Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் கேள்விக்குறியாகும் ஒருபால் உறவுக்கான அங்கீகாரம்.

 

இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமானது என்று கூறும் இந்திய அரசியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவை திருத்த வேண்டும் என்கிற கோரிக்கை குறித்து நாடுதழுவிய விவாதம் நடத்திய பிறகே இந்திய நடுவணரசு இறுதி முடிவெடுக்கும் என்று இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து, நாடு தழுவிய அளவில் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும், இந்திய நாடாளுமன்றத்திலும் இது குறித்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இவரது இந்த நிலைப்பாடு, இவருக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் எடுத்திருந்த நிலையிலிருந்து மாறுபட்ட நிலைப்பாடாக இருக்கிறது.

இந்தியாவில் ஒருபால் உறவை சட்டவிரோதமாக வைத்திருப்பதானது ஒருபால் உறவுக்காரர்கள் மத்தியில் எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மிகப்பெரிய தடையாக இருப்பதால், இந்த சட்டப்பிரிவு திருத்தப்படவேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிவந்தார்.

இதற்கு ஆதரவாக இந்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் அவர் நடுவணரசுக்கு தொடர்ந்து அழுத்தமும் கொடுத்து வந்தார்.

இந்த பின்னணியில் குலாம் நபி ஆசாத்தின் தற்போதைய அறிவிப்பு ஒரு பால் உறவுக்காரர்கள் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பில் ஈடுபட்டுவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Exit mobile version