Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இடதுசாரிகளின் எதிர்ப்பு : இந்தியா தப்பித்தது-டி.ராஜா.

“மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை நாங்கள் எதிர்த்ததால்தான் தற்போதைய சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பி இருக்கிறது” என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர்.

பிரதமர் விருப்பம்

ஜப்பான் மற்றும் சீன பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பும் வழியில் பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், “இடதுசாரிகளின் பொருளாதார கொள்கைகளை நான் ஏற்காவிட்டாலும் கூட மதசார்பற்ற கட்சிகள் மற்றும் இடதுசாரிகளுடன் மீண்டும் இணைந்து செயல்படும் வழிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்ïனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் பதிலளித்துள்ளனர்.

சீதாராம் யெச்சூரி கூறியதாவது:-

பங்குச் சந்தையில் பென்சன் பணம்

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து நாங்கள் தடுத்ததால்தான், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் அழிந்து போகாமல் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. இல்லையென்றால் இன்சூரன்ஸ் மற்றும் வங்கி துறைகளில் அன்னிய ஆதிக்கம் செலுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்து இருக்கும்.

கடந்த 2006-ம் ஆண்டு பிரதமர் அறிவித்த படி, பென்சன் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இருந்தால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் தற்போது பாதிக்கப்பட்டு இருப்பார்கள். அதுபோல, அன்னிய இன்சூரன்ஸ் நிறுவனங்களை தாராளமாக அனுமதித்து இருந்தால் அமெரிக்காவில் உள்ள ஏ.ஐ.ஜி. நிறுவனத்தின் வீழ்ச்சி நம்மையும் கடுமையாக பாதித்து இருக்கும்.

அமெரிக்காவிடம் சரண்

இந்திய வங்கித் துறையில் 74 சதவீத பங்குகளை வெளிநாட்டு வங்கிகளுக்கு அளிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதை நாங்கள் தடுத்து இருக்காவிட்டால், தற்போது இந்திய வங்கிகள் அனைத்துமே நொடிந்து இருக்கும்.

இடதுசாரிகளை பார்த்து, “கெய்னேசியன் அடிப்படைவாதிகள்” என்று அடிக்கடி குற்றஞ்சாட்டி வந்தவர்தான், பிரதமர் மன்மோகன் சிங். ஆனால், நிதித்துறை ஜாம்பவான்களான அவர்களை (பிரதமர், நிதி மந்திரி) விட எங்களுடைய கருத்துகள் உயர்வானவை என்று நிரூபணம் ஆகி விட்டது.

தற்போது மதச்சார்பின்மை குறித்து மிகவும் ஆழமான கவலையை வெளியிட்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்காவிடம் முற்றிலுமாக சரண் அடையும் முன்பு யோசித்து பார்த்து இருக்க வேண்டும்.

இவ்வாறு சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

டி.ராஜா கூறியதாவது:-

பிரதமர் சுய பரிசோதனை

பிரதமர் மன்மோகன் சிங், தன்னுடைய பொருளாதார கொள்கைகளை முற்றிலுமாக சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு இன்னமும் தொடர்ந்து வருகிறது. இது முக்கியமான விஷயம்.

“இடதுசாரிகளின் நெருக்கடியால், கொத்தடிமை போன்ற நிலைமைக்கு தள்ளப்பட்டு வருகிறேன்” என்று இதே பிரதமர்தான் முன்பு கூறினார். பொருளாதார சீர் திருத்தத்தில் அவரிடம் இருந்து நாங்கள் முற்றிலும் வேறுபடுகிறோம். மதச்சார்பின்மை மட்டுமல்ல சம உரிமை மற்றும் சமூக நீதியுடன் கூடிய பொருளாதார மேம்பாட்டையே நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு டி.ராஜா தெரிவித்தார்.

Exit mobile version