புலம் பெயர் நாடுகளில் தமிழ்ப் பேசும் மக்களுக்கான உறுதியான அரசியல் தலைமை அற்றுப் போயுள்ள சூழலில் அதிகாரவர்க்கங்களுடன் இணைந்து காய் நகர்த்தலையே அரசியல் என அறிமுகப்படுத்தும் குழுக்களே ஆங்க்காங்கு முளைவிட்டு நிலை கொண்டுள்ளன. முப்பது வருடப் போராட்டத்தின் அனைத்துத் தியாகங்களும் அழிக்கப்பட்டு உலகின் பின் தங்கிய பிற்போக்கான சமூகம் எனத் தமிழ்ச் சமூகம் தம்மை அறிமுகம் செய்துகொள்ளும் வகையில் இத் தலைமைகள் நடந்துகொள்கின்றன. ஒரு பக்கத்தில் புலிகளின் அடையாளத்தைப் பயன்படுத்தி நிலைகொண்டுள்ள குழுக்களும், மறுபுறத்தில் புலிகளின் எதிரணி என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள குழுக்களும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பங்கு போட்டு வியாபாரம் நடத்துகின்றன.
புலம்பெயர் நாடுகள் எங்கும் முளைவிடும் குழுக்களின் தாம் அதிகாரவர்கங்களோடு கைகோர்த்துக்கொள்வதற்காக ஈழத் தமிழர்களின் அவலத்தைப் பயன்படுத்திக்கொள்கின்றன. அந்தவகையில் Non Resident Tamils (of Sri Lanka) என்ற அமைப்பு லண்டனில் தோற்றுவிக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களுக்கு அறிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இந்திய அரச ஆதரவாளர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ள இவ்வாறான அமைப்புக்கள் ஆபத்தான பின் விளைவுகளையே ஏற்படுத்தும். பிரித்தானியாவின் நேரடிக் காலனியாதிக்கம் முடிவடைந்த நாளிலிருந்து இலங்கையில் இந்திய அரசின் தலையீட்டின் வரலாறு முழுவதும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழிக்கும் வரலாறே. இலங்கை சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது இந்திய அரசின் தலையீட்டுக்கும் எதிரான போராட்டமாகவே அமையும். தனது நாட்டின் உள்ளேயே தேசிய இனங்களை அழித்துத் துவம்சம் செய்யும் இந்திய அரசை நோக்கி தமிழர்களைப் பாதுகாகுமாறு கேட்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கும் இழைக்கும் துரோகமாகும்.
ஒடுக்கப்படும் ஈழத் தமிழர்களின் பேரால் உலகம் முழுவதுமுள்ள போராடும் தேசிய இனங்களுக்குத் துரோகமிழைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
இந்தியாவில் ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும், உலகம் முழுவதுமுள்ள போராட்ட அமைப்புக்களோடும் இணைப்பை ஏற்படுத்தி போர்க்குரலாக உருவாகும் தலைமையே இன்றைய அவசரத் தேவை.