Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் தன்னகத்தே கொண்டு வளங்களை சூறையாடுவதே: ரில்வின் சில்வா.

இலங்கையின் தேசியப் பிரச்சினையில் பிரிட்டன், அமெரிக்கா உட்பட ஏனைய சர்வதேச நாடுகளை விட இந்தியாவே தேவைக்கு அதிகமான அழுத்தங்களை கொடுத்து வருகின்றது. இந்தியாவின் நோக்கம் முழு இலங்கையையும் தன்னகத்தே கொண்டு வளங்களை சூறையாடுவதே.இந்தியாவின் இத்தகைய சூழ்ச்சிகரமான நோக்கங்களைப் புரிந்துக் கொள்ளாமல் அரசாங்கம் தேசப்பற்றுள்ளவர்கள் எனக் கூறிக் கொள்ளும் சகல சுயநலவாதிகளும் இந்தியாவிற்கு எதிராக ஒருவார்த்தையைக் கூட சொல்லாமல் பிரிட்டனுக்கு எதிராகவும் அமெரிக்காவிற்கு எதிராகவும் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி கண்டன அறிக்கைகளையும் வெளியிடுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவின் அரசியல் மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஏற்றவாறே வடக்கில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்துச் செல்கின்றது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில் இராஜதந்திர உறவுகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், சர்வதேச நாடுகளுடன் வீண் பகையை தேடிக் கொள்ளும் வகையிலேயே அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருகின்றது .அரசாங்கத்தின் பொறுப்பற்ற இவ்வாறான செயற்பாடுகளினால் நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

உண்மையில் இந்தியாவிற்கு எதிராகவே தற்போது பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் இந்தியாவின் கபடத்தனத்தை புரிந்து கொள்ளாமல் இந்தியாவிற்கு அடிமைப்பட்டு செயல்பட்டு வருகின்றது. இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் வாழும் பொது மக்களை பார்வையிட உள்நாட்டிலுள்ள எந்த ஒரு எதிர்க்கட்சிக்கும் அனுமதியில்லை. ஆனால் இலங்கைக்கான இந்திய தூதுவருக்கு அதற்கான அனுமதி உண்டு. அரசாங்கத்தின் செயல்பாடு இவ்வாறு இருக்க சர்வதேச நாடுகளுடனான இராஜதந்திர உறவை கலங்கடித்து விட்டு இலங்கையை அபிவிருத்தியை நோக்கி நகர்த்துவது கடினமானதாகும் என்றார்.

Exit mobile version