13.03.2009.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்திலும், அயலுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் 9 கட்சிகளை அங்கமாகக் கொண்டு மூன்றாவது அணி உதயமானது.
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் இருந்து 45 கி.மீ. தூரத்திலுள்ள டோபஸ்பேட் என்ற இடத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் மூன்றாவது அணியின் துவக்கம் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் தேவே கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் ஏற்பாடு செய்திருந்த இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், அஇஅதிமுக, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கு தேசம், ஜான்கித் காங்கிரஸ் கட்சி, தேச சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவரும் பாஜக, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய உந்துதலை அளிக்கப்போவதாகப் பேசியே கால விரயம் செய்துவிட்டன என்றும், அவர்கள் கடைபிடித்த கொள்கையால் ஏழை மக்கள் எந்த விதத்திலும் பயன்பெறவில்லையென்றும் குற்றம் சாற்றினர்.
மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்தால் சமூக நீதிக் கண்ணோட்டத்துடன் இந்தியாவின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றத்தை செய்யும் என்றும், அயலுறவுக் கொள்கையில் மாற்றம் செய்யப்படும் என்றும் கூறினர்.
மூன்றாவது அணியால் மட்டுமே உண்மையான மாற்று அணியை வழங்க முடியும் என்றும், அதுவே நமது நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் கூறினார்.
மூன்றாவது அணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உ.பி. முதல்வருமான மாயாவதியும். அஇஅதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவும் கலந்து கொள்ளவில்லை.