இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுகளுக்கு ஏற்ப, இந்தியாவின் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் வட மாகாணம் முழுமையாகவும், புத்தளம் மாவட்டம், திருகோணமலை மாவட்டம் மற்றும் வேறு சில பிரதேசங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும். அது திடீர் மரணத்தில் தொடங்கி புற்று நோய் போன்ற உயிர் கொல்லி நோய்களை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அங்கவீனர்களாக பிறக்கக்கூடிய பயங்கரமான நிலைமை உருவாகும்.
இவ்வாறான ஆபத்து கண்ணெதிரே இருக்கும்போது அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? இந்த அழிவை நிறுத்துமாறு இந்தியாவிடம் கேட்டிருக்கவில்லை. இன்று அரசாங்க அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்று ஆபத்து ஏற்படும் பட்சத்தில் மக்களைக் காப்பாற்றுவது என்று பேசுவதற்குப் பதிலாக மனிதர்கள் இறந்தால் இழப்பீடு எவ்வழவு கிடைக்கும் என்பதைக் குறித்தே பேசியிருக்கிறார்கள். எங்களது மரணத்திலும் பணம் தேடுவற்கே அரசாங்கம் தயாராகிறது.
இந்தியாவிடமிருந்து கிடைக்கும் வரப்பிரசாதங்களை எண்ணி எதிர்க்கட்சியில் இருக்கும் எந்தவொரு அரசியல்வாதியும் இந்தப் பிரச்சினையில் வாயைத் திறப்பதே இல்லை. இந்தியா கோபித்துக் கொள்ளும் என்ற பயத்தில் மக்களுக்கு விளக்கமளிப்பதுமில்லை.
இந்த நயவஞ்சகர்களை நம்பி மோசம் போகாமல் எமது உயிர்களை பாதுகாத்துக் கொள்ள நாம் தயாராக வேண்டும். இந்த கூடங்குளம் அணு உலைக்கு எதிராக தென்னிந்திய மக்கள் போராடி வருகிறார்கள். நாங்களும் அவர்களோடு சேர்ந்து போராட வேண்டும். சூழலைப் பாதுகாத்துக் கொள்ள, மீன்பிடித் தொழிலைப் பாதுகாத்துக் கொள்ள, உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் ஒன்று சேருவோம். ஒன்று சேர்ந்து இந்த அழிவை நிறுத்துமாறு இந்திய – இலங்கை அரசாங்கங்களை வற்புறுத்துவோம்.
– மக்கள் போராட்ட இயக்கம் / முன்னிலை சோஷலிச கட்சி