Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் யோசனைப்படி செயலாற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

ஜனாதிபதிக்கும் த.தே.கூட்டமைப்பினருக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுக்களின் போது அரசியல் தீர்வு விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றில் இணைந்து செயற்படுவது தொடர்பில் இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இதன் பின்பே அரசாங்கம் வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நலன்புரி செயற்பாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவினை தாம் வழங்குவதாக கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர்.

இவ்விணக்கப்பாட்டின் பிரகாரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணிப்பதற்கு த.தே.கூட்டமைப்பினர் சார்பில் ஏழு பேர் கொண்ட குழுவினைத் தெரிவு செய்து அவர்களின் விபரங்களை ஜனாபதி செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இக்குழுவில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.சுமந்திரன், இனப்பரிச்சினை தொடர்பாகவும் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கத்திடம் கூட்டமைப்பு பேச்சு நடாத்த வேண்டும் என்பது இந்தியாவின் யோசனையாக இருக்கின்றது. அதற்கு அரசாங்கமும் சமிக்ஞை காட்டியுள்ளது. நாம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்துவதற்குத் தயாராகவே இருக்கின்றோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் அரசியல் பணியாற்றுவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனக் கூட்டமைப்பினர் பல்வேறு இடங்களில் கருத்து வெளியிட்டு வந்திருந்தனர். வட கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களில் தாம் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் புலம்பித்திரிந்தனர். கடந்த வாரம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கான் அடிப்படை வசதிகளை செய்யும் போது தம்முடன் கலந்தாலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இதே வேளை இலங்கைக்கு எதிரான தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தனிநாட்டுக் சதிக்குப் பின்னால் இந்தியாவும் அமெரிக்காவும் உள்ளன. இந்த ஆபத்தான சூழலைப் புரிந்து கொண்டு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அரசேகரா தெரிவித்திருக்கிறார்.
அத்துடன் இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கு த.தே.கூட்டமைப்பிற்கோ, இந்தியாவிற்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தெரர் கூறியிருக்கிறார்.

Exit mobile version