Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவின் அழுத்தங்களின் உண்மையான நோக்கம் விடுதலைப் புலிகளின் இறுதித் தோல்வியை தடுத்து நிறுத்திக் கொள்வதே:விமல் வீரவன்ச .

22.10.2008.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான படையினரின் நடவடிக்கையை நிறுத்தி போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த உடனடியாக தலையிடுமாறு கோரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு பிரிவினர் இந்திய மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதைப் பயன்படுத்தி இந்திய மத்திய அரசும், இலங்கை அரசாங்கத்துக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்திருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த அழுத்தங்களின் உண்மையான நோக்கம் விடுதலைப் புலிகளின் இறுதித் தோல்வியை தடுத்து நிறுத்திக் கொள்வதே என்பது, சிறு குழந்தைக்குக் கூட புரிந்துகொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்றை விடுத்து பேசும்போதே விமல் வீரவன்ச இவ்வாறு கூறினார்.

தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் வன்னியிலுள்ள தமிழ் மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு முன்னதாக, இந்தியாவிலுள்ள அதிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களின் கஷ்ட வாழ்க்கை தொடர்பாக கண்ணீர் வடிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச எம்.பி,. உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக தமிழ் நாட்டு மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தத்தை கொடுப்பதன் மூலம் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் யுத்தத்தை நிறுத்துமாறே அவர்கள் சொல்லாமல் சொல்வதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பயங்கரவாதத்தை முற்றாகத் தோற்கடிப்பதற்கே மக்கள் ஆணை வழங்கப்பட்டது. எனவே, இலங்கை ஆட்சியாளர்கள் இந்த மக்கள் ஆணைக்கமைய செயற்படவேண்டுமே தவிர, வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவல்ல.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடனான வாஷிங்டன், ஒஸ்லோ நடவடிக்கை இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுடன் கூடிய வாஷிங்டன் ஜெனிவா நடவடிக்கை, ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகையை அடிப்படையாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தம் போன்ற சர்வதேச நடவடிக்கைகளுடன் தற்போது புதிதாக வாஷிங்டன் புதுடில்லி நடவடிக்கை இணைந்துள்ளது.

இந்திய ஆட்சியாளர்கள் என்றாலும் சரி அல்லது வேறு எந்த ஆட்சியாளர்களாக இருந்தாலுமே சரி, அவரவர் அவர்களது உள்விவகாரங்களையே பார்த்துக் கொள்ளவேண்டும். இலங்கை என்பது இந்தியாவினதோ அல்லது வேறு எந்த நாட்டினதுமோ பிராந்தியமொன்றல்ல. மன்மோகன் சிங் இந்திய மக்களின் வாக்குகளால் பிரதமர் ஆனாரே தவிர இலங்கை மக்கள் வாக்களித்து அவர் அந்தப் பதவிக்கு வரவில்லை.

அதேபோல், இந்தப் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகள் இலங்கை மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களே தவிர, இந்திய மக்களின் வாக்குகளால் அவர்கள் இங்கு தெரிவாகவில்லை.

புதுடில்லி ஆட்சியாளர்கள் தீர்க்கவேண்டிய தேவைக்கும் அதிகமான பிரச்சினைகள் இந்தியாவினுள் இருக்கின்றன. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் வன்னியிலுள்ள தமிழ் மக்களின் கஷ்டங்களை பார்த்து முதலைக் கண்ணீர் வடிப்பதற்கு முன்னதாக, இந்தியாவிலுள்ள அதிகப்பெரும்பான்மையான தமிழ் மக்களின் கஷ்டங்கள் குறித்துக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.

உண்மையில் இவர்கள் வன்னியில் விடுதலைப் புலிகளின் பிடிக்குள் சிக்கியிருக்கும் மக்கள் பற்றிக் கவலைப்படவில்லை. அந்த மக்கள் பற்றி தமிழ்நாட்டு மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்கள் உண்மையில் கவலைப்படுவார்களாயின் மக்களை மனிதக் கேடயங்களாக வைத்திருக்கும் விடுதலைப் புலிகளுக்கு அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டுமே தவிர அதை இலங்கை அரசாங்கத்துக்குச் செய்யக்கூடாது.

எனினும், தென்னிந்திய மற்றும் புதுடில்லி ஆட்சியாளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கே அழுத்தம் கொடுக்கின்றனர். எனவே, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் யுத்தத்தை நிறுத்துமாறே அவர்கள் இதன் மூலம் சொல்லாமல் சொல்கிறார்கள்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு வரலாற்றில் எமக்குக் கிடைத்துள்ள இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும். இந்தச் சூழ்நிலையில் வாஷிங்டன் புதுடில்லி அழுத்தத்தின் மத்தியில் புலிகளைத் தோற்கடிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட்டு விடுமோ என்ற அச்சத்துடன் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். எனவே, 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பயங்கரவாதத்தைத் தோற்கடிக்கக் கிடைத்த மக்கள் ஆணை மீறப்படாதென அரசாங்கம் மக்களுக்கு உடனடியாக உறுதிகூற வேண்டும்.

இதேநேரம், வாஷிங்டன் புதுடில்லி அழுத்தத்தை விட பாரிய அழுத்தத்தை அரசாங்கத்துக்கு மக்கள் கொடுக்கவேண்டும். பலமிக்க வாஷிங்டன் ஒஸ்லோ நடவடிக்கையைத் தோற்கடித்த இந்நாட்டின் தேசப்பற்று மிக்க மக்களுக்கு இந்த வாஷிங்டன் புதுடில்லி நடவடிக்கையையும் தோற்கடிக்க முடியுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது என்றார்.

Exit mobile version