Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் புல்லட் ரயில் சாத்தியமா? : பிரான்ஸ்-இத்தாலி ஆய்வு!

இந்தியாவில் 350 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய புல்லட் ரயில் திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியம் தானா என்று தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது.

இந்திய ரயில்வே பல்வேறு வகையில் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. பயண நேரத்தை குறைக்க அதிக வேக ரயில்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இதன் அடுத்த கட்டமாக, புல்லட் ரயில் திட்டத்தை அமுல்படுத்த ரயில்வே தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த ரயில்கள் 350 கி.மீ. அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் செல்லக் கூடியவை. ஆனால், இதற்குத் தனி பாதை தேவை. குறுக்கீடுகள் இருக்கக் கூடாது. இதற்கு பாதை அமைக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூ. 100 முதல் ரூ.130 கோடி வரை செலவாகும்.

முதல் கட்டமாக, புனே – மும்பை -அகமதாபாத் பிரிவில் 533 கி.மீ. தூரத்துக்கு இந்த திட்டத்தை அமுல்படுத்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பிரான்சை சேர்ந்த ‘சிஸ்ட்ரா’, இத்தாலியை சேர்ந்த ‘டால்பெர்’ நிறுவனங்கள் மூலம் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் அறிக்கை அடுத்த மாதம் சமர்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புல்லட் ரயில் திட்டத்தை அமுல்படுத்தலாமா? வேண்டாமா என்பது பற்றி இந்த அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புல்லட் ரயில் பாதையை அமைப்பதற்கான செலவு, இதில் பயணம் செய்யக் கூடிய பயணிகளின் எண்ணிக்கை, கட்டண விகிதம் மற்றும் லாபம் ஆகியவை இந்த ஆய்வின் முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த ரயில் சேவைக்கு குறுக்கீடுகள் இல்லாத வகையில் சுரங்க ரயில் பாதை அமைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. இந்த ஆய்வுக்கு மட்டும் ரூ.15 கோடி செலவிடப்படுகிறது.

சமீபத்தில் இந்தியாவுக்கு பயணம் வந்த ஜப்பான் பிரதமர் மாதோ யமா, இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துவதற்கு தனது நாடு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Exit mobile version