350 கி.மீ. தூரத்திற்குட்பட்ட எதிரியின் தரை இலக்குகளை மிகத் துல்லியமாகத் தாக்கவல்ல பிருத்வி-2 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நடந்துள்ளது.
ஏவுகணைகளை அழிக்க ஏவப்படும் ஏவுகணையில் சிக்காமல் இலக்கைத் தாக்கவல்ல பிருத்வி-2 ஏவுகணை, அணு ஆயுதங்களை இயக்கும் அதிகாரம் கொண்ட முப்படைகளையும் சேர்ந்த தந்திரோபாய கட்டளைப் படையால் (strategic Forces command) சோதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரிசா மாநிலம் பலசூரில் உள்ள ஏவுகணை செலுத்துத் தளத்தில் இருந்து நகரும் தளம் ஒன்றிலிருந்து இன்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்ட பிருத்வி-2, இரு இலக்கத்திற்கும் குறைவான துல்லியத்துடன் இலக்கைத் தாக்கியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிருத்வி -2 ஏவுகணை 500 முதல் 1,000 கி.கி.வரையிலான அணு ஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சென்று தாக்கவல்லதாகும். 350 கி.மீ. தூர இலக்குகளை 8 நிமிடங்களில் தாக்கவல்லதாகும்.