Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்கு நோய்த்தொற்று ஆபத்து: உதவிப் பணியாளர்கள் அச்சம்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இரண்டு இலட்சம் வரையிலான மக்கள் மோசமான நோய்த் தொற்றுக்களுக்கு ஆளாகக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

நெருக்கமான குடியேற்றம், சுகாதாரச் சீர்கேடு, போதிய மருத்துவ வசதிகள் இன்மை போன்றவற்றாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

வவுனியா

அரசாங்க புள்ளிவிபரங்களின்படி இதுவரையில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருப்பவர்களின் எண்ணிக்கை 184,609ஐத் தாண்டுகிறது. இவர்களில் 169,459 பேர் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 33 முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதில், ஏப்ரல் 20ம் திகதிக்குப் பின்னர் வவுனியாவுக்கு வந்த ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் செட்டிகுளம் மனிக் ஃபாம் மற்றும் ஒரு சில முகாம்களிலே தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கழிப்பறை மற்றும் குழியறை வசதிகள் இன்னமும் முழுமையாகச் செய்துகொடுக்கப்படாத நிலையில், மிகவும் மோசமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கு இவர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

சில முகாம்களில் தற்காலிக மலசலகூடங்கள் கட்டப்பட்டுள்ளபோதும், அங்குள்ள மக்களின் எண்ணிக்கைக்கு அவை போதியதாக இல்லாதிருப்பதுடன், முறையாக பராமரிக்கப்படாத நிலைமையும் காணப்படுகிறது. இதனால், முகாம் சுற்றாடல் முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று அபாயமும் ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாணம்

யாழ் குடாநாட்டிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது இடங்களில் சுமார் 11.150 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இங்கு சில இடங்களில் போதியளவு மலசலகூட வசதிகள் இல்லாத நிலையில், சுமார் ஆயிரம் பேர் வரையிலானவர்கள் ஒன்று அல்லது இரண்டு மலசலகூடங்களைப் பயன்படுத்தும் நெருக்கடியான நிலைமை காணப்படுகிறது.

இதுதொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச்சொல்லியும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று இந்த முகாம்களில் வசிப்போர் அங்குள்ள உதவிப் பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை போதியளவு அடிக்கட்டுமான வசதிகள் இல்லாத வவுனியாவில் வைத்துப் பராமரிக்க முடிகின்றபோதுரூபவ் போதிய வசதிகள் உள்ள யாழ்ப்பாணத்தில் சிறிய தொகை மக்களை சரியாகப் பராமரிக்க முடியாமல் இருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று அவர்கள் வேதனையுடன் தம்மிடம் தெரிவித்ததாக உதவிப் பணியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை

திருகோணமலை மாவட்டம் புல்மோட்டையில் சுமார் 5ரூபவ்000 பேர் வரையில் மூன்று பாடசாலைகளில் மிகவும் நெருக்கமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நோயாளர்களை தனியே வைத்துப் பராமரிக்கும் வசதியற்ற நிலையில் இவர்கள் அங்கு வசித்து வருவதால் பாரிய சுகாதார நெருக்கடி தோன்றும் அபாயம் இருப்பதாக சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த முகாம்களில் சின்னமுத்துரூபவ் அம்மை நோய் உட்பட பல ஆபத்தான தொற்று நோய்கள் விரைவாகப் பரவக்கூடிய ஏதுக்கள் இருப்பதாக இங்கு மேற்கொள்ளப்பட்ட சுகாதார மதிப்பீட்டின்படி தெரியவந்துள்ளது.

மலசலகூட வசதியீனங்கள், சோப் போன்ற தனிப்பட்ட சுத்தம் பேணும் பொருள்கள் இல்லாமையாலேயே சுகாதார நெருக்கடிகள் அதிகரிப்பதாக இந்த மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது.

பெண்கள், சிறுவர்கள் அவதி

முகாம்களில் வசிக்கும் பெண்களும், சிறுவர்களுமே இந்தச் சுகாதார நெருக்கடிகளுக்கு அதிகளவில் முகம் கொடுத்துள்ளனர். பெண்களின் விசேட தேவைகளை நிறைவேற்றுவதற்கான சாதனங்கள் இல்லாமைரூபவ் உள்ளாடைகள், மாற்றுடுப்புக்கள் இல்லாமை, சிறுவர்களுக்கான விசேட குளியல் சாதனங்கள், தொற்றுநீக்கி வசதிகள் இல்லாமை போன்றவற்றால் இவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

அணிந்திருந்த ஆடைகளுடன் மட்டுமே பெரும்பாலும் முகாம்களுக்கு வந்திருக்கும் இந்த மக்கள், நீண்டகாலமாக அவற்றை மாற்ற முடியாமலும், குளியல் வசதியீனங்கள், குளித்தாலும் மாற்றுடுப்பு இல்லாத நிலைமை போன்றவற்றாலும் அவதிப்படுகின்றனர்.

கடுமையான கோடை காலத்துக்கு அவசியமான குளியல் வசதிகள், மாற்றுடுப்புக்கள் இல்லாததாலும் நோய்களுக்கு இலக்காகும் நிலைமை இருப்பதாக இங்குள்ள சுகாதாரப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

இன்னும் வன்னியில் மோதல் நடைபெறும் பகுதிகளில் சிக்கியுள்ள சுமார் ஒரு இலட்சம் பேர் வரையானவர்கள் அடுத்துவரும் நாட்களில் இடம்பெயர்ந்து வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த நிலைமை மேலும் மோசமாகும் அபாய நிலை ஏற்பட்டிருப்பதாக உதவிப் பணியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Exit mobile version