Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. பேரா.பிரான்சிஸ் பாய்ல்

paaylபேராசிரியர் பிரான்சிஸ் அந்தோணி பாய்ல், பன்னாட்டுச் சட்டங்கள் மற்றும் மனித உரிமைச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், உலகமெங்கும் நிலவும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏராளமாக எழுதியும், பேசியும் வருகிறார். இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். செப்டம்பர் 2000 இல் The International History Review இதழில் பாய்ல் எழுதிய Foundation of World Order : The Legalist Approach to International Relations (1898-1922) எனும் கட்டுரை, உலக ஒழுங்கியல் பற்றிய வரலாற்று ஆவணமாக உலக அரசியல் வல்லுநர்களால் கருதப்படுகிறது.

உலகளவில் மனித உரிமைகள் அமைப்பான “அம்னஸ்டி இன்டர்நேஷனலின்‘ உயர்மட்டக் குழு இயக்குநராக பாய்ல் பணியாற்றியுள்ளார். பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கும், பாலஸ்தீனத்தின் தற்காலிக அரசுக்கும் இவர் ஆலோசகராக இருக்கிறார். பாஸ்னியாவில் நடத்தப்பட்ட முஸ்லிம் இன அழிப்புக்குக் காரணமான மிலோசெவிச்சுக்கு எதிராக பன்னாட்டு நீதிமன்றத்தில் வாதாடி, பாஸ்னிய மக்களுக்கு நீதி கிடைக்க காரணமாக இருந்தவர். “உயிரியியல் ஆயுதங்கள் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம் 1989′–அய் அமெரிக்க அரசுக்காக தயாரித்து கொடுத்தவர். இச்சட்டம் ஜார்ஜ் புஷ் அரசால் அமெரிக்க காங்கிரஸின் இரு அவைகளிலும் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டு, சட்டவடிவம் பெற்றுள்ளது.இலங்கையில்

நடைபெறுவது உள்நாட்டுப் போரல்ல; திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதை ஆதாரப்பூர்வமாக உலக அரங்கில் இடையறாமல் வலியுறுத்தி வரும் பிரான்சிஸ் பாய்ல், “தமிழ்நெட்‘ இணையத்தில் இது தொடர்பாக விரிவான ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். தற்பொழுது “நாடு கடந்த தமிழீழ அரசின்‘ ஆலோசனைக் குழு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் பாய்ல், “தலித் முரசு‘க்கு தொலைபேசி மூலம் அளித்துள்ள சிறப்புப் பேட்டியிலிருந்து…

பேட்டி : மாணிக்கம்

தற்பொழுது

மூன்று லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் இலங்கை அரசின் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கும்போது, அய்க்கிய நாடுகள் அவை போன்ற பன்னாட்டு உரிமை அமைப்புகள் தலையிட்டு தீர்வு காண்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
நிச்சயமாக அவை தலையிட வேண்டும். 1948 இன் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் படியும், 1949 ஜெனிவா ஒப்பந்தத்தின் படியும், இப்பிரச்சனையில் தலையிடுவதற்கு அய்க்கிய நாடுகள் அவை கடமைப் பட்டுள்ளது. ஏற்கனவே பல நேரங்களில், அய்.நா.வும், உலக நாடுகளும் தலையிட்டு முகாம்களில் இருக்கின்ற மக்களை காப்பாற்ற வேண்டிய கடமை பற்றி தொடர்ச்சியாக பேசி யும், எழுதியும் வந்திருக்கிறேன். இலங்கை முகாம்களில் இருக்கும் தமிழ் மக்கள் வாரத்திற்கு 1,400 பேர் இறக்கிறார்கள். அவை நாஜி வதை முகாம்களைப் போன்ற மரண முகாம்களாக இருக்கின்றன!

இலங்கையில் போர் முடிந்துவிட்டது” என்று இலங்கை ராணுவம் தன்னிச்சையாக அறிவித்த பின்பும் உலக சமூகமும், ஊடகமும், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து உண்மை நிலையை வெளிக் கொண்டு வர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அங்கு இருப்பவை “மரண முகாம்கள்‘ என்று நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளீர்கள். இலங்கை ஒரு பாலஸ்தீனமாகவோ, மேற்கு அய்ரோப்பிய நாடாகவோ இருந்திருந்தால், உலக ஊடகங்கள் இவ்வாறு அமைதி காத்திருக்குமா?பாலஸ்தீனத்தின் மீதும் பாஸ்னியா மீதும் சர்வதேச ஊடகங்கள் மிகுந்த கவனம் செலுத்தின. கெடுவாய்ப்பாக, அவை இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. இதை இனவெறி என்றே நான் கூறுவேன். தோலின் நிறம் பார்த்து செய்யப்படும் கொடுமை. சர்வதேச ஊடகங்கள், இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைகளையும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களையும், தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் போர்க் குற்றங்களையும் பிடிவாதமாக கண்டுகொள்ள மறுக்கின்றன. உலக ஊடகங்கள் பாஸ்னியா மீது கவனம் செலுத்தின. மிக அண்மையில் கடந்த டிசம்பர்-சனவரியில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. ஆனால், இலங்கைத் தமிழர்கள் பற்றி அவை கூறாததற்கு இனவெறியே காரணம். தமிழர்கள் திராவிடர்கள். உள்நாட்டு மக்கள். கறுத்த தோலுடையவர்கள். இந்தியாகூட வெள்ளைத் தோலுடைய ஆரியர்கள் என அழைக்கப்படுபவர்களால் ஆளப்படும் நாடு. இவையெல்லாம் என் கருத்துக்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை.

இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்டபோது, உலக ஒழுங்கு வேறு மாதிரியாக இருந்தது. வெகுசில வல்லரசுகள் மட்டுமே இருந்தன. அவற்றின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப உலகம் இயங்கியது. இன்று பல வல்லரசுகள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆசியாவில் குறிப்பாக, இலங்கையைச் சுற்றி உருவாகியுள்ளன. இப்போதைய சூழ்நிலைகளில் இஸ்ரேல் போன்றதொரு தீர்வு தமிழ் மக்களுக்கு சாத்தியமா?

மிகச் சரியாகக் கூற முடியவில்லை. எனினும் ஒரு கட்டத்தில் இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இரட்டைக் கோபுர தாக்குதலான செப்டம்பர் 11க்குப் பிறகு புஷ் நிர்வாகத்தின் கீழ் அனைத்துமே மாறிவிட்டன. அண்மையில் நடைபெற்ற சோக நிகழ்வாக, இந்திய குடியரசுத் தலைவர் இலங்கை குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கையுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றும் கூறியுள்ளார். இது, ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. 30 ஆயிரம் தமிழர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று அவர்கள் செயல்படப் போகிறார்கள். சீனா இலங்கையுடன் இணைந்து செயல்படுகிறது. பாகிஸ்தான் இலங்கையுடன் நட்பு பாராட்டுகிறது. இந்நிலையில் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஆறரை கோடி தமிழர்கள் கிளர்ந்தெழுந்து, இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும். அண்மையில் நடந்து முடிந்த இனப்படுகொலையின் போது நிகழாத அது இப்போது முதல் நிகழ வேண்டும்.
இந்திய அரசு தன் நிலையை மாற்றி ஏதேனும் செய்ய முயன்றால், அமெரிக்கா அதற்கும் மேலாக செய்யும். சீனாவுடன் இலங்கை நெருக்கமாக இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்திய அரசின் சிந்தனையில் கொள்கை ரீதியான மாற்றங்களைக் கொண்டு வந்தால், அமெரிக்காவும் ஏதேனும் செய்ய முயலும். இந்திய அரசு ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது படுபயங்கரமானது. நாஜி படைகளால் யூதர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைப் போல, இலங்கைத் தமிழ் மக்கள் அனுபவிக்கிறார்கள். உலகமே கண்களை மூடிக் கொண்டு விட்டது. நாம் இந்தப் பேட்டியை தொடங்கிய நேரம் முதல் இந்த 10 நிமிடங்களில் 10 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதைய நிலைகளைப் பார்க்கும்போது, இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் இலங் கைத் தமிழர் பிரச்சனையை கை கழுவி விட்டது போன்றே தோன்றுகிறது.

இலங்கை இனப்படுகொலையின் இறுதிக் கட்ட கள நிகழ்வுகள் பற்றி அறிய, உலகமே இலங்கை ராணுவத்தின் பிடியில் இருந்த மருத்துவர்களைத்தான் நம்பி இருந்தது. கடைசியில் ஊடகங்கள் முன் கொண்டு வரப்பட்ட மருத்துவர்களும், இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரத்தையே தங்கள் செய்தியாக சொன்னார்கள். இந்நிலையில் உண்மை வெளிவருவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கிறதா?

அது உங்களிடம், என்னிடம், செய்தி ஊடகங்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் ஆறரை கோடி தமிழ் மக்களின் கைகளில்தான் உள்ளது. உண்மைகளை வெளிக் கொண்டு வருவது நம்மைச் சார்ந்து இருக்கிறது. போரின் இறுதிக்கட்ட காலத்தில், உண்மையிலேயே சில நல்ல ஆதõரங்கள் இருந்தன. இப்போது பொய்களின் மூலமும், ஏமாற்றி மூடி மறைப்பதன் மூலமுமே-விமர்சகர்கள் அனைவரும் இலங்கை அரசால் அடக்கப்பட்டு விட்டார்கள். இதே போன்றதொரு நிலைதான் யூதர்கள் அழிக்கப்பட்ட காலத்திலும் இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு நாஜிகளின் கொடுமைகள் தெரிந்த போதும் வெளிப்படையாக எதுவும் கூறவில்லை. இப்போதும் இலங்கையில் என்ன நடக்கிறது என்று அமெரிக்காவுக்குத் துல்லியமாகத் தெரியும். எனினும் மவுன சாட்சியாக உலகம் இருப்பதால், தமிழினப் படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.

போரில்

வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி இலங்கையை பாராட்ட விழுந்தடித்து ஓடி வந்த நாடுகள், இப்போது “போர் முடிந்து‘ மூன்று மாதங்களாகியும் இடம் பெயர்ந்த மக்களின் மறுவாழ்வு, மீள்குடியேற்றம் குறித்து எதுவுமே பேசவில்லையே?

அவற்றிற்கு தமிழ் மக்கள் குறித்த எந்த அக்கறையும் இல்லை. அதனால்தான் பிப்ரவரி-மே மாதங்களுக்கு இடையில் ராஜபக்சேவினால் நிகழ்த்தப்பட்ட 50 ஆயிரம் தமிழர் படுகொலையை எதிர்த்து எதுவும் பேசவில்லை. படுகொலையை நிறுத்தக் கோரி துரும்பைக்கூட அசைக்கவில்லை. இப்போது பன்னாட்டு நிதியத்தின் (ஐMஊ) கடனும் இலங்கைக்கு கிடைக்கப் போகிறது. இது குறைந்த பட்சம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் ஒப்புதல் இன்றி சாத்தியமே இல்லை. அவர்கள்தான் அதை கட்டுப்படுத்துகிறார்கள். வல்லரசுகளைப் பொருத்தவரை, 50 ஆயிரம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறையே இல்லை. இது, இனவெறியன்றி வேறு எதுவும் இல்லை. 1930களிலும் இரண்டாம் உலகம் போர் காலத்திலும் யூதர்கள் மீதான எண்ணமும் இதுபோலத்தான் இருந்தது. போர் முடிந்த பிறகுதான் யூத இனப்படுகொலை பற்றி உலகம் உணரத் தொடங்கியது. ஆனால் அவை மிகவும் தாமதமாக நிகழ்ந்ததால் எல்லாம் பயனற்றுப் போனது.

உலக நாடுகளுக்கு அக்கறை இல்லை என்றால், இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கவும் அவசியமில்லையே?

நான் சொல்வது, அவர்களுக்கு தமிழர்கள் மீது அக்கறை இல்லை. இலங்கையின் பூகோள நலன்களை தங்களுக்கு சாதகமாக்க அக்கறை உண்டு. தங்களின் வர்த்தக நலன்களுக்கு இலங்கையின் துறைமுகங்களை யும் நிலப்பரப்புகளையும் மற்றும் தென்னிந்தியத் துறைமுகங்களையும் பயன்படுத்திக் கொள்வதில் அக்கறை உண்டு.

இலங்கைத் தமிழர்கள் பலம் கொண்டிருந்த போதும், தங்களுக்கென்று வலிமையான பிரதிநிதிகள் இருந்த போதும்-அவர்களின் நியாயமான நல்வாழ்வை உறுதிப்படுத்தாத இலங்கை அரசு, இப்போது அவர்கள் வலுவிழந்து, மேய்ப்பன் இல்லாதது போன்ற நிலையில் பரிதவிக்கும்போது-அவர்களின் உரிமைகளையும், விருப்பங்களையும் அரசு நிறைவேற்றுமா?

நிச்சயமாக நிறைவேற்றாது. உண்மையில் அவர்களை முற்றிலுமாக அழித் தொழிக்கும் வேலையிலேயே அது ஈடுபட்டுள்ளது. போர் வெற்றி மனநிலையில் இருக்கும் அவர்கள், இப்போதும் முகாம்களிலேயே தமிழர்களை வைத்திருக்கிறார்கள். உண்மையில் 300 தமிழர்களுக்கு 1,400 சிங்கள போலிஸ் என்ற விகிதத்தில் நிலைமை இருக்கிறது. இது, இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்திற்கும் எதிரானது. திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு குழுவை அழிக்க நினைப்பதும், இன்று இலங்கையில் நாம் பார்ப்பதும் தமிழ் இன அழிப்பே. அதை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

வல்லரசு நாடான அமெரிக்கா, இலங்கையின் இறுதிக்கட்ட இன அழிப்புப் போரின் போது எடுக்கப்பட்ட (மிக முக்கிய ஆதாரமான) செயற்கைக் கோள் படங்களை வெளியிட மறுப்பது ஏன்?

செயற்கைக் கோள் படங்களை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்காவுக்குத் தெரியும். இலங்கையின் கனரக ஆயுதங்கள், பீரங்கி மற்றும் விமானங்கள் தமிழர்களைத் துண்டாடியதை உலகமே பார்த்தது. பாஸ்னியா போரிலும் அமெரிக்கா இவ்விதமாகவே நடந்து கொண்டது. அமெரிக்க செயற்கைக் கோள்கள் எப்போதும் பாஸ்னியாவை சுற்றியே இருந்தன. பாஸ்னியாவில் என்ன நடந்தது என்பது அவற்றில் துல்லியமாகப் பதிவாகியிருக்கும். ஆனாலும் அவை வெளியிடப்படவில்லை. அமெரிக்கா வெளியிடாது. ஏனென்றால், மக்கள் கோபமுற்று அதனிலும் பெரிதாக ஏதேனும் செய்து அமைதிக்கு வழிவகுக்க நிர்பந்திப்பார்கள் என்பதால்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன? அமெரிக்கா எதையும் வெளிப்படையாக அறிவித்துள்ளதா?

என்னைப் பொருத்தவரை, அமெரிக்கா ராஜபக்சேவையே ஆதரிக்கும். அண்மையில் பன்னாட்டு நிதியத்தின் கடன் அனுமதிக்கப்பட்டுள்ளதே அதற்கு சான்று. அமைதிப் பேச்சு காலத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாகத்துடன் அமெரிக்கா பேசி வந்தது. அமைதிப் பேச்சு வார்த்தையை அமெரிக்கா ஆதரித்தது. இப்போது அதற்கான வாய்ப்புகள் இல்லை. அமெரிக்கா அங்கீகரிக்க வேண்டியது, இலங்கையில் நடப்பது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதைத்தான். இப்போது அமெரிக்கா இனப்படுகொலையை அங்கீகரிக்க மறுப்பதன் காரணம் இதுதான் : அப்படி அங்கீகரித்தால் இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின் முதலாம் சட்டப்பிரிவின்படி-இனப்படுகொலையைத் தடுக்கவும், நிறுத்தவும் அது கடமைப்பட்டதாகி விடும். அதை செய்ய அமெரிக்காவுக்கு விருப்பமில்லை. இதுதான் பாஸ்னியாவிலும் நிகழ்ந்தது. ஒரே ஆறுதல் (வேறுபாடு) பாஸ்னியா மீது உலக ஊடகங்கள் பார்வையை செலுத்தின.

புலம் பெயர்ந்த தமிழர்கள், “நாடு கடந்த தமிழீழ அரசை‘ நிறுவுவது பற்றி சிந்திக்கிறார்கள். நாளை உள் நாட்டிலோ, வெளிநாட்டிலோ “தமிழீழம்‘ என்றொரு நாடு பிரகடனப்படுத்தப்பட்டால், அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?

நான் ஏற்கனவே சொன்னபடி, அமெரிக்கா அது குறித்து எந்த அக்கறையும் காட்டாது. குறிப்புகளின்படி, ராஜபக்சே ஒரு தலைப்பட்சமாக முறித்த அமைதி ஒப்பந்தம் நடப்பில் இருந்த காலத்தில், விடுதலைப் புலிகளுடன் அமெரிக்கா திரைக்குப் பின்னால் தொடர்பு கொண்டிருந்தது. ஜார்ஜ் புஷ்ஷின் பயங்கரவாதத்திற்கு எதிரான பார்வை மாற்றப்பட்டபோது, அமெரிக்கா ராஜபக்சே அரசாங்கத்தை ஆதரிக்கத் தொடங்கியது.

அரை நூற்றாண்டிற்கும் மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகி வரும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவாக இருக்க முடியும்?

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அரசியல் தீர்வுகள் இவ்வாறாக இருக்கலாம் : 1. தங்களுக்கென்று சுதந்திரமான, இறையாண்மை கொண்ட தனி நாட்டை உருவாக்கிக் கொள்வது 2. ஒரு சுதந்திர நாட்டுடன் இணைந்து செயல்படுவது 3. மக்களால் தீர்மானிக்கப்படும் வேறு அரசியல் நிலைப்பாடுகள். இவற்றில் எதுவாக இருந்தாலும், அது இலங்கைத் தமிழர்களாலேயே தேர்வு செய்யப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமோ, நானோ அல்லது இந்தியாவில் வாழும் தமிழர்களோகூட எந்தத் தீர்வையும் சொல்ல முடியாது. பன்னாட்டுச் சட்டங்களின்படியும் செயல்முறைகளின்படியும் தங்கள் சுயநிர்ணய உரிமையை இலங்கைத் தமிழர்களே முடிவு செய்ய வேண்டும். எனினும் இங்கு ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது, இலங்கைத் தமிழர்களைப் போல இனப்படுகொலைக்கு ஆளாகும் எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று ஒரு சுதந்திரமான தனி நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது, எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையை செய்யத் தவறிவிட்டன. எனவே, இலங்கை அரசிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது. பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும் உரிய இழப்பீடும் ஆகும்.

இந்திய அரசு இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் தலையிடாததற்கு சொல்லும் காரணம், இலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை, தான் அங்கீகரித்தால், இந்தியாவில் வாழும் 6 கோடி தமிழர்களும் அதைப் போல் தனி நாடு கேட்டுப் போராடுவார்கள் என்பதே. இது, பன்னாட்டுச் சட்டங்களின்படி ஒரு பொய்யான இரட்டை கூறு நிலை. எனவே இவ்வாறான காரணத்தைச் சொல்லி, இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறுவது இந்தியாவுக்கு இழுக்கு.

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒரு “மக்கள் குழு‘வினர். எனவே, சுயநிர்ணய உரிமையைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள். சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தின்படி (International Covenant on Civil and Political Rights), இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெறத் தகுதியானவர்கள் என தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளது. இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களுக்கென்று தனியாக ஒரு மொழி, இனம் மற்றும் மதத்தைக் கொண்டிருக்கும் மக்கள். இதை இலங்கை அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் இலங்கை அரசு தமிழ் இன அழிப்பில் ஈடுபடுகிறது.

இன்னும் தெளிவாக சொல்கிறேன். இலங்கையும் கையெழுத்திட்டுள்ள சமூக மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தத்தில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகள் பன்னாட்டு சட்டங்களின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதில் இந்த உரிமை யின்படி, அவர்கள் சுதந்திரமாக தங்கள் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு வளர்ச்சிகளை முன்னெடுத்துச் செல்ல முடியும்.

நன்றி- தலித் முரசு

Exit mobile version