Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இதுவரைகாலத் தமிழ்த் தேசியம் பிற்போக்கானது: புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி

sentilvelஇலங்கையின் நவகொலனியத்தின் கீழ் நவதாராள பொருளாதாரக் கட்டமைப்பு மிக வலிமையாக முன்னெடுக்கப் பட்டு வருகிறது. இந் நிலையில் இலங்கையில் வர்க்க முரண்பாடும் அதன் காரணமான ஒடுக்கு முறையுமே சமூக அமைப்பின் அடிப்படை முரண்பாடாகக் காணப்படுகிறது. அதேவேளை தேசிய இன முரண்பாடும் அதன் காரணமான பேரினவாத ஒடுக்கு முறையும் பிரதான இடத்தில் இருந்து வருகிறது. இவை இரண்டையும் முன் தள்ளி நிற்கும் உள்நாட்டு தரகு பெரு முதலாளிய ஆளும் வர்க்கக் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவு அரவணைப்பு வழங்கி நிற்கும் அந்நிய ஏகாதிபத்திய சக்திகளும் அனைத்து இலங்கை மக்களினதும் பொது எதிரியாக உள்ளனர். இந்நிலையில் மக்கள் அதிகாரத்திற்கான புரட்சிகர வெகுஜன அரசியலும் அதற்கான போராட்டங்களுமே நாட்டின் அனைத்து மக்களினதும் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைய முடியும். அதனையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தனது இலக்காகவும் இலட்சியமாகவும் கொண்டுள்ளது.
இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஆறாவது அனைத்திலங்கை மாநாடு ஆகஸ்ட் 28, 29,30 திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதையொட்டி கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையில்; தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில், நாடும் மக்களும் பொருளாதாரத் தளத்தில் கடுமையான நெருக்கடிகளை எதிர் நோக்கி நிற்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி அரசாங்கப் புள்ளி விபரப்படி 4.5 வீதமாகவே காணப்படுகிறது. அவ்வாறாயின் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் மோசமடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் எனப்படுவது இப்பொருளாதார நெருக்கடிகளுக்கு எவ்வித பரிகாரமும் தரமாட்டாது. ஏனெனில்; இடம்பெற்ற மாற்றம் ஆட்கள் மாறிக் கொண்டார்களே தவிர ஆட்சியதிகாரமும் அரசு யந்திரமும் மாறவில்லை. இதன்மூலம் விரைவாகவே இன்றைய நிலையை விடத் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்கள் பெரும் சுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் தள்ளப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இருந்து வரும் நவகொலனிய நவ தாராள பொருளாதாரம் உலகமயமாதல் நிகழ்ச்சி நிரல் என்பன முன்னைய ஆட்சியைவிட மேலும் பலமடங்கு ஆர்வத்துடன் இன்றைய மைத்திரி- ரணில் ஆட்சியால் இறுகப்பற்றிக் கொள்ளப்படுகின்றது. அதனை ஜக்கிய அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் தலைமையிலான ஜரோப்பிய யப்பானிய சக்திகளும் மிக மும்மரமாக ஆதரித்து தற்போதைய ஆட்சியுடன் இணங்கிச் செயற்பட முன்வந்திருக்கிறார்கள். அதேவேளை இந்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளும் சீன முதலாளிய ஆட்சியினரும் இலங்கையில் தத்தமது இடங்களைத் தொடர்ந்தும் தக்கவைத்து நீடிக்க முயற்சிகளை செய்து வருகின்றனர்.
மேலும் அவ்வறிக்கை கூறுவதாவது, அடிப்படை முரண்பாடு நாட்டையும் அனைத்து மக்களையும் பற்றிப் பிடித்து நிற்கும் அதேவேளை இதுவரை தீர்வுக்கு கொண்டுவரப்படாத தேசிய இனமுரண்பாடும் ஒடுக்கு முறையும் தொடர்ந்தும் பிரதான இடத்திலேயே நீடித்து வருகின்றது.எனவே இத் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமன்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் அவசியமானதாகும்.
தேசிய இனமுரண்பாட்டிலும் ஒடுக்கு முறையிலும் ஆளும் வர்க்கப் பெருமுதலாளியமும் பேரினவாதமும் ஒருபுறமாக இருந்துவர தமிழ் முஸ்லீம் மலையகத்தமிழ் தேசிய இனங்களும் ஏனைய பறங்கியர், மலேயர்,பழங்குடிகள் என்போர் சிறு சமூகங்களாகவும் மறுபுறததில் இருந்து வருவதே இனப்பிரச்சினையின் முழுமையாகும்.தேசிய இனப்பிரச்சினை என்பது வெறுமனே சிங்கள தமிழ் முரண்பாடு அல்ல என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும்.இத்தேசிய இனப்பிரச்சினையில் தமிழ் மக்கள் மத்தியில் ஆதிக்க அரசியலைக் குறுந்தேசியமாக முன்வைத்து வரும் உயர்வர்க்க மேட்டுக்குடித் தமிழத்; தலைமைகள் முன்வைக்கும் தீர்வுகள் குறுகலானவையும் இனவெறுப்பூட்டுவவையாகவும் பேரினவாதிகளுக்கும் அந்நிய சக்திகளுக்கும் தீனியும், உவப்பும் தரக் கூடியவைகளாகும்.
எனவேதான் இன்றைய நிலையில் இதுவரையிலும் பின்பற்றப்பட்டுவரும் தமிழ் தேசியம் என்பது நிலவுடமைக் கருத்தியில் சிந்தனைக்குட்பட்டதாக இருந்து வந்திருக்கின்றது. அதனையே எமது கட்சி பிற்போக்கான தமிழ் தேசியமாக அடையாளம் காண்கின்றது.இப்பிற்போக்கு தேசியம் முஸ்லீம், மலையகத் தேசியங்கள் மத்தியிலும் காணப்படுகின்றது. எனவேதான் கட்சி தனது 6 வது மாநாட்டின் மூலம் முற்போக்குத் தேசிய ஜனநாயகத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் அறைகூவலை அனைத்து தேசிய இனங்களின் மத்தியிலும் இருந்து வரும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு விடுக்கிறது. எமது கட்சியின் அடிப்படை நிலைப்பாடு தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களின் ஜக்கியப் பட்ட புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களினால் புதிய ஜனநாயக புரட்சியை வென்றெடுத்து சோசலிசத்தை நிலைநிறுத்துவதாகும். இது எமது நீண்டகால இலக்காகும். அதே வேளை தேசிய இனப்பிரச்சினையின் தீர்வுக்கும் ஏனைய பிரச்சினைகளுக்கும் முற்போக்கு ஜனநாயக மக்கள் சார்பு சக்திகள் அணிதிரள முன்வரும் போது அச்சக்திகளுடன் இணைந்து நிற்கவும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்கவும் எமது கட்சி தனது பங்களிப்பையும் வழிகாட்டலையும் வழங்கும். என மாநாடு உறுதிப்படுத்திக் கொண்டது.
ஏற்கனவே தேசிய இனப்பிரச்சினையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் வாக்கு வங்கிக்கான தேர்தல் புள்ளடி அரசியலுக்கு அப்பால் எமது கட்சி ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பக்கத்தில் நின்று போராடி வந்துள்ளது.அவற்றை மேலும் விரிவுபடுத்தி நாட்டின் ஏனைய முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அவற்றின் நீட்சியும் வளர்ச்சியுமே சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஜக்கியப்பட்ட இலங்கையில் சுயாடசியையும் சுயாட்சி உள் அமைப்புகளையும் சுயநிர்வாக அலகுகளையும் வென்றெடுத்து தேசிய இனப்பிரச்சினைக்கு நின்று நிலைக்கக் கூடிய தீர்வைக் காணமுடியும். இதனை நீண்டகால தீர்வாக முன்வைத்த மாநாடு உடனடித் தீர்வாக அதிகாரப் பகிர்வை மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி சபைகளுக்கும் வழங்குவதன் மூலம் சுயாட்சி தீர்வு நோக்கிய பயணத்தை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையினை மாநாடு சுட்டிக்காட்டியது. இதற்குரிய வழியில் செயற்படுவதற்கு முற்போக்கு தேசிய ஜனநாயகத்தின் அடிப்படைகளை விளங்கி ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டினதும் புலம்பெயர்ந்த நாடுகளினதும் மக்கள் மத்தியில் உள்ள நேர்மையான மக்கள் சார்பு சக்திகள் முன்வரல் வேண்டும் என்ற அழைப்பையும் இம் மாநாடு விடுத்துக் கொண்டது.
மேலும் இன்றைய சர்வதேச நிலைமைகள் பற்றி விவாதித்த மாநாடு இன்று உலக மேலாதிக்கத்திற்காக கரங்களையும் கால்களையும் உலகில் அகல வைத்து வரும் ஜக்கிய அமெரிக்க தலைமையிலான ஏகாதிபத்தியக் கூட்டே இலங்கை மக்கள் உட்பட உலக மக்களின் பிரதான எதிரியாக இருப்பதை சுட்டிக் காட்டியது. அதேவேளை பிராந்திய மேலாதிக் சக்தியான இந்திய ஆளும் வர்க்க தலைமையானது மிரட்டலாக இருந்து வருகின்றது. இலங்கையும் இத்தகைய தலையீட்டு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றது என்ற யதார்த்தத்தை எவ்வகையிலும் புறந்தள்ள இயலாது என்பதையும் மாநாடு கவனத்திற்கு எடுத்தது.
இவ்வாறு தேசிய சர்வதேச நிலைமைகள் பற்றிய அறிக்கைகளை விவாதித்து முடிவுகளுக்கு வந்த மேற்படி மாநாடு வேலைத்திட்டத்தினையும் 15 தீர்மானங்களையும் நிறைவேற்றிக் கொண்டது. மாநாட்டின் முடிவில் 16 பேர் கொண்ட புதிய மத்திய குழுவினையும் தெரிவு செய்து கொண்டது. அம் மத்திய குழு தோழர் சி.கா.செந்திவேலை பொதுச்செயலாளராகவும் தோழர் வெ.மகேந்திரனை தேசிய அமைப்பாளராகவும் தோழர் க.கணபதிராஜனை பொருலாளராகவும் தெரிவு செய்து கொண்டது. மேலும் மாநாடு மறைந்த தோழர்களுக்கான செவ் அஞ்சலியையும்; நீண்டகால கட்சிப்பணியாற்றிய தோழர்களுக்கான பாராட்டுக்களையும் கௌரவத்தையும் வழங்கிக்கொண்டது.

சி.கா.செந்திவேல்
பொதுச்செயலாளர்

Exit mobile version