Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடிந்தகரையிலிருந்து உதயகுமார்

அன்பு நண்பர்களே!

புஷ்பராயனும், நானும் இன்னபிற 12 நண்பர்களும் மிகவும் சோர்வாகாவும், பலவீனமாகவும் ஆகி வருகின்றோம், ஆனால் இன்றும் நாங்கள் மக்களுடன் அமர்ந்து பேசும் பலத்துடனே உள்ளோம். தொடர்ச்சியான (சாகும்வரை) உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கி இன்றோடு ஏழாவது நாள் ஆகிவிட்டது. மாநில அல்லது மத்திய அரசில் இருந்து யாரும் வந்து எங்களைப் பார்க்கவோ, எங்களிடம் பேசவோ இல்லை. 23ஆம் திகதி ஒரு மருத்துவக் குழு எங்களது உடல்நிலையைப் பரிசோதிக்க வந்தது. ஆனால் மார்ச்19லிருந்து இங்கு 10,000த்திற்கும் அதிகமான மக்கள் தொடர்ந்து குழுமி வருகின்றனர். இவர்களுக்கு உதவ எந்த ஒரு சுகாதார அலுவலரும் இங்கு வரவேயில்லை. 144 தடையுத்தரவு இன்னும் இங்கு அமலில் இருப்பதால் மக்கள் இங்கேயே தூங்கி வருகின்றார்கள். அவர்களுக்காக ஒரு எளிய உணவை இங்கு இடிந்தகரையில் உள்ள நண்பர்களே சமைத்துத் தருகின்றார்கள். புனித லூர்து ஆலயத்தைச் சுற்றியுள்ள இந்த கால்பந்து மைதான அளவுள்ள இடத்தை விட்டு அவர்கள் வெளியே செல்ல அஞ்சுகின்றார்கள். எனது, புஷ்பராயனுடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்து நாங்கள் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்வோம்; அப்பொழுது எங்களை கைது செய்யலாமென காத்திருக்கின்றார்கள் காவல்துறையினர். எவ்வளவு குரூரமாகவும், மக்களுக்கு எதிராகவும் நம் அரசுகள் மாறிவிட்டன!

அணுஉலையினால் தங்களது இடங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களுக்காக அரசு ஒதுக்கியுள்ள 500 கோடி ரூபாயை தமிழக அரசு இங்குள்ள 13 உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர்களைக் கூட்டி எப்படி அந்தத் தொகையை செலவு செய்யலாம் என திட்டமிட்டுள்ளது. மாநில காவல் துறை மக்களைக் கைது செய்வதையும், பொய்வழக்குகள் போடுவதையும் தொடர்ந்து வருகின்றது. நேற்று கூடங்குளத்தில் மூவரை கைது செய்ய முயன்று முடியாமல் வாரண்டை மட்டும் கொடுத்துச் சென்றுள்ளார்கள். சில கடற்கரை கிராமங்களுக்குச் சென்ற காவல்துறை இயல்புநிலை திரும்பிவிட்டதெனக் காட்டுவதற்காக அங்குள்ள மீனவர்களை மீன்பிடிக்கச் செல்லக் கட்டளையிட்டுள்ளார்கள். அதேபோல இடிந்தகரை மக்களுக்கு இங்கிருந்து எந்த உணவுப்பொருளும் படகில் எடுத்துச் செல்லக்கூடாதென்றும், அவ்வாறு எடுத்துச் சென்றால் வழக்கு பதியப்படும் என்றும் மிரட்டியுள்ளார்கள். மக்கள் இதுபோன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சுவதில்லை.

இந்தப் போராட்டமானது (எங்கள் எதிரிகளின் பார்வையில் இது “போர்”) பணக்கார, பிரபலமான, அதிகாரபலம் கொண்ட உயர்ந்த வகுப்பிற்கும், பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவான உயர்சாதியைச் சேர்ந்தவர்களுக்கும், ஏழை, முகம் தெரியாத, அதிகாரமற்ற நீடித்து நிலைக்கக்கூடிய வளர்ச்சிக்காகப் பாடுபடும் கீழ்தட்டு, தாழ்த்தப்பட்ட சாதிமக்களுக்கும் இடைப்பட்டதாகும். இங்கிருக்கும் அரசோ இந்திய மக்களுக்கு ஆதரவாக செயல்படாமல் இரசியாவில் உள்ள ஒரு சிலரின் இலாபத்திற்காக செயல்பட்டு வருகின்றது. மேலும் அதிகப்படியான செயற்கையான மின்வெட்டை உருவாக்கி பெரும்பாலான மக்களை எங்கள் மேல் கோபம்கொள்ளும்படியும், எங்கள் போராட்டத்திற்கு எதிராக செயல்படவும் தூண்டுகின்றது அரசு.

இப்பொழுது கூடங்குளம் அணுஉலைப் பணிகள் தொடங்கிவிட்டன, இவ்வுலைகளில் இருந்து மின்னுற்பத்தி தொடங்குவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாதென அங்குள்ள அலுவலர்கள் கூறுகின்றனர். இன்றைய மின்பற்றாக்குறைக்கு கூடங்குளம் காரணமல்ல என்பது இப்பொழுது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்திருக்கும். இதுபோலவே பேச்சிபாறை அணையிலிருந்து அணுஉலைக்கான நீரெடுப்பது பற்றியும், அந்நீரை சுத்திகரிப்பதற்கான ஆலை அமைப்பது பற்றியும், இவ்வுலையில் உருவாக்கப்படும் அணுகுண்டுகள், அணுக்கருவிகள் பற்றிய உண்மையும் இன்னும் கொஞ்சகாலத்தில், தமிழ்நாட்டு, இந்திய மக்களுக்குத் தெரியவரும்.

இந்தியா மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள ஒரு நாடு. அணுஉலைகளில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சனையோ, ஊழியர்களின் கவனக்குறைவோ அதைச் சுற்றி வசிக்கும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பறிப்பதற்கும், பேரழிவை உருவாக்குவதற்கும் போதுமானதாகும். இந்த நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். ஆனால் அந்த வளர்ச்சி எங்கள் அடுத்த தலைமுறைக்கும் பயன்படக்கூடிய ஒரு நீடித்து நிலைத்திருக்கக்கூடிய வளர்ச்சியாக இருக்க வேண்டும் என்றே போராடுகின்றோம். நமக்கு ஒரு நாற்பது ஆண்டு மின்னுற்பத்தி செய்வதற்காக நமது இயற்கை வளங்களுக்கும், அடுத்த தலைமுறைக்கும் நஞ்சு புகட்டுவதற்கு நமக்கு எந்த உரிமையோ, அறமோ கிடையாது. இரசிய, அமெரிக்க ஐக்கிய, பிரெஞ்சு நாடுகளின் அடிமையாக இந்தியா இருப்பதைவிட, உள்நாட்டு வளங்களையும், புதிய எண்ணங்களையும் கொண்ட ஒரு மின்னுற்பத்தித் திட்டத்தைக் கொண்டு உலகில் ஒரு முன்னோடியாக இந்தியா இருக்க வேண்டும் என எண்ணுகின்றோம்.

இங்கிருக்கும் அரசுகள் எங்களுக்கு எதிராக அடுத்த கருவியை எடுத்து விட்டன, நக்சலுடன் (மாவோயிசுட்டுகள்) எங்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறும் பொய்க்குற்றச்சாட்டுதான் அது. எங்களுக்கும் நக்சல் இளைஞர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாகக் கூறும் பொய்யான தரவுகளையும், சாட்சியங்களையும் அவர்கள் உருவாக்கி எங்கள் போராட்டத்தை வன்முறையான போராட்டம் என முத்திரை குத்தத் துடிக்கின்றனர். துளிகூட வன்முறையோ, பயங்கரவாத செயல்களோ அன்றி கடந்த எட்டு மாதங்களாக அமைதியான முறையில் நாங்கள் போராடிவருவது இவ்வுலகத்திற்கு நன்கு தெரியும். “வெளிநாட்டுப் பணம்”, ”வெளிநாட்டு சதி” என்று பொய்யான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்து அவர்கள் தோற்றுப் போனது போலவே இதிலும் அவர்கள் தோல்வியடைவார்கள்.

இந்த அரசுகள் ‘சாதாரண குடிமகன்கள்’ குறித்த தங்களது மதிப்பீட்டை அவர்களே ஒத்துக்கொள்ளுமாறு செய்ய வெளிப்படையாகத் தூண்டுகிறது. சாதாரண குடிமகன்களுக்கு சொந்த மூளை கிடையாது; அவர்களுக்கு சுயமாக சிந்திக்கத் தெரியாது; அவர்களது உரிமைகளுக்காக அமைதியான முறையில், ஒத்துழையாமை போராட்டத்தை முன்னெடுக்கத் தெரியாது; மீனவர்கள், தலித்துகள், நாடார்கள், இசுலாமியர்கள், பெண்கள், குழந்தைகள் இவர்களெல்லாம் சென்னை, தில்லியை மையமாகக் கொண்ட சில கோடீசுவரர்களின் வளர்ச்சிக்காகத் தூக்கி எறியப்பட வேண்டியவர்கள். சாதாரண குடிமகன்கள் குறித்த அரசின் கோட்பாடு இதுதான்.

இதுதான் உலகமயமாக்கத்தின் கோட்பாடாகும், இதைத்தான் நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம்.

மக்கள் சக்தியா அல்லது அணுசக்தியா? அறம் சார்ந்த சக்தியா அல்லது பணம் சார்ந்த சக்தியா? குடிமக்கள் சக்தியா அல்லது அரசு சக்தியா? நீங்கள் எந்த பக்கம்? என்று தமிழ்நாட்டு, இந்திய மக்கள் யோசிக்க வேண்டிய தருணமிது.

இந்த மக்களும், நானும் இந்த உண்ணாநிலைப் போராட்டத்திலோ அல்லது முதுமை அடைந்தோ ஒரு நாள் இறந்து போவோம், ஆனால் நாமும், நம் தலைமுறையும் வாழ வேண்டிய நாடு, உலகம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டிய தருணமிது. இதில்தான் மனித அரசியலின் சாராம்சம் அடங்கியிருக்கின்றது. செர்மானிய மதபோதகர் கூறிய வைர வரிகளுடன் இவ்வறிக்கையை நிறைவு செய்கின்றேன்.

முதலில் அவர்கள் கம்யூனிசுட்டுகளைக் கொல்ல வந்தார்கள்,
நான் அவர்களுக்காக பேசவில்லை,
ஏனென்றால் நான் கம்யூனிசுட்டு அல்ல.

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைக் கொல்ல வந்தார்கள்.
நான் அவர்களுக்காக பேசவில்லை,
ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பின்னர் அவர்கள் யூதர்களைக் கொல்ல வந்தார்கள்.
நான் அவர்களுக்காக பேசவில்லை,
ஏனென்றால் நான் யூதனுமல்ல.

இறுதியாக அவர்கள் என்னைக் கொல்ல வந்தார்கள்,
அன்று எனக்காகப் பேச ஒருவருமில்லை.

உதயகுமார்
இடிந்தகரை

Exit mobile version