Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவுடனான ஒப்பந்தத்துக்கு பங்களாதேஷ் தேசிய கட்சி கடும் எதிர்ப்பு

இந்தியாவுடனான ஒப்பந்தத்துக்கு வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா- வங்கதேசம் இடையே வங்கிக் கடன் ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது. அதன்படி, இந்திய அரசின் எக்ஸிம் வங்கி, வங்கதேசத்தின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக |5,000 கோடி கடனுதவி அளிக்கிறது.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஜனவரியில் தில்லி வந்தபோது இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒருநாள் பயணமாக வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சனிக்கிழமை சென்றார். அவரது முன்னிலையில் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

வெளிநாடுகளில் இருந்து வங்கதேசம் பெறும் அதிகபட்ச கடன்தொகை இதுதான். இந்த நிதியின் மூலம் ரயில், சாலை போக்குவரத்து, தகவல் தொடர்பு மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால், இந்த கடன் ஒப்பந்தத்தை வங்கதேசத்தின் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசிய கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

பன்னாட்டு வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டியை விட 7 மடங்கு அதிகமாக இந்திய வங்கி வட்டியை நிர்ணயித்துள்ளது.

இதனால், வங்கதேசத்துக்கு பெரும் இழப்பு நேரிடும். இந்த ஒப்பந்தம் வங்கதேசத்தின் நலனுக்கு உகந்தது அல்ல என்று அந்த கட்சியின் நிலைக்குழு உறுப்பினர் எம்.கே.அன்வர் எம்.பி. டாக்காவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறினார்.

கட்சியின் தலைவர் காலிதா ஜியா முன்னர் வெளியிட்ட கருத்தில், வங்கிக் கடன் ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேசத்தை இந்தியாவுக்கு விற்று விட்டதாக குற்றஞ் சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை பிரதமர் ஷேக் ஹசீனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அரசியல் நடத்த வேறு எதுவும் இல்லாத நிலையில் இந்தியாவுடனான வங்கிக் கடன் ஒப்பந்தத்தை கலிதா ஜியா கையில் எடுத்துள்ளார். இந்தியா மீது வேண்டுமென்றே அவதூறு கூறுவது சிலரின் வாடிக்கை. அதை ஆளும்கட்சி பொருட்படுத்தாது.

வங்கதேசத்தின் வறுமையை ஒழிக்க இந்தியாவுடன் இணைந்து உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா உறுதிபட தெரிவித்துள்ளார்..

Exit mobile version