ஆணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடான இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா அணு சக்திக்கு ஆதாரமான யுரேனியத்தை தர மறுத்துள்ளது. இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய
துணைப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவின் எரிசக்தி தேவையை ஆஸ்திரேலியா உணர்ந்துள்ளது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடுகளுக்கு யுரேனியம் வழங்குவதில்லை என்பதில் ஆஸ்திரேலியா உறுதியாக உள்ளது. இந்தக் கொள்கையை ஆஸ்திரேலியா நீண்ட காலமாகவே கடைப்பிடித்து வருகிறது. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததால், அதற்கு யுரேனியத்தை வழங்க இயலாது. ஆஸ்திரேலியாவின் இந்தக் கொள்கை இந்தியாவுக்காக வகுக்கப்பட்டதல்ல. அனைத்து நாடுகளுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான கொள்கை இது. எனினும், எரிசக்தி, பாதுகாப்பு விஷயத்தில் இந்தியா– ஆஸ்திரேலியா இடையே வலுவான ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் நிலக்கரி வளம் மிகுதியாக உள்ளது. இதேபோல, திரவ இயற்கை எரிவாயு வளமும் அபரிதமாக உள்ளது. முக்கியத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். அடுத்த சில மாதங்களில் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூத் இந்தியாவுக்கு வரும்போது இதில் முன்னேற்றம் ஏற்படும். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளைத் தொடர முடியாமல் போனதற்கு, இதுவிஷயத்தில் தொடர்புடைய எந்த நாடும் ஆர்வம் காட்டாததே இதற்குக் காரணமாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பாதுகாப்பு விஷயங்களில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே அதிக ஒத்துழைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. இதேபோல, வர்த்தகம், கல்வி, பருவநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கான தொழில்நுட்பம், ஆராய்ச்சித் திட்டங்களில் இரு நாடுகளுக்கு இடைய ஒத்துழைப்பு வலுப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையில் இரு நாடுகளும் ஆண்டுக்கு ஒரு முறை கூடி விவாதிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்