Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவில் இலங்கை அகதிகள்: ருக்கி பெர்னாண்டோ.

29.10.2008.
தமது உயிர்களுக்குண்டான அச்சம் காரணமாக இலங்கையை விட்டு, இந்தியாவிற்கு ஓடி, அங்கு அகதிமுகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இலங்கையர்களைச் சந்திப்பதற்காகச்சென்ற நான், அங்கு நடப்பவைகளையும் அங்குள்ள உணர்வுகளையும் கண்டும் கேட்டும் உணர்ந்தும் பின்னர் அவைகளிலிருந்து என்னவிதமானதொரு அறிவுணர்வைப்பெறுவதென யோசித்துக்கொண்டு, சென்னை விமான நிலையத்தில் உட்கார்ந்துகொண்டிருந்தபோது, அகதிகளுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ‘உதிர்ந்த இலைகள்’ எனும் ஜோன் டென்வரின் உணர்ச்சிபூர்வமான பாடல்தான் எனக்கு ஞாபகம் வந்தது. அப்பாடலில் வரும் ஒரு வரி மட்டும் மீண்டும் மீண்டும் என் நினைவில் வந்ததால், இக்கட்டுரையைப் பிரதிபலிப்பதற்காக அதையே தலைப்பாக இட்டிருக்கிறேன்.

இரவிரவாக ஒரு பேரூந்தில் பிரயாணம் செய்து, விமான நிலையத்தை அடைந்தபின்னர் நானும் ஒரு அகதிபோலவே உணர்ந்தேன். இரவுப் புகையிரதத்தில் பயணஞ்செய்து, பின்னர், 26 குடும்பங்களைத் தற்போது அடக்கியிருக்கும் ஒரு பண்டகசாலையில் நாள் முழுக்கக் கழித்துவிட்டு, இடையிடையே வேறு பல புகையிரதங்கள், பேரூந்துகள் மற்றும் முச்சக்கரவண்டிப் பயணங்களையும் மேற்கொண்டுவிட்டுத் திரும்பவும் இரவுப்பேரூந்தைப் பிடித்து, விமானநிலையத்திற்கு வருவதென்பது சுலபமான பயணமல்ல.

ஆனால், நான் சந்தித்த மக்கள், சனநெருக்கமான கட்டுமரங்களில் பெருஞ்சிரமங்களுக்கு மத்தியில் செய்த கடுமையான பிரயாணங்களுடன் ஒப்பிடும்போது, எனது பிரயாணம் கடினமானதல்லவென்றே நினைக்கின்றேன். எனது பயணமானது சென்னையில் ஒரு மாநாட்டிற்குச் சமூகமளிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அதேநேரம், அவர்களது பயணமோ, இலங்கையில் இருக்கமுடியாமல் இந்தியாவிற்குத் தப்பிச்சென்ற மரணத்திற்கும் உயிருக்குமான போராட்டமாகும்.

சிலர், 10,000 ரூபாய்கள் வரையில் கொடுத்து, 10 இலிருந்து 40 பேர் வரையில் ஏற்றும் பாவனைக்குதவாத படகுகளில் பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். தமது 3 குழந்தைகளும் பிரயாணத்தின்போது வாந்தியெடுத்து மயங்கிவிழுந்ததாக ஒரு தாய் என்னிடம் கூறினார். முரட்டுத்தனமான கடல் அலைகளை மட்டுமல்லாமல், குண்டுமழைபொழியும் இலங்கைக் கடற்படையினரையும் இவர்கள் துணிந்து எதிர்கொள்கிறார்கள். அத்துடன், கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடக்கும் கடற்சமரையும் இவர்கள் தாண்டிச்செல்லவேண்டியிருக்கிறது. கடந்த வருடம் மன்னார் கடற்பரப்பில் பல மக்கள் கொல்லப்பட்டது எனது நினைவிற்கு வருகிறது. அதுமாதிரியான பல சம்பவங்கள் நிகழ்ந்தபோதும், அதுவொன்றையே ஊடகங்கள் வெளிப்படுத்தின என, என்னுடனிருந்த ஒரு பாதிரியார் நினைவுபடுத்தினார். மன்னார் தீவிலிருந்து மக்கள் வெளியேறும் இடங்களாவன, பொதுவாக, பேசாலையும் தலைமன்னாருமே.

சில வருடங்களுக்கு முன்னர், இதேமாதிரியான பயங்கரமான கடற்பயணங்களை 2000 ரூபாய்கள் வரை கொடுத்து, மக்கள் பண்டங்களை வாங்குவதற்காக மேற்கொண்டிருக்கின்றனர். அது சட்டவிரோதமாக இருந்தபோதும்கூட, மன்னாரிலிருந்து கொழும்பிற்கு வந்துபோகும் வழக்கமான பிரயாணம் போலவே அதுவும் வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு நிகழ்வாகவிருந்தது. பல தசாப்தங்களுக்கு முன்னர் வழமையான படகுச் சேவைகள் இருந்த நேரம், இலங்கையின் எல்லாப் பாகங்களிலிருந்தும் மக்கள் இந்தியாவிற்குச் சென்று வந்த கதைகளை எனது தாயாரும் வேறு பலரும் என்னிடம் சொல்லியிருந்தனர்.

இந்தியாவிற்கு வருகை

இந்தியாவிற்குப் படகுகளில் தப்பிவரும் மக்களைச் சந்திக்கும் இந்திய அதிகாரிகள் அவர்களிடம், விடுதலைப்புலிகள் அல்லது ஏனைய ஆயுதக்குழுக்களின் தொடர்புகள் உள்ளதா எனக் குறிப்பாக விசாரிக்கின்றனர். வழமையாக அவர்கள், ‘மண்டபம்’ என்ற இடைக்கால முகாமில் சில நாட்கள் தங்க நிர்ப்பந்திக்கப்படுவர். அங்கு தங்கியிருக்கும் நாட்கள் வித்தியாசப்பட்டாலும், ஒருவர் என்னிடம் பேசும்போது, தாம் 26 நாட்கள் அங்கு காத்திருந்ததாகக் குறிப்பிட்டார். சிலர் குறுகிய காலப்பகுதிவரையே தங்கியதாகச் சொன்னார்கள். பின்னர் அவர்கள் எல்லோரும் நிரந்தரமான முகாம்களுக்கு அனுப்பப்படுவர். சில இந்திய அதிகாரிகள் அவரவர்களுக்கு விருப்பமான முகாம்களுக்குப் போகவும் சந்தர்ப்பமளிக்கப்படுவதாக நான் கேள்விப்பட்டேன்.

தமது கண்காணிப்பில் பரவியிருந்த மக்கள் குழுவைச் சந்திப்பதற்காக ஆர்வத்துடனிருந்த இரு கத்தோலிக்கப் பாதிரிமாரையும், அகதிகளுக்கு உதவும் தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனத்தின் இரு ஊழியர்களையும் நான் சந்தித்தேன். பல இளைஞர்கள், பெண்கள், ஆண்களுடன் நாம் பேச்சுக்கொடுத்தோம். நாம் அங்கு தங்கியிருந்த குறுகிய காலத்தில், வீறிட்டழும் குழந்தைகளினதும் கீச்சிடும் சிறுவர்களினதும் குரல்கள் காற்றை நிறைத்தன. தாம் அங்கு தங்கியிருந்த ஒன்றரை வருடகாலத்தில், 5 குழந்தைகள் அச்சமூகத்தில் பிறந்ததாகச் சொன்னார்கள்.

நான் சென்ற முகாமானது பல சிறிய முகாம்களில் ஒன்றெனவும், அதில் அப்போது 26 குடும்பங்கள் வசித்ததாகவும், தர்மபுரி பகுதியிலும் தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் 12 வேறு பெரிய முகாம்கள் இருப்பதாகவும் என்னிடம் கூறப்பட்டது. இவ்வாரம் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையின்படி; தமிழ்நாட்டில் 97,000க்கும் அதிகமான இலங்கை அகதிகள் 117 முகாம்களிலும் மற்றும் 60,000 பேர் முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கின்றனர். இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களின்படி; குறிப்பாக வன்முறைகளின் பின்னர் இந்தியாவிற்குத் தப்பியவர்களில், 2007 ஜனவரிக்கும் பெப்ரவரிக்குமிடையிலான ஆறு வாரகாலப்பகுதியில் 16,000 அகதிகளும் மற்றும் 2006 ஓகஸ்டில் 6000 அகதிகளும் வருகை தந்துள்ளனர்.

இம்முகாம்களுக்கு யார் யார் வருகை தருகிறார்கள் என்பதை இந்திய அதிகாரிகள் கண்காணிப்பதாகச் சில தன்னார்வத்தொண்டர்கள் என்னிடம் கூறியதுடன், சென்னையிலுள்ள எனது சில நண்பர்கள் நான் பின்தொடரப்படக்கூடும் எனவும் எச்சரித்தனர். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் பின்தொடரப்பட்டால் அதை உடனடியாக நாம் உணர்வதுபோல, இங்கு எந்தவிதமான இடைஞ்சல்களோ இரகசியப் பொலிசாரின் பின்தொடரல்களோ எனக்கு நிகழவில்லை.

பயத்தினாலும் பாதுகாப்பின்மையாலும் தப்பியோடுதல்

கடந்த டிசம்பர் மாதத்தில் கூட நான் மிகவும் திறமான கடலுணவுண்டு அனுபவித்த பேசாலை நகரத்திலிருந்து தப்பியோடிய சிலருடன் நான் பேசினேன். கடற்படையினர், வீடுகளையும் படகுகளையும் எரித்தபடியும் மீனவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகஞ்செய்தபடியும் தம்மைப்பின்தொடர்ந்து வருவதாகக் கேள்விப்பட்டுத் தேவாலயத்திற்கோடித் தஞ்சமடைந்ததாக ஒரு பெண் விவரித்தார். “நாம் பாதுகாப்பாக இருப்போமென்று தேவாலயத்திற்கு ஓடினோம், ஆனால் நாம் அங்கு உள்ளே இருந்தபோதே இராணுவத்தினர் கிரனேட்களை உள்ளே வீசினர். அப்போது, ஒரு பெண் கொல்லப்பட்டதுடன் 50 பேரளவில் காயமடைந்தனர்” என அப்பெண் நினைவு கூர்ந்தார். “தேவாலயத்திலும் கூட கடற்படையினர் தாக்குதல் நடத்தினால் நாமும் எமது குழந்தைகளும் போவதற்கு வேறு இடமேதுமில்லை என்பதால் தான் இங்குவந்தோம்” என இன்னொரு பெண் சொன்னார்.

பேசாலைக்கருகேயுள்ள வங்காலை என்னும் நகரத்தில் ஒரு முழுக்குடும்பமும் கொல்லப்பட்டதைப்பற்றி இன்னொருபெண் நினைவுகூர்ந்தார். அந்தச் சம்பவத்திற்கும் பேசாலை தேவாலயச் சம்பவத்திற்கும் பின்னர்தான், தமது குழந்தைகளின் உயிர்களுக்குப் பாதுகாப்பில்லை என்றுணர்ந்து தாம் வெளியேறத் தீர்மானித்ததாக அப்பெண் கூறினார்.

இம்முகாமிலிருக்கும் பலரும் போரின் காரணமாகப் பலமாகப் பாதிப்படைந்துள்ளனர். இங்கிருக்கும் ஒருதாயின் ஒரேமகன் பல வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டார். இன்னொரு பெண்ணின் கணவர் மீன்பிடித்துத் திரும்பிக்கொண்டிருக்கும்போது கையில் சுடப்பட்டுக் கடுங்காயத்திற்குள்ளானார். இவர் உயிர்தப்பியபோதும், கடற்படையினர் அவரை விசாரணைக்கு அழைத்ததால், பயந்து குடும்பத்துடன் வெளியேறிவிட்டனர்.

தன்னிரு மகன்களில் ஒருவர் விடுதலைப்புலிகளால் ஆட்சேர்க்கப்பட்டு விட்டதால் அவர்களை விட்டு விட்டுத் தாம் வந்துவிட்டதாக ஒரு தந்தையார் சொன்னார். விடுதலைப்புலிகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதைத் தாம் பார்க்கவில்லையெனவும் ஆனால், அதைப்பற்றிக் கேள்விப்பட்டதாகவும் ஒரு பெண் கூறினார். “யாரை நாம் நம்புவது? எமக்காகப் புலிகள் போராடுவதாக நாம் நினைத்தோம் ஆனால், இப்போது அதுபற்றித் திட்டமாகக் கூறமுடியாமலிருக்கிறது” என்று இன்னொருவர் கூறினார்.

கடற்பிரயாணத்தில் தமது குழந்தைகள் வாந்தியெடுத்து மயங்கியதாகக் கூறிய பெண், இந்தியாவிற்கு வருவதற்கு முன்னர், தினமும் நடக்கும் வெடிச்சத்தங்கள் ஒவ்வொரு தடவையும் கேட்டபோதும் தாம் தமது குழந்தைகளை எண்ணிப் பயந்ததாகத் தெரிவித்தார். “சிலசமயம் நான் அவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்திற்குப் போய் அவர்களுக்கு ஒன்றுமில்லையே என உறுதிப்படுத்துவேன்” என்றார் அத்தாய்.

விரைவில் நிகழக்கூடிய மோதல்களிலிருந்து தமது குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்றுவதற்காகச் சிலர் முருங்கனிலிருந்தும் இந்தியாவிற்கு வந்துள்ளனர். “இராணுவமும் விடுதலைப்புலிகளும் மோதும்போது, இடையில் அகப்பட்டு அப்பாவி மக்களான நாம்தான் பாதிக்கப்படுவோம், அதனால் நாம் இம்மோதல்கள் நிறுத்தப்படும் வரையில் தப்பிச்செல்வதென்று தீர்மானித்தோம்” என 3வயதுக் குழந்தையையுடைய ஒரு இளைஞர் கூறினார்.

போர் ஓய்ந்திருந்தபோது வீடுகளுக்குத் திரும்பினாலும் மீண்டும் தப்பிவரவேண்டிய கட்டாயம்

இந்தியாவில் அகதிகளாக முன்னரும் பலர் இருந்திருக்கிறார்கள். “1990களில் எனது குடும்பம் 4 வருடங்களாக இங்கிருந்தது. ஆனால் இங்கு வாழ்வது கடினமானதால், நிலைமைகள் அங்கு சீரடைந்திருக்குமென்றெண்ணி நாம் திரும்பிச்சென்றோம். ஆனாலும் மோதல்கள் மீண்டும் ஆரம்பமானதால் நாம் இங்கு மீண்டும் வரவேண்டியதாகிவிட்டபோதிலும் இங்கும் நாம் துன்பப்படுகிறோம்” எனத் தமது அனுபவங்களை வெளியிட்டார் ஒருவர்.

முருங்கனிலிருந்து தப்பிவந்தோரில் ஒருவர் இந்தியாவிற்கு 3ஆவது முறையாக அகதியாக வந்துள்ளார். “நிலைமைகள் சீரடைந்தது போலத் தெரிந்தபோது இரு தடவைகள் நான் திரும்பிச்சென்றேன். ஆனால் இருதடவைகளும் நான் மீண்டும் ஓட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இனிமேல் நான் திரும்புவேனோ தெரியாது. சில காலத்திற்குப் பின்னர் என்ன நடக்குமென்பதை, சமாதானம் வருமா என்பதைக்கூட யாரால் சொல்லமுடியும்?” என்று கேட்ட இவருக்கு நான், நம்பிக்கையைத் தளரவிடாதீர்கள் என்று சொல்லிச் சமாளிப்பதைத் தவிர எந்தப் பதிலையும் என்னால் சொல்லமுடியவில்லை.

அகதியாக வாழ்தல்

இலங்கையில் தான் ஒருநாளைக்கு 2000 இலிருந்து 3000 ரூபாய்கள் வரை சம்பாதித்ததாகச் சொல்லும் ஒரு மீனவர், தற்போது நிரந்தரமில்லாத நாட்கூலி வேலைகளைச் செய்யவேண்டியிருப்பதாகக் கூறினார். இம்முகாம்களில் வேலை செய்வது சட்ட ரீதியாக தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்டதா என்பது தெளிவாக இல்லாதபோதும், அதுபற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளப்படவில்லையென்றே தோன்றுகிறது.

அவர்கள் வேலை செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில், நிச்சயமாக இக்குடும்பங்கள் உயிர்வாழ முடியாது. பங்கீட்டு அடிப்படையில் 12 கிலோ அரிசியும், பெரியவர்களுக்கு 1000 (இலங்கை)ரூபாய்கள் உதவிப்பணமும், சிறுவர்களுக்கு, அவர்களின் வயதுக்கேற்றபடி தலா 250 ரூபாய்களும் கொடுக்கப்படுகிறது. காய்கறிகளோ மீன், இறைச்சியோ அவ்வக் குடும்பங்கள் தான் வாங்கிக்கொள்ளவேண்டும். சிறுவர் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுவதுடன் தன்னார்வத் தொண்டர்களினால் மாலை நேர வகுப்புகளும் மேலதிகமாக நடத்தப்படுகின்றன. இத்தன்னார்வத் தொண்டர்களின் அனுசரணையுடன், இலங்கையின் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளையும் இங்கு நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் பற்றியும் நான் கேள்விப்பட்டேன். அம்முகாமிலிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள் என்பதால், அருகிலுள்ள தேவாலய மதகுருவினது உதவியும் தங்களுக்குக் கிடைப்பதாகச் சிலர் குறிப்பிட்டனர். நாம் அங்கிருந்தபோது, அங்கு தினசரி வருகை தரும் ஒரு அருட்சகோதரியைச் சந்தித்தோம். அவர் அங்குமட்டுமல்லாமல், தர்மபுரிப் பகுதியிலுள்ள மேலும் 12 முகாம்களுக்கும் தவறாமல் செல்கின்றார்.

கையில் எதுவுமற்ற நிலையில்தான் பெரும்பான்மையான மக்கள் இங்கு வருவதால், அவர்களுக்குரிய சில சமையல் பாத்திரங்கள் வெவ்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களாலும் தேவாலயக் குழுக்களாலும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் பெரிய மண்டபத்திலுள்ள குடும்பங்கள் தத்தமக்கென “அறைகளை” பிரித்துக்கொள்வதற்காக கன்வாஸ் துணிகள் வழங்கப்பட்டுள்ளன.

திரும்பிச்செல்ல அவசரம்…….. ஆனாலும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உணர்ந்தபின்னர் தான்

அநேகமாக நான் பேச்சுக்கொடுத்த அனைவருமே இலங்கைக்குத் திரும்பிச்செல்ல மிகுந்த அவாவுடன் இருக்கிறார்கள். சிலர் இவ்வருடமே தாம் திரும்பும் நம்பிக்கையிருப்பதாகக்கூடச் சொன்னார்கள். “எமது நாடு போல வராது. எனவே நாம் திரும்பிச் செல்லவே விரும்புகிறோம். ஆனாலும் மோதல்கள் இனித்தொடராதென்றும் எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் கொடுத்தபின்னர் தான் திரும்புவோம்” என ஒரு பெண் மிகவும் சரளமான சிங்களத்தில் என்னிடம் கூறினார். வானொலிச் செய்திகளைத் தொடர்ந்து கேட்டுவரும் அப்பெண், நான் கொழும்பில் கல்கிசையில் வசிப்பதாகச் சொன்னதும், நான் இந்தியாவிலிருந்தபோது, கல்கிசையில் நடந்த பேரூந்துக் குண்டுவெடிப்பில் பலர் காயம்பட்டதைப் பற்றிக் கூறினார்.
முடிந்தவரையில் விரைவாக நாடு திரும்ப விரும்பும் இன்னொரு பெண், “நாம் என்னதான் கஷ்டங்களை இங்கு அனுபவித்தாலும், குண்டுகள் பற்றிய பயமின்றி நிம்மதியாகத் தூங்குகிறோம்” என்றார்.

‘பயங்களெல்லாவற்றையும் கடந்த சமாதான’த்துக்கான நம்பிக்கை

முகாம்களில் வசித்த மக்கள் எல்லோரும் மிக மகிழ்வுடன் எம்மை வரவேற்றுத் தாம் தூங்குவதற்கு உபயோகிக்கும் பாய்களை நாம் இருப்பதற்கென விரித்து உபசரித்தனர். அக்கட்டடம் மிகவும் வெப்பமாக இருந்தபோதும், அம்மக்களின் அன்பான உபசரணை எம்மைக் குளிர்வித்தது. எமது வருகையின்போது கேக், பழங்கள் மற்றும் தேனீர் என்பன வழங்கப்பட்டன. கொஞ்சம் சிங்களம் பேசத்தெரிந்த ஒரு வயதான பெண், அடிக்கடி எம்மைச் சாப்பிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார். இறுதியாக இலங்கை முறைப்படி திறமையான ஒரு மதிய உணவு எமக்குப் பரிமாறப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்படும் அரிசியை விட, எமக்குப் பரிமாறப்பட்ட சோற்றின் அரிசி நன்றாகவிருந்ததால், அது வெளியிலிருந்து வாங்கப்பட்டதாக இருக்கலாமென அங்கு வேலை பார்க்கும் அருட்சகோதரியொருவர் சொன்னார்.

நான் அங்கு சந்தித்த மக்கள் பலரின் இடமான பேசாலை, முருங்கன் உள்ளிட்ட மன்னார் பகுதியிலுள்ளோரின் விருந்தோம்பலை நான் என்றுமே அனுபவித்திருக்கிறேன். அகதிகளாக, நம்பிக்கையற்ற சூழ்நிலையிலிருந்தும் கூட, அவர்களது விருந்தோம்பலையும் ஆழமான நட்புணர்வையும் நான் மிகவும் அனுபவித்தேன்.

இம்மக்களின் முகங்களையும் அவர்களது கதைகளையும் நான் நினைவுகூரும்போது, ஜோன் டென்வரது பாடலில் வரும் வார்த்தைகளான, “அவர்கள் யாரோ ஒரு தாயினது குழந்தைகளில்லையா….. அல்லது அவர்கள் வெறுமனே தம்மைத் தாமே கொடுக்கும், தூசியிலிருந்து தூசிக்கும், விதையிலிருந்து பிரிக்கப்படும் உதிரும் இலைகளா” என்பவை ஞாபகத்திற்கு வருகிறது.
நடந்தவைகளை நினைத்தும் எதிர்காலத்தையெண்ணியும் பார்க்கும்போது, தனது பாடலை ஜோன் டென்வர் முடித்ததுபோல, எனது நாட்டில் “பயங்களெல்லாவற்றையும் கடந்த சமாதானம்” வரவேண்டுமென நான் நம்புகிறேன். அப்போது, நான் இம்மக்களின் விருந்தோம்பலை அவர்களது வீட்டிலேயே நல்ல சூழ்நிலைகளில் அனுபவிப்பேன்.

நன்றி: கிறவுண்ட் வியூஸ்

Exit mobile version