Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய இராணுவ மருத்துவக்குழு உளவாளிகளாகச் செயற்படக்கூடும்:திவயின.

17.03.2003.

இரண்டு இந்திய விமானங்களில் ஏற்றிவரப்பட்ட இந்திய இராணுவம் சார்ந்த மருத்துவக் குழுவினர் தற்போது புல்மோட்டை பிரதேசத்தில் வெளிக்கள வைத்திய நிலையம் ஒன்றை அமைத்து அங்கு செயற்பட்டு வருகின்றனர். புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளுடன் அரச படையினர் கடும் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த இறுதிக் கட்டத்தில் அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு வைத்திய சிகிச்சை செய்வதற்காக மருத்துவக் குழுவை அனுப்பிவைக்கப்போவதாகவும் அதற்கு அனுமதி தரும் படியும் இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட கோரிக்கையை ஸ்ரீ லங்கா அரசு ஏற்றுக் கொண்டதன் பேரிலேயே இவ்வாறு இந்திய இராணுவ மருத்துவக் குழு வன்னிக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியா இவ்வாறு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய இந்திய சிவில் வைத்தியக் குழுவினரை அனுப்பாது எதற்காக இராணுவ மருத்துவக் குழுவினரை அனுப்பி வைத்தது என்ற பாரதூரமான சந்தேகம் தற்போது பாதுகாப்பு விமர்சகத் தரப்பில் கிளப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த இந்திய மருத்துவக் குழுவினர் வைத்திய சிகிச்சைக்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை உபகரணங்கள், கருவிகளை விட ஸ்ரீ லங்கா பாதுகாப்பு விடயத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஆயுதங்களையோ அல்லது தகவல் பரிமாற்ற கருவிகள், உபகரணங்களையோ வேவு பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் வேறு நவீன தொழில்நுட்பக் கருவிகளையோ தம்முடன் எடுத்து வந்துள்ளார்களா என்பது பற்றிய சந்தேகங்களும் கிளப்பப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இந்திய மருத்துவக் குழுவினர் அதிசக்திவாய்ந்த தகவல் பரிமாற்ற இயந்திரங்கள், கருவிகளைப் பயன்படுத்தி வருகின்றனரா என்பது பற்றி பாதுகாப்புப் படையினர் மூலமாக விசாரணைகளையோ, அல்லது சோதனை நடவடிக்கைகளையோ பாதுகாப்புத்துறை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்திய அரச உளவுத்துறையாகிய “றோ’ உளவுப் படையினர் வன்னியில் ஸ்ரீ லங்கா படையினர் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்தே எமது படை நடவடிக்கைகளைக் கண்காணித்தும் தகவல்களைத் திரட்டியும் வருவதாக பல சந்தர்ப்பங்களிலும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, இந்திய மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வைத்திய சேவை வழங்குதல் என்ற போர்வையில் ஸ்ரீ லங்கா படையினரின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள், திட்டங்கள் பற்றித் தகவல்களைத் திரட்டி தமது நாட்டின்”றோ’ உளவுப் படைக்கு அறிவிக்கக் கூடிய சாத்தியமும் உள்ளது. இந்தவகையில் இந்த மருத்துவக் குழுவுடன்”றோ’ உளவுப் பிரிவினரும் வன்னிக்கு வந்திருக்கக் கூடும். சிவில் மருத்துவர்கள் குழுவை அனுப்பிவைக்காது இராணுவ மருத்துவக் குழுவை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளதன் அடிப்படையில் பார்க்கும் போது மேற்படி சந்தேகங்கள் எல்லாமே சாத்தியமானவையாகும்.

இவ்வாறுதான் அண்மையில் கொசோவோ சேர்பியா யுத்த மோதல்களின் போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அல்பேனிய மக்களுக்காக வைத்திய சேவை வழங்குதல் என்ற போர்வையில் இராணுவ மருத்துவக் குழுவினர் யுத்தப் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு இராணுவ வெளிக்கள வைத்தியசாலையை அமைத்து செயற்பட்ட வேளையில் சேர்பிய இராணுவத்தினர் அந்த நிலையத்தைச் சோதனையிட்ட பொழுது அங்கு கொசோவோவின் வைத்தியக் குழுவினர் பிரிவினைவாத அல்பேனியக் குழுவினருக்கு வைத்திய சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. அவ்வாறே மேற்படி மருத்துவக் குழுவினர் தாம் அமைத்த வைத்தியசாலையில் சக்தி வாய்ந்த தகவல் பரிமாற்ற இயந்திரங்கள், கருவிகளை வைத்திருந்து சேர்பிய இராணுவத்தினரின் நடவடிக்கைகள், நடமாட்டங்கள், திட்டங்கள் பற்றிய தகவல்களையும் திரட்டி அல்பேனியத் தீவிரவாதிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வகையில் வைத்தியசாலை என்ற பெயரில் இராணுவ வைத்திய குழுவினர் உளவு நிலையத்தை நடத்தி வந்தனர். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததும் பாதுகாப்புக்குப் பெரும் ஆபத்தாக அமைந்ததுமான மேற்படி விபரங்களை சேர்பிய அரசு கண்டுபிடிக்க முடிந்தது சேர்பிய இராணுவத்தினர் மூலம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சேதனைகள் காரணமாகவே ஆகும்.

எனவே, தற்போது வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வைத்திய சேவை செய்தல் என்று கூறிக்கொண்டு இந்திய மருத்துவக் குழுவினர் இராணுவ உளவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் எதிர்பார்க்கக் கூடியதே. மேலும் இதை உறுதிப்படுத்துவதாகவே சிவில் மருத்துவக் குழுவினருக்குப் பதிலாக இராணுவ மருத்துவக் குழுவினரை இந்திய அரசாங்கம் அனுப்பிய செயற்பாடு உள்ளது. எனவேதான் புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள இந்த இந்திய இராணுவ மருத்துவக் குழுவினரின் வெளிக்கள வைத்தியசாலையையும் மருத்துவக் குழுவினர்களின் நடவடிக்கைகளையும் பற்றி ஸ்ரீ லங்கா பாதுகாப்பு உயர்மட்டம் விசாரணைகள், சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்துடன், இந்த இராணுவ மருத்துவக் குழுவினர் அகதிகளாக வாழும் பொதுமக்களுக்குத்தான் சிகிச்சை செய்கிறார்களா அல்லது புலிகள் இயக்கத்தினரும் இவ்வாறு பொதுமக்களுடன் சேர்ந்து இந்திய மருத்துவக் குழுவினரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்களா என்பது பற்றியும் பாதுகாப்புத்துறை கண்காணிப்பாக இருக்க வேண்டும். சிவில் மருத்துவக்குழுவுக்குப் பதிலாக இராணுவ மருத்துவக் குழுவினர் அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்குப் பதிலாகப் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளும் சிகிச்சைப் பெறக் கூடும் என்ற சந்தேகம் நியாயமானதே.

திவயின.: தகவலும் விமர்சனமும். 15.03.2009.

 THANK:Thinakkural

Exit mobile version