22.11.2008.
டெல்லி: சர்வதேச அளவில் பொருளாதார மந்தம் நிலவினாலும், இந்தியா தனது தாராளமயமாக்கலைத் தொடர வேண்டும். இந்தியாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் கதாத்திருக்கின்றன என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி அரசைக் கேட்டுக் கொண்டார்.
இந்துஸ்தான் டைம்ஸ் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
சர்வதேச பொருளாதாரச் சூழலை நினைத்து நாம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இந்தியப் பொருளாதாரம் எப்போதும் அரசின் கட்டுக்குள்தான் இருக்கிறது.
எனவே தாராளமயமாக்கலை இந்த அரசு தொடர்வதுதான் நல்லது. வேண்டுமானால் சின்னச் சின்ன கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இன்றைக்கு நாட்டுக்குத் தேவையானது பெரிய அளவில் உள்கட்டமைப்புத் துறை முதலீடுகள்தான். அதே போல அரசு எந்திரம் இன்னும் உத்வேகத்துடன் செயல்படும் விதத்தில் மாற வேண்டும். பொது செலவினங்களை இன்னும் பயனுள்ள முறையில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு திறந்த பொருளாதாரம் அவசியம்தான். ஆனால் சில கட்டுப்படுகளுடன் கூடிய திறந்த பொருளாதாரமாக அது இருக்க வேண்டும்.
நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டவர்களாக உள்ளோம். எனவே சிக்கல் என்று வரும்போது, அதை அனைவருமேதான் எதிர்கொள்ள வேண்டும். இன்றைக்கு சர்வதேச அளவில் நிகழும் மோசமான பொருளாதாரச் சூழல் விரைவில் சரியாகும். இந்தியாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன், என்றார் சோனியா காந்தி.