Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியா இலங்கையில் தமிழர்களை பகடைக்காய்களாக்க முயல்கிறது!:கணபதி கனகராஜ்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பதை இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வெளிநாட்டவரும் சொல்லித்தர வேண்டியதில்லை என்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.கினிகத்தேனை பிளக்வாட்டர் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் பேசுகையில்;

தற்போது நமது நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்தியத் தலைவர்களில் சிலர் நேரடியான தலையீட்டை மேற்கொள்கின்றனர். சுப்பிரமணியசுவாமி நேரடியாக தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க வேண்டுமென இலங்கைத் தமிழர்களுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். சுப்பிரமணியசுவாமி போன்றவர்களின் பேச்சைக் கேட்டு நடக்கும் அளவிற்கு இலங்கைத் தமிழர்கள் அரசியல் ஞானம் அற்றவர்கள் அல்ல.

கடந்த காலங்களில் சுப்பிரமணியசுவாமி இலங்கைத் தமிழர்களின் இரத்தத்தில் நீந்திக் குளித்து அரசியல் கொண்டாட்டம் போட்டவர். இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் மகிந்தவுக்கு வாக்களிக்க வேண்டுமெனத் தற்போது பயமுறுத்துகிறார். இந்தியா, இலங்கைக்கு கடந்த வருடம் செய்த மறக்க முடியாத உதவியினாலேயே தற்போது தமிழர்கள் சரத் பொன்சேகாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதைவிட இலங்கையின் அரசியல் மேடைகளில் இந்தியாவைப் பற்றியோ இந்திய தமிழ்நாட்டுத் தலைவர்கள் பற்றியோ விமர்சிக்கக் கூடாதென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியாவோ அந்த நாட்டு அரசாங்கக் கட்சித் தலைவர்களோ நடந்து முடிந்த மனித பேரவலத்திற்கு துணைபோகாமல் இருந்திருந்தால் அவர்களைப் பற்றி விமர்சிக்க வேண்டிய நிலை எமக்கு ஏற்பட்டிருக்காது.

கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கு இலங்கை அரசு உதவி செய்ததாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்திருக்கிறார். அந்த நன்றிக் கடனை மனதில் கொண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் பிரதியுபகாரம் செய்வதற்கு இலங்கைத் தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்த இந்தியா முயற்சிக்கின்றது. இந்தியா சொல்வதை செவிமடுக்க இலங்கைத் தமிழர்கள் தயாராக இல்லை என்ற செய்தியை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்குத் தெளிவாகச் சொல்லும். இன்று மக்கள் ஆதரவைப் பெற்ற சகல சிறுபான்மைக் கட்சிகளும் ஒரே அணியில் நின்று செயற்படுகின்றன. இந்த ஒற்றுமை சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதுடன், முடிந்துவிடக்கூடாது. எதிர்காலத்தில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக இந்த நாட்டு சிறுபான்மை மக்களின் உரிமைகளை வென்றெடுக்க சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ஒற்றுமை அத்தியாவசியமானதாகும்.

இந்த நாட்டின் தமிழ்,முஸ்லிம், மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை தமிழ்,முஸ்லிம் கட்சிகள் உள்வாங்கி ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.இதையே தமிழ் பேசும் மக்களும் எதிர்பார்க்கின்றனர். மலையகத்தில் தற்போது மிகப்பெரிய அரசியல் மாற்றம் தென்படத் தொடங்கிவிட்டது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதன் மூலம் மிகப்பெரிய சமூக பொருளாதார வாழ்வியல் மாற்றத்தை மலையகத்தில் ஏற்படுத்தியே ஆக வேண்டுமென்பதை, தெரிவு செய்யப்படவுள்ள ஜனாதிபதி சரத் பொன்சேகாவிற்கு மலையக மக்கள் தெளிவுபடுத்துவார்கள். மலையக மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்க வேண்டுமென்பதற்காக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி,ஐக்கிய தேசிய முன்னணியோடும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனும் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றது.இவற்றை எல்லாம் செயல் வடிவமாக்குவதற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி மலையக மக்கள் முழுமையாக சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Indian News | SriLankan Tamil News | Articles |

Back to top