Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இணக்கப்பாட்டு அரசியலும்-ஒடுக்கப்படும் மக்களின் போராட்டங்களும்:ஆனந்தத் தாண்டவன்

  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நேற்றைய பிபிஸி  நேர்காணலைக் கேட்ட போது கவுண்டமணியினுடையதும் வடிவேலுவினதும் வாழைப்பழ நகைச்சுவை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
 
தமிழ் திரைப்பட கதாசிரியர்கள் யாராவது நேற்றைய பிபிஸியைக் கேட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அதிலிருந்து உருவி எடுத்திருப்பார்கள்  என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிங்கப்பூரின் நாளிதழான ஸ்ரெய்ட் ஸ்ரெய்ட் ரைம்ஸ் நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலை அடியொற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பி.பி.ஸிசெய்தியாளர் எழுப்பிய கேள்விகளும் அவற்றுக்கு அமைச்சர் அளித்த பதில்களுமே அந்த வாழைப்பழ நகைச்சுவையை ஞாபகத்திற்குக் கொண்டு வந்தது.
 
போரில் கிடைத்த வெற்றியும் சர்வதேசத்தின் கையாலாக நிலைமையும் எதிர்க்கட்சிகளின் பலவீனமும் மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்க முடியாத் தலைவனாக ஆக்கியிருக்கிறது. கூடவே இது அவருக்கு மிகுந்த பலத்தையும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது.
 
சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அவரது அரசாங்கம் மேற்கொண்ட மேற்கொண்டு வருகின்ற நடவடிக்கைகள் காரணமாக அவர்களது வாக்குகள் ஒரு போதும் தனக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை மிகத் தெளிவாக அவர் அறிந்திருந்தார். அதனால் அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் தனக்குக் கிடைக்காத சிறுபான்மையின வாக்குகள் வேறெந்தக் கட்சிக்கும் கிடைக்காமல் அவற்றைச் சிதறடித்து விடுவது. இதன் விளைவு தான் வடக்கு கிழக்கில் ஏராளமான சுயேச்சைக்குழுக்களும், பெயரறியாக் கட்சிகளும் தேர்தலில் களமிறங்கிருப்பது.
 
மறுபுறத்தில் சிங்கள வாக்குகள் தான் அவருடைய ஒரே குறி. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த அவர்களது வாக்கு வங்கியை அபகரிக்க அவர் பேரினவாதத்தை கையிலெடுப்பதைத் தவிர வேறு  வழி இல்லை.
 
சிங்கப்பூர் நாளிதழின் நேர்காணல் அதனைத் துல்லியமாக வெளிக்காட்டுகின்றது.
 
அதில் அவர் மூன்று விடயங்களை அழுத்தி உரைத்திருக்கிறார்.
 
முதலாவது விடயம் சமஷ்டி. அரசியலிலிருந்து ஓய்வு பெற எண்ணுபவர்கள் தான் சமஷ்டி பற்றிப் பேசுவார்கள்.  சமஷ்டியானது இலங்கையில் செல்வாக்கு பெறாத வார்த்தையாகும். பிரிவினையுடன் இது அதிகளவு தொடர்புபட்டதொன்றாகும் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.
 
இரண்டாவது,  நீதி மன்ற அனுமதி ஊடாக பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒரு போதும் இணைக்கபட மாட்டாது என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
 
மூன்றாவது தற்போதைய மாகாணசபைகளுக்கு இருக்கின்ற பொலிஸ் மற்றும் காணி அதிகாரத்தைக்கூட தான் ஒரு போதும் வழங்கப் போவதில்லை என்று தெரிவித்த அவர் இந்தியாவின் அனுபவத்திலிருந்து தான் பாடங்களைக் கற்றுள்ளதாகவும், மாயாவதியின் உத்திரப்பிரதேச மாநில அரசாங்கம் அங்கு சோனியா காந்தி செல்வதற்கு அனுமதி வழங்க மறுத்த விடயத்தையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
 
இலங்கையின் சிறுபான்மை இனங்களான தமழர்கள், முஸ்லிம்கள். மற்றும் மலையக மக்களுடன் எத்தகைய அதிகாரப் பகிர்விற்கும் இடமில்லை என்பதை தெட்டத் தெளிவாக விளக்குகிற இந்த நேர்காணல் குறித்து பிபிஸி அமைச்சர் தேவானந்தாவை திரும்பத் திரும்பக் கேட்ட போதும் தனக்கும் அரசாங்கத்திற்கும் ஆன உடன்பாடு 13வது திருத்தச் சட்டம் குறித்தானது என்றும், அது எவ்வாறாயினும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வாதித்ததோடு மட்டுமல்லாமல், தமிழர் தரப்புக்கள் இனப்பிரச்சினைக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை எல்லாம் எதிர்ப்பு அரசியல் நடாத்தி வீணடித்து விட்டன என்றும் தான் மேற்கொள்ளும் இணக்கப்பாட்டு அரசியலினூடாக அவற்றை அடையலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
 
இந்த இணக்கப்பாட்டு அரசியல் என்பது வெறுமனே டக்ளஸ் தேவானந்தாவின் கண்டு பிடிப்போ தெரிவோ அல்ல. விடுதலைக்காகப் போராடும் மக்களின் போராட்டத்தை ஒழித்துக் கட்டவும் சமரசத்துக்குட்படுத்தவும் நீர்த்துப் போகச் செய்யவும் மேற்குலகம் வார்ப்புச் செய்து அரச சார்பற்ற நிறுவனங்கடாகவும் தமது ஏஜென்டுகள் ஊடாகவும்  போராட்டம் நடைபெறும் நாடுகளில் விதைக்கப்பட்ட ஒரு  நச்சுவிதையே இது.
 
குமார் ரூபசிங்க முதல் ஜெகான் பெரோரா ஈறாக தயான் ஜயதிலக வரை பல்வேறு அரசசார்பற்ற நிறுவனப்பிரதிநிதிகள் இது குறித்து பேசி வந்திருக்கிறார்கள். இந்த இணக்கப்பாட்டு அரசியலின் அபத்தம் என்னவென்றால் ஒடுக்குமுறையாளர்கள் தமது நிலையிலிருந்து விட்டுக்கொடுத்து ஒரு இணக்கப்பாட்டுக்கு ஒரு போதும் வர மாட்டார்கள். அவ்வாறு அவர்கள் வரவேண்டுமென்று எந்தச் சர்வதேசமும் எந்த அரச சார்பற்ற நிறுவனங்களும் அவர்களுக்கு அழுத்தம் எதனையும் கொடுக்க மாட்டார்கள்.
 
மாறாக ஒடுக்கப்படுபவர்கள் தமது கோரிக்கைகளில் விட்டுக் கொடுப்புச் செய்து விட்டுக் கொடுத்து இணக்கத்திற்குச் செல்லல் வேண்டும். அவ்வாறு ஓடுக்கப்படுபவர்களின் சார்பான தரப்புக்கள் அல்லது பிரதிநிதிகள் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
 
இலங்கையின் இனப்பிரச்சினையில் சர்வதேசத்தின் தலையீடும் அதன் அநுசரணையும் அதன் இறுதி விளைவும் இந்த இணக்கப்பாட்டு அரசியலுக்கு ஒரு இரத்தமும் சதையுமான உதாரணம்.
 
இப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிகாரப் பகிர்வும் இல்லை சமஷ்டியும் இல்லை. வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை என்று தெட்டத் தெளிவாகச் சொன்னதென்பது சிறுபான்மை இனங்களுடைய அரசியல் அபிலாசைகளை சிங்கள சமூகம் அங்கீகரித்து அவர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாரற்ற நிலையிலேயே இன்னமும் இருந்து வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.
 
அதுவும் விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அரசியல் தீர்வு என்ற பதம் பெயரளவிலேனும் பயன்படுத்தப்பட்டு வந்ததும், அவர்களுடைய இருப்பு அற்றுப் போனதுடன் அதைப் பற்றிய பேச்சையே தவிர்த்து வருவதும் உண்மையிலேயே ஒரு இராணுவத் தீர்விலேயே தென்னிலங்கை குறியாக இருந்து வந்திருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
 
இந்த யதார்த்தம் எதனையும் கணக்கிலெடுக்காமல் விடுதலைப் புலிகள் தான் தீர்வுக்குத் தடை. அவர்கள் இல்லாவிட்டால் தென்னிலங்கை தமிழ் மக்களுடன் எத்தகைய அதிகாரப் பகிர்விற்கும் தயாராக இருக்கிறது என்றும், பொல்பொட் போன்ற ஒரு சர்வாதிகாரக் கும்பலிடம் அதிகாரம் சென்று விடக் கூடாதே என்பதற்காகத் தான் விடுதலைப்புலிகளுடன் அதிகாரப் பகிர்விற்கு தென்னிலங்கை தயாரற்றிருக்கிறது என்றும் எழுதியும் பேசியும் வந்த புத்திஜீவிகளுடைய தற்போதைய மௌனத்திற்கும் டக்ளஸ் தேவானந்தாவின் இணக்கப்பாட்டு அரசியலுக்கும் அதிக வேறுபாடில்லை.  இரண்டுமே சாராம்சத்தில் ஒடுக்கப்படும் மக்களுடைய நலன்களுக்கு எதிரானவை. ஒடுக்குபவர்களுக்கு ஆதரவானவை.
 
ஆக, பிபிஸியில் நாங்கள் கேட்டது டக்ளஸ் தேவானந்தாவின் குரலை மட்டும் அல்ல. இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்த அரச சார்பற்ற நிறுவனங்கள், அவற்றின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், கட்சிகள், மேற்குலகத்தினர் என்று பல்வேறு தரப்பினருடைய குரல்களாகவும் அது இருந்தது. இருக்கிறது. இருக்கும்.
 
ஆனால் அது ஒரு போதும் விடுதலை வேண்டி நிற்கிற விடுதலையை அவாவி நிற்கிற ஒடுக்கப்படுகிற மக்களுடைய குரலாக இருக்காது.
http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=22192&cat=1

Exit mobile version