Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒடுக்க 2 அம்ச திட்டம்: ப. சிதம்பரம்

 

  புதுதில்லி, ஆக. 17: நக்சலைட்டுகளை ஒடுக்க 2 அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் திங்கள்கிழமை வெளியிட்டார்.  உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில முதல்வர்கள் மாநாட்டில் பேசும்போது அவர், நக்சலைட்டுகளை ஒழிப்பதற்கான யோசனைகளை முன்வைத்தார்.   இரண்டு அம்ச திட்டத்தின்படி, மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்பது முதல் அம்சம். அங்கு வளர்ச்சிப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்துவது இரண்டாவது அம்சம் என்றார் அவர்.

   கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பின் பயங்கரவாதிகள் தாக்குதல் பெரிய அளவில் நடைபெறவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகளிடமிருந்து ஆபத்து குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல. திறமையான உளவு அமைப்பு, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலை ஆகியவை பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க உதவியாக அமையும். பயங்கரவாதிகளின் தாக்குதல் திட்டம் பலவற்றை நாம் முறியடித்திருக்கிறோம். பலரை கைது செய்திருக்கிறோம் என்றார் அவர்.

 மாநில அளவில் படை: மத்தியில் இருப்பது போன்று மாநில அளவில் தொழில் பாதுகாப்புப் படையை அமைக்க மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  ஆனால் உள்நாட்டுப் பாதுகாப்பு விஷயத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது மத்திய அரசின் அரசியல் சட்ட கடமை என்ற எண்ணம் பொதுவாக மேலோங்கி உள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

 நக்சல்களுடன் பேச அனுமதி: தனிப்பட்ட முறையிலோ அல்லது அமைப்பு ரீதியிலோ நக்சல்களுடன் பேச்சு நடத்த மாநில அரசுகள் முன்வருவது வரவேற்கத்தக்கது.

  ஆனால் ஆயுதப் போராட்டம் என்ற அவர்களது தவறான கொள்கையை கைவிடவேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும்.

   1.50 லட்சம் போலீஸôர் நியமனம்: 2008 ஜனவரி 1-ம் தேதி நிலவரத்தின்படி காவல்துறையில் எல்லா நிலைகளிலும் 2.30 லட்சம் காலி இடங்கள் இருந்தன. தற்போது இது குறைந்திருந்தாலும் சுமார் 1.50 லட்சம் காலி இடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

  காவல் துறையில் காலி இடங்களை 2010 மார்ச் 31-க்குள் நிரப்ப மாநில அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

  இதுவரை காவல்துறை நிர்வாக வாரியம் அமைக்காத மாநிலங்கள், உடனடியாக அத்தகைய வாரியத்தை அமைக்க வேண்டும் என்றார் சிதம்பரம்.

 

 

Exit mobile version