Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இலங்கை தீவின் நட்புறவு அவசியமாகின்றது;எனவே இராணுவ ஒத்துழைப்பு அவசியமானது:பிரணாப் முகர்ஜி.

இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை எக்காரணம் கொண்டும் நிறுத்தப் போவதில்லை என்று இந்தியா தெளிவு படுத்தியுள்ள அதேவேளை, இலங்கை அரசு மோதல்களின் போது அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஆங்கில ஊடகமொன்றில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பதிலில் இலங்கைப் படையினருக்கு பயிற்சி அளிப்பது உட்பட இராணுவ ஒத்துழைப்பு அவசியமானது. நாம் இலங்கையுடன் மிகவும் புரிந்துணர்வுடன் கூடிய உறவைக் கொண்டுள்ளோம். அதேவேளை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகும். இலங்கையுடனான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவை நாம் மறக்கமுடியாது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ புதுடில்லிக்கு வரும் போது இந்திய மீனவர் விவகாரம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும். இலங்கையோடு நட்புறவைப் பேணி வருகின்றோம். இந்தியாவின் பிராந்திய நலனிற்கு இலங்கை தீவின் நட்புறவு அவசியமாகின்றது.

நாங்கள் இலங்கைக்கு இராணுவ உதவி அளிக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் காலூன்ற அது வழிவகுத்துவிடும். எனவே உங்கள் பாதுகாப்புத் தேவைகளுக்கு எங்கும் அலையவேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருக்கின்றோம் என இலங்கைக்கு உறுதியளித்திருக்கின்றோம்.

எங்கள் கொல்லைப் புறத்திலுள்ள முற்றத்தை சர்வதேச நாடுகளின் விளையாட்டு மைதானமாக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

Exit mobile version