Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கடனுதவி ?

05.04.2009.

பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிய 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் கடன் கேட்பதற்கு இலங்கை தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடமிருந்து மொத்தமாக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி இலங்கைக்கு வழங்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தியத் தரப்பினருடனான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் குழுவொன்று புதுடில்லியில் தங்கியிருப்பதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவொன்று இன்று சீனா புறப்பட்டுச் செல்லவுள்ளது.

கடன் வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட கடிதமொன்றையும் சீனா செல்லும் குழுவினர் கொண்டுசெல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பிலிருந்து மீள்வதற்காக இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் கோரியிருந்தது. எனினும், இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர் தமது நிபந்தனைகள் சிலவற்றை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவேண்டும் என நாணயநிதியம் அறிவித்துள்ளது.

இதனால் கடன் கிடைப்பதில் தாமதல் ஏற்பட்டிருப்பதால் அயல் நாடான இந்தியாவிடமும், பிராந்திய நாடான சீனாவிடமும் கடனுதவி கோருவதற்கு இலங்கை முன்வந்துள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தத்துக்கு சீனா அரசாங்கம் இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை ஏற்கனவே வழங்கிவரும் நிலையில், சீனாவிடமிருந்து கடனுதவியைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Exit mobile version