இரண்டாவது நாளாக ஆ.ராசாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதற்காக காலை 9 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்துக்கு ஆ.ராசா வந்தார்.
உடனடியாக அவர் சி.பி.ஐ. தலைமை அலுவலக 2-வது மாடிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு உடனடியாக விசாரணை தொடங்கியது. நேற்று கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில் இன்று ஆ.ராசாவிடம் விசாரணை நடந்ததாக தெரிகிறது
ஆ.ராசா மத்திய அமைச்சராக் க இருந்தபோது, 2008-ல் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டில் முறை கேடுகள் நடந்ததால் மத்திய அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத்துறை தகவல் வெளியிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா கடந்த மாதம் 14-ந் தேதி விலகினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க வேண்டியதிருப்பதால் நேரில் ஆஜராகுமாறு ஆ.ராசாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதை ஏற்று ஆ.ராசா நேற்று டெல்லி லோதி சாலையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.