சர்வதேசப் புகழ்பெற்ற 95 வயது ஓவியர் எம்.எப். ஹுசேன் கத்தார் அரசு அளித்த குடியுரிமையை ஏற்றுக் கொண்டார். இந்திய குடியுரிமையை அவர் துறக்கவுள்ளார். அவருடைய ஓவியங்களில் இந்துக் கடவுள்களை அவர் அவமானப்படுத்தினார் என்று இந்து மதவெறி அமைப்புகள் அவர் மீது தாக்குதல் தொடுத்தன. அவருடைய கண்காட்சிகளை நாசப்படுத்தினர். அவர் மீது பல நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். இதனால் அவர் நாட்டைவிட்டு வெளியேறி கத்தாரிலும் , இங்கிலாந்திலும் மாறிமாறி வாழ்ந்து வருகிறார்.
கேரளாவை மையமாகக் கொண்டு செயல்படும் ‘கல்ப் மத்யமாம்’ இதழின் டோகா பதிப்புக்கு ஹுசேன் பேட்டியளித்தார். “நான் இந்தியாவை இன்னும் நேசிக்கிறேன். ஆனால்இ இந்தியா என்னை விரும்பவில்லை. வேதனை நிறைந்த மனதோடு இதை நான் கூறுகிறேன்” என்றுஅவர் பேட்டியில் கூறியுள்ளார். கத்தார் குடியுரிமையை ஏற்றுக் கொண்ட பின் ஹுசேன் அளிக்கும் முதல் பேட்டி இது.
சங்பரிவாரங்கள் என் னைத்தாக்கிய போது அனைவரும் மவுனம் காத்தார்கள். எனக்காகப் பேச யாரும் முன்வரவில்லை. இந்திய மக்களில் 90 சதவீதம் பேர் என்னை நேசிக்கிறார்கள் என்பதை அறிவேன். சில அரசியல்வாதிகள் உள்ளிட்ட 10 சதவீதம் பேர் என்னை வெறுக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இந்தியாவை ஆண்ட அரசுகள் என்னைக் காக்கவில்லை என்று அவர் கூறினார். நான் வெளிநாட்டில் தஞ்சம் கொண்டபோது யாரும் என்னை அழைக்கவில்லை. இப்போது ஒரு நாடு குடியுரிமை கொடுத்தவுடன் திரும்ப வருமாறு அழைக்கிறார்கள். என்னைப் பாதுகாக்க மறுத்த அரசியல் தலைமையை நான் எப்படி நம்புவது. இந்தியாவில் எனக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதம் உண்டா என்று அவர் கேள்வி எழுப்பினார்.