Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கொழும்புக்கு வலியுறுத்தல்!

16.09.2008.

புதுடில்லி: வன்னியில் இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள தாக்குதல்களால் இடம் பெயர்ந்து மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து கரிசனையையும் கவலையையும் வெளியிட்டிருக்கும் இந்தியா, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கொழும்பிடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை நிலைவரம் தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்ரனி, “இலங்கை அதிகாரிகளுக்கு ஏற்கனவே எமது விசனத்தை தெரிவித்துள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தமிழ் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அன்ரனி கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் “படை ஆயத்தம் தொடர்பான இந்திய அனுபவம்’ எனும் கருப் பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய இந்திய பதுகாப்பமைச்சர் அன்ரனி, அரசாங்கங்கள் பரஸ்பரம் ஒருவரில் ஒருவர் தங்கியிருப்பதை குறிப்பாக, அயலவர்களில் தங்கியிருப்பதை தவிர்ப்பதாலேயே சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக குறிப்பிட்டிருந்தார். தலிபான், புலிகள் போன்ற அமைப்புகளால் இத்தகைய அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

போக்லாந்தில் பிரிட்டிஷார் பெற்ற அனுபவங்கள், நேட்டோ கூட்டணியினருக்கு ஆப்கானிஸ்தானில் கிடைத்த அனுபவங்கள் என்பன தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சமாதானத்தையும் ஸ்திரத் தன்மையையும் பேணுவதற்கு, தமது தேசிய எல்லைகளுக்கு அப்பால் சென்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு படையினர் தயாராக இருக்க வேண்டுமென்பதை வெளிப்படுத்துகின்றது என்றும் அன்ரனி கூறியுள்ளார்.

இந்தியாவின் அயல் நாடுகளில் அரசை சார்ந்திராத கணிசமான எண்ணிக்கையான ஆயுதக் குழுக்கள் புகலிடங்களை கொண்டிருப்பதாகவும் இந்தியா பூராகவும் தமது பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஆயுதக் குழுக்கள் இந்தத் தளங்களையும் வளங்களையும் பயன்படுத்துவதாகவும் அன்ரனி சுட்டிக் காட்டியுள்ளார்.

“இந்த விடயங்களும் மற்றும் அணு ஆயுத பரிகரணம் போன்ற விவகாரங்களும் எமது முக்கியமான நலன்கள், பெறுமானங்களை பாதுகாப்பதற்கான விழிப்புடன் தயார் நிலையில் நாம் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக பொருளாதாரத்துடன் இந்தியாவின் பிணைப்பு அதிகரித்து வருகின்றமையானது இந்திய பாதுகாப்பு படைகளின் பொறுப்புக்களையும் அதிகரிக்கச் செய்துள்ளது என்று தெரிவித்த அன்ரனி, சர்வதேச அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பங்களிப்பு செய்வதற்கான ஆற்றலும் விருப்பமும் இந்தியாவுக்கு இருக்கும் நீண்ட சவால் என்றும் இது உண்மையிலேயே எந்தவொரு பெரிய தேசத்துக்கும் உள்ள பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக ஐ.நா. அமைதி காக்கும் பணியில் இந்தியா தனது ஈடுபாட்டையும் விருப்பத்தையும் நீண்ட காலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறது. ஆசிய கடற்கோள், மியான்மார் சூறாவளி, “லெபானிலிருந்து இந்தியர்களை வெளியேற்றியமை, மத்திய கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்பனவற்றில் இந்தியா தனது துரிதமான செயற்பாட்டையும் உலகில் எங்கு நெருக்கடி ஏற்பட்டாலும் உடனடியாக செயற்படும் ஆற்றலையும் வெளிப்படுத்தியிருப்பதாகவும் அன்ரனி கூறியுள்ளார்.

ஐ.நா.வின் ஆணையின்றி, நட்பு அரசாங்கங்களின் கோரிக்கையின் பேரில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளில் இந்தியா மேற்கொண்ட தலையீடுகளை நினைவு கூர்ந்த அன்ரனி, எதிர்கால கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான ஆற்றல்களை கட்டியெழுப்பவும் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ளவும் இவை ஆயுதப் படைகள் முக்கியமான பாடங்களை கற்றுக் கொள்வதற்கான சிறந்த முன்னுதாரணங்களாக இருப்பதாகவும் அன்ரனி கூறியுள்ளதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்று தெரிவித்தது.

Exit mobile version