Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா எமது பிரச்சினைகளை நன்றாக விளங்கிக் கொண்டுள்ளது!;உண்மையான நண்பன் என்பதை நிரூபித்து விட்டது!!:பசில் ராஜபக்ஷ .

28.10.2008.
“உண்மையான நண்பன்’ என்பதை இந்தியா நிரூபித்து விட்டது. அவர்கள் நிரூபித்து விட்டனர். எமது பிரச்சினைகளை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை நாம் கண்டு கொண்டோம் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு நிர்ப்பந்திக்கும் சாத்தியத்தை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

“பொதுமக்களின் பாதுகாப்புக்காக எம்மால் முடிந்தவை அனைத்தையும் நாம் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அது தொடர்பாக நாம் ஆராய்கின்றோம். பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படாமல் அல்லது ஆகக் குறைந்தளவாக வைத்திருப்பதை உறுதிப்படுத்த நாம் விரும்புகிறோம்’ என்றும் பசில் கூறியுள்ளார்.
புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டு இந்தியத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பசில் ராஜபக்ஷ நேற்று திங்கட் கிழமை புதுடில்லியில் ஐ.ஏ.என்.எஸ்.ஸுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் தற்போது பொதுமக்கள் எவரும் இல்லை. எமது சுடுதூர எல்லைக்கப்பால் புலிகளின் பகுதிக்கு அவர்கள் சென்று விட்டனர். கிளிநொச்சி நகரில் எந்தவொரு அரச அலுவலகமும் இயங்கவில்லை. ஆஸ்பத்திரி மட்டுமே இயங்குகிறது. அதுவும் அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. சகல பொதுமக்களும் வெளியேறி விட்டனர். கிளிநொச்சியில் சிறிய எண்ணிக்கையானோர் இருந்தால் அவர்கள் விடுதலைப்புலிகளே என்றும் ஜனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அங்கு (வன்னியில்) குறிப்பிட்ட சில நெருக்கடிகள் (பொதுமக்களுக்கு) உள்ளன. அதனை ஏற்றக் கொள்கிறோம். அவற்றைக் குறைப்பதற்கு விரும்புகிறோம். இப்போது கிளிநொச்சியில் பொதுமக்கள் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

முழுப் பிராந்தியத்தின் சனத்தொகை 2 இலட்சத்து 50 ஆயிரமாகும். யாவரும் இடம்பெயர்ந்தவர்கள் அல்ல. இடம்பெயர்ந்தவர்கள் என்றால் அவர்களுக்கு நாம் பங்கீட்டுப் பொருளை வழங்க வேண்டியிருக்கும். முல்லைத்தீவு மக்கள் தமது வீடுகளிலேயே இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு கொள்வனவு சக்தி இல்லை. பங்கீட்டுப் பொருட்களை வழங்குவதால் அவர்களை இடம்பெயர்ந்தவர்களென நாம் அழைக்கிறோம். மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மக்கள் மட்டுமே இடம்பெயர்ந்துள்ளனர்.

தற்போது மழை ஆரம்பித்து விட்டது. வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான நடவடிக்கை எடுக்கவேண்டியது எமது பொறுப்பு. இது தொடர்பாக இந்திய அரசுடன் ஆராய்ந்தோம். 100 தொன் உணவு, மருந்துப் பொருட்களை அனுப்புவதாக அவர்கள் (இந்தியா) கூறியுள்ளனர். விநியோகம் தொடர்பாக வாரம் தோறும் இந்திய உயர் ஸ்தானிகருடன் நாம் கலந்துரையாடல்களை மேற்கொள்வோம். இலங்கையிடம் விநியோக ஏற்பாடுகள் உள்ளன. ஐ.நா. முகவரமைப்புகள் அப்பகுதிகளுக்கு செல்லும். அவர்கள் எமக்குத் தகவலைத் தருவார்கள்.

இலங்கை நிலைவரம் தொடர்பாக சிறப்பான விதத்தில் புதுடில்லி தகவல்களைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் ஏன் இடம்பெறுகின்றன என்பது குறித்தும் கொழும்பு நன்றாக விளங்கிக் கொண்டுள்ளது என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இந்திய மீனவர்களின் பிரச்சினை பற்றிக் குறிப்பிடுகையில், மீனவர்கள் சர்வதேச கடல் எல்லை பற்றி கவனிப்பதில்லை. மீன் எங்கேயிருக்கின்றது என்றே அவர்கள் செல்வார்கள் என்றும் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் பற்றிக் குறிப்பிடுகையில், தமிழ் மக்களிடமிருந்து புலிகளின் தலைவர் பிரபாகரனையும் அவரின் புலனாய்வுத் தலைவரையும் தனிமைப்படுத்த அரசாங்கம் முயற்சித்ததாக பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

சில விடயங்களை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. போத்தலில் இரு மீன்கள் இருந்தால் தண்ணீருக்குள் இருந்து மீன்களை வெளியே எடுக்க வேண்டும் அல்லது தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அரசாங்கம் இரண்டையும் செய்கிறது. மக்களிடமிருந்து அவர்களை தனிமைப்படுத்த விரும்புகிறோம். தனிப்பட்டவர்கள் மீது பயங்கரவாதிகளாக இருந்தாலும் நாம் எதிரானவர்கள் அல்ல. பயங்கரவாதத்துக்கு மட்டுமே நாம் எதிரானவர்கள் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

Exit mobile version