Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடதுசாரி இயக்கமே இக்காலக்கட்டத்துக்கு ஒத்துவராததாகிவிட்டது – சொல்கிறார் சோம்நாத் சட்டர்ஜி.

சி.பி.எம் கட்சியின் நீண்ட கால அரசியல் வாழ்கைக் கொண்ட சோம்நாத் சட்டர்ஜி சி.பி.எம் கட்சி தொடர்பாகவும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2009 மக்களவைத் தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்ததற்கும், தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதற்கும் பிரகாஷ் காரத்தின் தவறான வழிகாட்டுதலே முழுக்காரணம் என்று மக்களவை முன்னாள் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி குற்றம்சுமத்தியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். 1971-ல் இருந்து 10 தடவை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தனது நீண்டகால அரசியல் அனுபவங்களையும், மலரும் நினைவுகளையும் அந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ள இந்த புத்தகத்தில்தான் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் மீது சோம்நாத் சாட்டர்ஜி இவ்விதம் குற்றம்சுமத்தியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூறியுள்ள சில தகவல்கள் வருமாறு: மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலத்த பின்னடவை சந்தித்தது. தற்போது அதன் செல்வாக்கு இறங்கு முகமாகவே உள்ளது. இதற்கு பிரகாஷ் காரத்தின் மோசமான கொள்கைகளும், தவறான வழிகாட்டுதலுமே முழுக் காரணம் ஆகும். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டை அடுத்து அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மார்க்சிஸ்ட் கட்சி வாபஸ் பெற்றது. அப்போது மக்களவைத் தலைவராக இருந்த என்னையும் பதவியை துறக்குமாறு கட்சியில் நெருக்குதல் அளித்தனர். ஆனால் இதற்கு நான் உடன்படவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்க விரும்பினேன். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினர் தங்களது உத்தரவுக்கு கீழ்ப்படியுமாறு வற்புறுத்தினர். இவ்வாறு அவர்கள் வற்புறுத்தியது நெறி தவறிய செயலாகும். கட்சியில் இருந்து எனக்கு நெருக்குதல் அளிக்கப்பட்டதும் கட்சியின் முதுபெரும் தலைவரான ஜோதி பாசுவை சந்தித்து என் நிலைமையை எடுத்துக் கூறினேன். அப்போது மக்களவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யக்கூடாது என்று எனக்கு அவர் அன்போடு அறிவுரை வழங்கினார். ஜோதி பாசுவின் அறிவுரைக்கு மதிப்பளித்தே மக்களவைத் தலைவர் பதவியில் நீடித்தேன். ஆனால் அதிரடியாக என்னை கட்சியைவிட்டு நீக்கினர். கட்சியைவிட்டு நீக்குவதற்கு முன்னதாக என்னிடம் எவ்வித விளக்கமும் கோரப்படவில்லை. எனக்கு எதிராக இப்படியொரு முடிவை எடுத்ததற்கு காரத்தே காரணம். இது அவரது அறியாமையையும், சகிப்புத்தன்மையற்ற செயலையுமே காட்டுகிறது. தற்போதைய தலைமையின் கீழ் இடதுசாரி இயக்கத்தின் செயல்பாட்டை பார்க்கும் போது இடதுசாரி இயக்கமே இக்காலக்கட்டத்துக்கு ஒத்துவராததாகிவிட்டது என்றும் அந்த புத்தகத்தில் சோம்நாத் சாட்டர்ஜி குற்றம்சுமத்தியுள்ளார்.

2009

Exit mobile version