லக்ஷர் ஈ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பின் அங்கத்தவர் ஒருவர், தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக இந்திய விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளமை குறித்து இந்திய அதிகாரிகளுடன் இலங்கை அதிகாரிகள் பேச்சு நடத்திவருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடில்லியிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஏற்கெனவே இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் இது தொடர்பான விபரமான அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் மேற்படி வட்டாரங்கள் தெரிவித்தன.
புனே நகரிலுள்ள ஜேர்மன் பேக்கரியொன்றின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட 29 வயதான மிர்ஸா ஹிமாயட் பெய்க் என்பவர் தான் கொழும்பில் பயிற்சி பெற்றதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் அந்த பயிற்சிமுகாம் எந்த இடத்தில் இருந்தது என்பது குறித்த விபரங்களை தற்போது பொலிஸார் பெய்க்கிடமிருந்து பெற்றுவருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.