மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரும், 1977 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை மேற்குவங்க மாநிலத்தில் இடது முன்னணி அரசின் முதல்வராக இருந்தவருமான தோழர் ஜோதிபாசு மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. அவருக்கு வயது 95.
பிரிட்டனில் சட்டப்படிப்பு பயின்று கொண்டிருந்தபோதே ஜோதிபாசு கம்யூனிஸ்டானார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி யோடு அப்போது அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. 1940 ஆம் ஆண்டு பிரிட்டனில் இருந்து திரும்பியவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் சேர்ந்தார். ரயில்வே தொழிற் சங்க இயக்கத்தில் இணைந்து பணியாற்றத் துவங்கிய அவர், பி.ஏ.(பெங்கால் -அசாம்) ரயில்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மற்றும் அகில இந்திய ரயில்வே தொழி லாளர் சம்மேளனம் ஆகியவற்றின் முக்கிய தலைவராக உயர்ந்தார். 1946 ஆம் ஆண்டில், ரயில்வேத் தொகுதியில் இருந்து வங்க சட்டமன்றத் திற்கு தேர்வு செய்யப்பட்டார்.
1953 முதல் 1961 வரை அவர் பிரதேசக்குழு செயலாளராக இருந்தார். 1951 ஆம் ஆண்டில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரானார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவக்கப்பட்டபோது அமைக்கப்பட்ட அரசியல் தலைமைக் குழு மற்றும் மத்தியக்குழு ஆகியவற்றில் இடம் பெற்றார். இந்தப் பொறுப்புகளில் அவர் தனது இறுதி மூச்சுவரை தொடர்ந்தார். பிரமோத்தாஸ் குப்தாவுடன் இணைந்து மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றினார்.
1957 முதல் 1967 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றிய போது முத்திரை பதித்தார். 1967 மற்றும் 1970 ஆண்டுகளுக் கிடையில் பதவியேற்ற ஐக்கிய முன்னணி அரசுகளில் இருமுறை துணை முதல்வராகப் பொறுப்பேற்றார். நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான போராட்டத்திலும் சரி, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு எதிராக காவல் துறையைப் பயன்படுத்துவதில்லை என்பதிலும் சரி அரசாங்கத்தில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
1970களின் துவக்கத்தில் அரைப்பாசிச வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்ட நெருக்கடியான காலத்தில் கட்சியை வழிநடத்திச் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஜோதிபாசுவும் ஒருவர். 1977 ஆம் ஆண்டில் இடது முன்னணியின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றார். அதில் அவர் தொடர்ந்து 23 ஆண்டுகள் பணியாற்றினார். இந்தியாவைப் பொறுத்தவரை, இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து யாரும் முதல்வ ராக இருந்ததில்லை என்பது சாதனையாகும். அவரது தலைமையின்கீழ், நாடு இதுவரை கண்டிராத அளவில் நிலச்சீர்திருத்தங்களை இடது முன்னணி அரசு மேற் கொண்டது. பஞ்சாயத்து ராஜ் அமைப்பை அந்த அரசு உருவாக்கியது. அக்காலத்தில் இது மிகவும் முற்போக்கானதாகும். பஞ்சாயத்து அமைப்பு களை நடத்துவதில் ஏழை மற்றும் சிறு விவசாயிகளுக்கு அதில் பங்கு கிடைத்தது. அவ ரது தலைமையின்கீழ் மத நல் லிணக்கமும், மதச்சார்பற்ற மாண்புகளும் நிறைந்த சோலையாக மேற்கு வங்கம் உருவானது. 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி படு கொலை செய்யப்பட்ட சமயத் தில், முதல்வராக ஜோதிபாசு எவ்வாறு செயல்பட்டார் என்பதை நினைவு கூருதல் அவசியம். நாடு முழுவதும் சீக்கியர் களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது அத்தகைய சம்பவங்கள் எதுவும் மேற்கு வங்கத்தில் நடக்க அவர் அனுமதிக்க வில்லை. அதேபோல், 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதும் பிரச்சனையை உருவாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
நாட்டின் இடது ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஜோதிபாசு அடையாளமாக திகழ்ந்தார். தங்கள் பிரச்சனைகளுக்காகப் போராடிய ஜோதிபாசுவை மேற்கு வங்க மக்கள் கொண்டாடினர். பெரும் மரியாதை செலுத்தினர். நாடாளுமன்ற அமைப்புகளில் பங்கேற்று மக்களுக்கு எவ்வாறு சேவை செய்ய வேண்டும் என்பதில் அனைத்து கம்யூனிஸ்ட்கள் மற்றும் முற்போக்காளர்களுக்கு அவர் முன் மாதிரியாக விளங்கினார்.
கம்யூனிஸ்ட் கட்சியில் அவர் பணியாற்றிய எழுபது ஆண்டுகளில் மூன்றரை ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்தார். இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார்.
முதல்வராகவும், இடது சாரித் தலைவராகவும் மத்திய-மாநில உறவுகளை முறைப்படுத்தக் கோரியும், அதற்காக மற்ற முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களைத் திரட்டுவதிலும் ஜோதிபாசு முக்கியப் பங்காற்றினார்.
1980களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், 90களில் பாஜகவுக்கு எதிராகவும் இடது மற்றும் மதச்சார்பற்ற கட்சி களை ஒன்று திரட்டுவதில் அவர் பிரதான பங்காற்றினார்.
தனது நம்பிக்கையில் ஒரு போதும் ஊசலாட்டம் காட்டாத மார்க்சிஸ்ட் ஜோதிபாசு. சோவியத் யூனியன் வீழ்ந்தபோதும், சோசலிசத்துக்கு பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் மார்க்சிய-லெனினியத்திற்கு உட்பட்டு, சோசலிசத்தைக் கட்டு வதில் ஏற்பட்ட அனுபவத்தை மறுபரிசீலனை செய்வது மற்றும் அதைப் புரிந்து கொள்வதில் உள்ள தவறான போக்கை சுட்டிக்காட்டி சரி செய்வது ஆகிய பணிகளைச் செய்வதில் தனது அரசியல் தலைமைக்குழு சகாக்களோடு தலைமைப் பங்காற்றினார். பிடிவாதக்காரராக இல்லாத மார்க்சிஸ்ட்டாக அவர் இருந்தார். தனது பரந்த அனுபவத்திலிருந்து தொடர்ந்து கற்றுக்கொண்டு கட்சிக்கு வழி காட்டினார்.
கட்சியின் முக்கியமான மற்றும் மக்கள் செல்வாக்குள்ள தலைவராக உயர்ந்தாலும், அனைவருக்கும் உதாரணமாக இருக்கும் வகையில் கட்சிக் கட்டுப்பாட்டை உயர்த்திப் பிடிப்பவராக இருந்தார். கட்சியில் பணியாற்றிய நீண்ட காலத்தில் `பீப்பிள்ஸ் டெமாக் ரசி’யின் முதல் ஆசிரியர் என்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்தார். தனது வாழ்நாள் முழுவதும் தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார். 1970 ஆம் ஆண்டு சிஐடியு துவங்கியதிலிருந்து அதன் துணைத்தலைவராக ஜோதிபாசு இருந்தார்.
தனது உடல்நிலை மற்றும் முதுமை காரணமாக 2000 ஆம் ஆண்டில் முதல்வர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். ஆனால் இறுதிநாள் வரை தனது வேலைகளையும், பொறுப்புகளையும் தொடர்ந்து செய்து வந்தார். கட்சிக்கும், தேசத்தின் இடதுசாரி இயக் கத்திற்கும் உத்வேகம் கிடைக் கும் வகையிலும், ஆலோசனைகளை தருபவராகவும் அவர் இருந்தார். எந்தக் கட்சி யைச் சேர்ந்தவர்களாக இருந் தாலும், அவற்றையெல்லாம் தாண்டி அனைவராலும் மதிக் கப்படக்கூடிய, ஏற்றுக் கொள்ளக்கூடிய தேசியத் தலைவராக அவர் இருந்தார்.
மேற்கு வங்க அரசின் தலைமைப் பொறுப்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் தலைவராகவும் நீண்ட காலம் இத்தகைய தேர்ச்சி யடைந்த மற்றும் அர்ப்பணிப்போடு செயலாற்றிய தலைவர் கிடைத்தது நாட்டின் இடதுசாரி இயக்கம் செய்த அதிர்ஷ்டமாகும். விலை மதிப்புமிக்க அவரது பாதையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது.
நம்மை விட்டுப் பிரிந்து சென்றுள்ள தோழரை அரசியல் தலைமைக்குழு வாழ்த்தி வணங்குகிறது. அவரது பணியையும், கொள்கைகளையும் முன்னெடுத்துச் செல்வோம் என்று நாம் உறுதி பூணுவோம். அவரது மகன் சந்தன் பாசு, பேத்திகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்ச லியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.