Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இது ஹிட்லர் கால ஆட்சி முறை-ஏராளமான ஊடகவியலாளர்கள் மெளனித்துள்ளனர்:ஜே.வி.பி.

 பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு போதுமான சட்ட அதிகாரங்கள் இன்மையின் காரணமாகவே அவசரகால சட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு வழங்கினோம்.

 எனினும், இந்த மேலதிக அதிகாரங்களைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்கள் ஒடுக்கப்படுவது, மாணவர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் கைதுசெய்யப்படுவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமாயின், தீர்மானமொன்றை எடுக்க நேரிடும். இதுகுறித்து தற்போது ஜே.வி.பி. அதிக கவனம் செலுத்தி வருகின்றது.

எதிர்வரும் வியாழக்கிழமை அவசரகால சட்டம் நீடிப்பு மற்றும் விவாதம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் எடுக்கவிருக்கும் தீர்மானம் குறித்து அதற்கு முன்னர் அரசியல் சபை கூடி தீர்மானிக்கும்.  என ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
 
  கடந்த காலங்களில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவது, தாக்கப்படுவது மற்றும் கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றன. அத்துடன் ஊடக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தீ வைக்கப்பட்டது. இதன் மற்றுமொரு நடவடிக்கையாக தற்போது லங்கா ஞாயிறு பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் தெனியாய காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர், ஜே.வி.பி. தொடர்புபட்டுள்ள ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதித் திட்டமொன்று இருப்பதாகக் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றோம். அதுமாத்திரமன்றி, எவ்வித பொறுப்புமின்றி, எவ்விதத் தேடலும் இன்றி தெரிவிக்கப்பட்ட இந்தக் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருந்து குற்றச்சாட்டை மறுத்தே ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்தார். ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் இன்று அழைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க,
ஷஷகொழும்பு, பேலியகொடவில் உள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளின் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து பாரியளவில் சந்தேகங்கள் இருக்கின்றன. இதுகுறித்து எழுதுவதற்கு ஏதாவதொரு பத்திரிகைக்கு தேவை ஏற்படுமாயின், அந்த செய்தியுடன் வெளியிடுவதற்கு குறித்த பாலத்தைப் புகைப்படம் எடுக்கச் சென்றால், ஜனாதிபதி அடிக்கடி அந்த மேம்பாலத்திற்கு மேலாக செல்வார், எனவே, இந்தப் புகைப்படத்தை எடுப்பதற்கு பின்னணியில், ஜனாதிபதியைக் கொலைசெய்யும் சதித் திட்டமொன்று உள்ளது எனக் கூறி, குறித்த ஊடகவியலாளர் கைதுசெய்யப்படக் கூடும். அதுமாத்திரமல்ல, இயற்கை அழகைப் படமெடுப்பதற்காக ஆகாயத்தில் இயற்கைக் காட்சியை புகைப்படம் எடுத்தால், ஜனாதிபதி பயணம் செய்யும் உலங்குவானூர்த்தி குறித்த பிரதேசத்தின் ஊடாக செல்வதால், ஜனாதிபதியை கொலை செய்யும் சதித் திட்டமொன்று இருப்பதாகக் கூறி அந்த ஊடகவியலாளர் கைதுசெய்யப்படக் கூடும். இவ்வாறு எவ்வித அடிப்படைக் காரணங்களுமின்றி ஊடகவியலாளர்கள் மீதும் ஊடக நிறுவனங்கள் மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. இவை எங்கு முடிவடையப் போகின்றது?.

இவைமாத்திரமல்ல, தமக்கு கீழ்படியாத, தாம் சொல்வதை மாத்திரம் வெளியிடாத ஊடகவியலாளர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். அரசாங்கத்தின் விருப்பத்தை மாத்திரமே ஊடகவியலாளர்கள் வெளியிடவேண்டும், அரசாங்கத்தின் விருப்பத்தை மாத்திரமே ஊடக நிறுவனங்கள் அறிக்கை செய்ய வேண்டும் என்ற ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றது.

அச்சுறுத்தல்கள் காரணமாக ஏராளமான ஊடகவியலாளர்கள் மெளனித்துள்ளனர். இந்த நாட்டில் ஜனாதிபதிக்கு பணிவிடை செய்யும் ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமா இருக்க முடியும்? இது ஹிட்லர் கால ஆட்சி முறையல்லவா? தற்போது ஜனநாயகத்திற்கு விரோதமான பாதையிலேயே அரசாங்கம் பயணித்து வருகிறது. இந்த நிலைக்கு எதிராக ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து போராட வேண்டும்  என அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Exit mobile version