இந்திய அரசுடன் நான் நேரடித் தொடர்பை ஏற்படுத்தவுள்ளேன். ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு ஆதரவு தருமாறு கோரவுள்ளேன்.இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவியதால்தான் விடுதலைப் புலிகள் தோல்வி அடைய நேரிட்டது என்று கூறியுள்ளார் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன்.
இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபத்திய போரில், இந்தியா, இலங்கைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. முழு வகையில் உதவிகளைப் புரிந்தது.
இந்தியாவின் இந்த நிலைப்பாட்டுக்கு நாங்களும், தமிழ் மக்களும் பலிகடாவாகி விட்டோம்.
இலங்கையின் ராணுவ வெற்றிக்கு இந்தியா எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது எங்களுக்கு முழுமையாக தெரிந்தாலும் கூட, இந்தியாவை நாங்கள் வெறுக்கவில்லை.
இந்தியாவின் பிரதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டால் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுமையான பாதுகாப்பாக இருப்பார்கள் என நாங்கள் உறுதியாக கருதுகிறோம். குறிப்பாக சீனாவை கருத்தில் கொண்டால் நிச்சயம் தமிழ் மக்கள்தான் இந்தியாவுக்கு முழுப் பாதுகாப்பாக இருக்க முடியும்.
இதை இந்தியா ஒரு நாள் உணரும், ஈழத் தமிழர்களின் சுய நிர்ணயப் போராட்டத்தை ஆதரிக்க முன்வரும்.
அதேபோல விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றார் அவர்