பாகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதக் கும்பல்களால் இடித்துத் தள்ளப்பட்ட இந்துக் கோவில் ஒன்றை உடனடியாக கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்காலம் முதல் இந்து முஸ்லீம் மதப்பிரிவினையும், கலவரங்களும் இரு மதங்களைச் சார்ந்த மத வெறித் தலைமைகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பழமையான பாபர் மசூதி 1992-ஆம் ஆண்டு இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இந்திய வரலாற்றையே அது புரட்டிப் போட்டு விட்டது.நீண்ட காலம் நடந்த அந்த வழக்கின் முடிவில் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ராமர்கோவில் கட்டவும் அனுமதியளித்தது.இது பல விவாதங்களை இந்தியாவில் உருவாக்கிய நிலையில்,கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தானில் உள்ள கரக் மாவட்டத்தில் உள்ள டெர்ரி என்ற கிராமத்தில் உள்ள பழமையான இந்துக் கோவில் ஒன்றை ஜமியத் உலேமா இ இஸ்லாம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில் ஒரு கும்பல் இடித்து தரை மட்டமாக்கியது. இது பாகிஸ்தானில் பலத்த சர்ச்சைகளை உருவாக்கியது. இந்தியாவிலும் பதட்டங்களை உருவாக்கியது.
இந்நிலையில், இந்த வழக்கில் உடனடியாக பாகிஸ்தான் அரசு 19 பேரை கைது செய்தது. இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கடுமையான சட்டங்களின் கீழ் இந்துக் கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்தது.அத்தோடு அங்குள்ள சிறுபான்மை இந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டது. அத்தோடு உடனடியாக அந்த இடத்தில் இந்துக் கோவிலை கட்டிக் கொடுக்கும் படியும். அந்த கோவில் எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதை அரசு நீதிமன்றத்திற்கு தாமதமின்றி தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.