்கும் இந்திய மருத்துவ அணியினர் புல்மோட்டையில் வைத்தியசாலையொன்றை ஏற்படுத்தி சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான டாக்டர் கிஷாந்த தஸநாயக்க தெரிவிக்கையில்;
“”இந்திய வைத்தியர்களுடன் கூடிய மருத்துவ அணியினர் இலங்கை வந்து வைத்தியசாலையொன்றை ஏற்படுத்தி சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாம் எதிர்க்கிறோம். ஏனெனில், இலங்கையின் சட்டவிதிகளுக்கு அமைய வைத்தியரோ அல்லது மருத்துவ நிலையங்களோ இலங்கை மருத்துவ சபையினால் பதிவு செய்யப்படவேண்டும்.
ஆனால், இந்திய வைத்தியர்களோ, அவர்களது வைத்தியசாலையோ அவ்வாறு எந்தப் பதிவுகளுக்கும் உட்படுத்தப்படவில்லை. எனவே, இங்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளின் போது ஏதேனும் தவறுகள் ஏற்படின் அதற்கான பொறுப்பை எடுத்து மருத்துவ சபை விசாரணைகளை மேற்கொள்ளவும் செய்யாது. அதற்கான அதிகாரமும் அதற்குக் கிடையாது. இலங்கையிலுள்ள சட்டங்களுக்கு அமைய இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே இங்கு சிக்கலாகும்.
இந்தியாவோ அல்லது வேறு எவருமோ வைத்தியசாலையொன்றை அன்பளிப்பு செய்வதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால், புதியதொரு வைத்தியசாலை ஏற்படுத்தப்படும் போது அதில் பணிபுரிய போதுமானளவு வைத்தியர்களும் சுகாதார பணியாளர்களும் இலங்கையில் இருக்கும்போது வெளிநாட்டிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவர வேண்டியதன் அவசியம் என்னவென்பதே எமது கேள்வியாகும்.
இலங்கைக்கென சிகிச்சை முறை உடன்படிக்கை இருக்கிறது. இலங்கை சூழலுக்கு ஏற்ற மாதிரியே இது இருக்கிறது. உதாரணமாக, இலங்கை வைத்திய சாலைகளை பொறுத்தவரையில சிகிச்சையளிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலை மாற்றப்பட்டாலும் அவர் பற்றி மீளாய்வு செய்யும் முறை இருக்கிறது. எனினும், இதுபற்றி இந்திய வைத்தியர்களுக்கு தெரியாது. இவ்வாறானவற்றையே நாம் எதிர்க்கிறோம்.
இதேநேரம், புல்மோட்டை என்பது இவ்வளவு காலமும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது மீட்கப்பட்ட பிரதேசமல்ல. எப்போதுமே அரச கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசமே இது. அது மட்டுமல்லாது, அங்கு ஏற்கனவே புல்மோட்டை வைத்தியசாலையும் அருகில் பதவியா வைத்தியசாலையும் இருக்கின்றன. ஆனால், அரசாங்கம் இவற்றை போதிய வசதிகளுடன் கூடியதாக அபிவிருத்தி செய்யாமல் இந்திய வைத்தியசாலையொன்றை ஏற்படுத்த அங்கு இடமளித்துள்ளது.
எனவே, புல்மோட்டையில் புதிதாக அமைக்கப்படும் வைத்தியசாலையை இலங்கை சுகாதார சேவைக்குள் உள்ளீர்த்து இலங்கையிலுள்ள சுகாதார சேவைப் பணியாளர்களை வைத்து அதைக் கொண்டு நடத்தவேண்டுமென சுகாதார அமைச்சிடம் நாம் கோரிக்கை விடுக்கிறோம். எமது இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களையும் மக்களையும் இணைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
அதுமட்டுமல்லாது, இந்திய மருத்துவ அணியின் வருகையும் செயற்பாடுகளும் இலங்கை மருத்துவ ஒழுங்குவிதிகளுக்கு முரணானவை என்பதால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கத் தீர்மானித்துள்ளோம்’ என்றார்.