Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இதோ ஈழத் தமிழிசை!

santhos
லண்டனில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் சந்தோஸ்

ஈழத்துக் கவிதை மரபின் தனித்துவத்தை நெஞ்சை நிமிர்த்தி வரலாற்றில் எழுதியவர்களுள் மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927 ஆம் ஆண்fடு பிறந்த கவிஞர் உருத்திரமூர்த்தியின் கவிதை மூன்றாவது தலைமுறையையும் கடந்து இன்றும் நிலைபெற்றுள்ளது. அரைகுறை ஆங்கிலம் கலந்து தென்னிந்திய கோப்ரட் சினிமாக்களின் ஊடாக தமிழ்க் கலை என்று அறிமுகப்படுத்தப்படும் அழுக்குகளுக்கு மத்தியிலும் மகாகவி உருத்திரமூர்த்தியின் படைப்புக்கள் உயிர்வாழ்கின்றன.

அன்றைய யாழ்ப்பாண மீனவச் சமூகத்தின் அவலங்களை நெஞ்சை நெருடும் வகையில் புதிய கவிதை மரபின் வழியாக மகாகவி அறிமுகப்படுத்தினார். மாற்றுக் கலைகளே 80 களின் ஆரம்பம் வரை பிரதான கலைவடிவமாக தமிழ்ப் பகுதிகளில் திகழ்ந்தமைக்கு நுளைவாசல்களாக மகாகவியின் படைப்புக்கள் அமைந்தன. கிழக்கில் நீலவாணன் மற்றும் முருகையன் ஆகியோரின் சமகாலத்தவரான மகாகவியின் சிறு நண்டு என்ற பாடலுக்கு யாழ் கண்ணன் இசைவடிவம் கொடுத்திருந்தார்.

மூன்று தசாப்தங்கள் கடந்து இதே பாடல் மீண்டும் புதிய இசை வடிவில் வெளியாகியுள்ளது. லண்டனில் வசிக்கும் புதிய தலைமுறை இளைஞன் சந்தோஸ் இன் இசையில் சிறு நண்டு புதிய உத்வேகத்தைக் கொடுக்கிறது.

ஆங்கிலம் கலந்த தமிழ்க் கொலைஞர்களான கலைஞர்களின் கரங்களில் சிக்குண்டு தமிழிசை அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் வெளிவந்திருக்கும் சந்தோசின் முயற்சி நம்பிகை தருகிறது. வியாபார வெறியை ஊடறுத்து இதுதான் தமிழிசை என்று மூன்றாவது தலைமுறை இளைஞர் மாகாகவியை மீள அறிமுகப்படுத்துவது எமது கலைகளுக்குப் புதிய இரத்தம் பாய்ச்சுவதைப் போன்றது.

கர்நாடக இசையான மத்திமாவதி இராகத்தின் சாயலோடு இசையமைக்கப்பட்டிருக்கும் பாடலின் பின்னணியில் பறை ஒலிக்கிறது. கர்நாடக இசையையும் பறையையும் கலந்து புதிய இசைப் புரட்சி செய்திருக்கும் சந்தோசின் பாடலை ஈழத் தமிழில் பாடி உயிர்கொடுத்திருக்கிறார்கள் பிரான்சைச் சேர்ந்த இந்திரனும், லண்டனைச் சேர்ந்த ரமேஷ் சர்மாவும்.
திஷாந்தனின் புல்லாங்குழல் பாடலை மெருகூட்டுகிறது.

ஈழத்தின் இசைப் பாரம்பரியத்திற்கு உயிர்கொடுத்திருக்கும் சந்தொஸ் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

பாடலைக் கேட்க:

பாடலைத் தரவிறக்கம் செய்ய:

http://www.labelsme.com/chiru-nandu/

Exit mobile version