இந்திய அரசாங்கத்தின் இரட்டைவேடத்தினை விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வவுனியாவில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் மீது வான் புலிகளும் கரும்புலிகளும் நடத்திய தாக்குதலின் விளைவாக இந்தியா வழங்கியிருந்த ராடர் கருவி முற்றிலுமாக அழிக்கப்பட்டதுடன் அதனை இயக்கிய இந்திய இராணுவ அதிகாரிகள் இருவர் காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி இந்திய அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி விட்டது.
சிங்கள அரசுக்கு ஆயுத உதவி மட்டுமல்ல ஆள் உதவியையும் இந்திய அரசு செய்து வருகிறது என்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்திய அரசின் இந்தப்போக்கை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் பல முறை கூறிவிட்டார். ஆனால் நடைமுறையில் இராணுவரீதியான தீர்வு காண முயலும் சிங்கள அரசுக்கு இராணுவரீதியான உதவிகளை இந்திய அரசு செய்து வருவது தமிழ் நாட்டு மக்களின் உள்ளங்களைக் கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த தகாதப் போக்கினை உடனடியாக கைவிடுமாறு இந்திய அரசை வற்புறுத்துகிறேன்