Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்திய அளவிலான பந்த் நடத்த முடிவு.

ஏழை எளிய நடுத்தர மக்களை கடுமையாக் பாதிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், கெரசின், சமையல் எரிவாயு விலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2 நாள்களுக்கு முன்பு உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் இந்திய அளவிலான பந்த் நடத்த இடதுசாரிக் கட்சிகள், தேர்தலின்போது 4-வது அணியில் திரண்டு போட்டியிட்ட கட்சிகள் கொள்கை அளவில் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. பந்த் நடத்த ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமாஜவாதி கட்சி, தெலுங்கு தேசம் கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகள் கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன. பந்த் நடத்துவதற்கான தேதியை இன்னும் கட்சிகள் முடிவு செய்யவில்லை. பந்த் நடத்துவதற்காக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவை சரத் யாதவ் திரட்டி வருகிறார். இதற்காக பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச் செயலர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் .பி. பரதன், இந்திய தேசிய லோக் தளத்தின் தலைவர் ஓம் பிரகாஷ் செüதாலா, சமாஜவாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோருடன் சரத் யாதவ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த பந்த் போராட்டத்தில் கலந்துகொள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத்திடம் பேசுமாறு முலாயம் சிங் யாதவை பிரகாஷ் காரத் கேட்டுக் கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜனசக்தி, அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் போராட்டத்தில் பங்கேற்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version