ஜே.வி.பி.யின் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றபோதே ரில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்ற ரில்வின் சில்வா, வேட்பு மனுத் தாக்கலின் பின்னர் எதிரணிகளின் பொது ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் தாம் எதிர்கொள்ள உள்ள பாரிய தோல்வியைத் தடுக்க பொய்ப் பிரசாரங்களை பொது மக்களிடையே அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
சர்வதேச சதிகளுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளதாக ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
ஆனால், அரசாங்கம் நாட்டை காட்டிக் கொடுத்தும் சர்வதேச சதிகளுக்கு நாட்டை அடமானம் வைத்துள்ளமைக்குமான ஆதாரங்கள் பல உள்ளன. பாதுகாப்பு தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றை அமெக்கத் தூதுவர் ஊடாக கைச்சாத்திட்டதன் பிரகாரம் அமெக்க படையினர் தமது தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்தக்கூடிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊடகமொன்றில் வெளியான செய்தியில் இலங்கையில் யுத்தத்தின்பின்னர் இராணுவ தளபதி உட்பட ஏனைய இராணுவ அதிகாகள் பதவி மாற்றம் செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பின்னணியில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக இலங்கை அரசாங்கம் மௌனம் காத்து வருகின்றது. அதே போன்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா நாட்டை பிரிக்கும் நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இது குறித்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனம் சாதித்து வருகின்றார். இது போன்று பல எழுத்து மூலமான ஆதாரங்களை நாட்டு மக்களுக்கும் காட்ட முடியும்.
தேசப்பற்று என்று கூறிக்கொண்டு நாட்டைப் பாரியளவில் காட்டிக் கொடுப்பது அரசாங்கமேயாகும். தமது ஜனாதிபதி பதவிக்காகவும் அதிகாரங்களுக்காகவும் யாரையும் ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பவாதிகளின் கூடாரமே இந்த அரசாங்கமாகும்.
ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை பிரஜை இல்லையென்றால் எவ்வாறு இராணுவ தளபதி பொறுப்பு உட்பட யுத்தத்தின் பின்னரான ஏனைய பல பதவிகளை அரசாங்கம் வழங்க முன்வந்தது? இவ்வாறான செயற்பாடுகளினாலும் பொய் பிரசாரங்களினாலும் அரசாங்கத்தின் உண்மையான தோற்றம் தெரிய வந்துள்ளது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது உரையாற்றிய ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்,
பாரியளவிலான நிறைவேற்று அதிகார துஷ்பிரயோகத்தையும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அடிபணியாத காவல்துறை மா அதிபரையும் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக தற்போதே பார்க்கின்றோம் எனக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெவிக்கையில்,
அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி உறுதியெனக் கூறிக் கொண்டு எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் பிரசார நடவடிக்கைகள் மீது வன்முறைகளைப் பிரயோகித்து வருகின்றது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் காவல்துறை அதிகாரிகளை அலமாளிகையில் சந்தித்து பேசியிருந்தார்.
இதன்போது காவல்துறை மா அதிபருக்கும் ஊடகங்களுக்கும் தெரியுமாறு ஜனாதிபதி தமது கட்டவுட்களை அகற்றுமாறு கூறினார்.
ஆனால் இதுவரையில் ஜனாதிபதியின் பாரிய கட்டவுட்கள் அகற்றப்படாமலே உள்ளன. ஜனாதிபதி கூறியும் காவல்துறை மா அதிபர் செயற்படவில்லையென்றால் ஏனைய முறைப்பாடுகள் தொடர்பாக எவ்வாறு நம்பிக்கை வைப்பது. அதே போன்றே அரச ஊடகங்கள் இன்று சீரழிந்துள்ளன.
பொதுமக்களின் நம்பிக்கையை முழு அளவில் அவை இழந்துள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்த தினத்தன்று தேசிய தொலைக்காட்சியின் செயற்பாடுகளில் எவ்வளவு தூரமாக அரசியல் அடிமைத்தனம் காணப்பட்டது என்பது தெளிவாகின்றது.
இதேபோன்றே வன்முறைச் சம்பவங்களையும் அரசாங்கம் கட்டவிழ்த்துள்ளது. நேற்று முன்தினம் அத்தனகல்லை பிரதேசத்தில் ஜே.வி.பி.யின் ஆதரவாளர்கள், குண்டர்களினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள்.
தேர்தல் ஆணையாளர் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்தக் கூடிய பங்களிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.