Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவும் இலங்கையும் கடலின் கீழ் மின்சார கேபிள்களை அமைக்க திட்டம் .

 

இந்தியாவும் இலங்கையும் பரஸ்பரம் உறவுகளை மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்த முயற்சியில் இந்தியாவிலிருந்து மின்சாரம் பெறுவதற்கென ஆசியாவிலேயே புதிய முறையிலான கடலின் கீழ் கேபிள் தொடர்புகளை ஏற்படுத்தும் சாத்தியத்தை ஆராய்வதற்கென புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் இரண்டு அயல் நாடுகளும் விரைவில் கைச்சாத்திட இருக்கின்றன.

இதற்கான நகல் உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு விட்டது என்றும் விரைவில் அது கைச்சாத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தெற்காசிய மின்சார வலையமைப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கான யோசனையை ஊக்குவிக்கும் ஈரிடை திட்டமொன்றை இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையே ஏற்படுத்திக் கொள்வது பற்றியும் சார்க் நாடுகளுக்கிடையே ஆராயப்பட்டு வருகிறது.

இந்தியா ஏற்கனவே பூட்டானுடன் ஹெவி டியூட்டி மின்சார தொடர்பை கொண்டிருப்பதால் இதனுடன் பாகிஸ்தானையும் பங்களாதேஷையும் இணைப்பது சிரமமாக இருக்காது என்றும் நம்பப்படுகிறது. தெற்காசிய வலையமைப்பு தொடர்பான ஆய்வு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது இருப்பது போன்று இரு நாடுகளின் பிரதேசங்களிலும் மின் ஆற்றல் வீழ்ச்சி அடையும் போது இரண்டு நாடுகளிலும் உச்சநேர கிராக்கியை சமாளிப்பதற்கு கடலின் கீழான கேபிள் திட்டம் உதவும்.

இலங்கை அதிக செலவிலான எரிபொருள் பாவனையை தவிர்ப்பதற்கும் இந்தியாவின் மேலதிக இருப்பிலிருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கும் இக்கேபிள் திட்டம் உதவியாக இருக்கும். இந்தியாவை பொறுத்தமட்டில் அந்நாடு எதிர்பார்க்கும் மேலதிக உற்பத்திக்கு இத்திட்டம் புதிய சந்தை வாய்ப்பை கொண்டு வரும்.

இந்தியாவின் உப இணைப்பு அமுலாக்கல் முகவர் நிலையமான அரச மின்மாற்றுப் பாவனை தொடர்பான மின் வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட பூர்வாங்க அறிக்கையின்படி முதலீட்டு அங்கீகாரம் கிடைத்து 42 மாதங்களுக்குள் பூர்த்தி செய்யக் கூடிய இத்திட்டத்திற்காக 2292 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையிலான மின் விநியோக ஆற்றலின்படி குறுகிய காலத்தில் சுமார் 500 மெகவாட் மின்சாரத்தை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும் என்று அறிக்கை கூறுகிறது.

Exit mobile version