Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா?:ஜே.வி.பி. எம்.பி.அநுரகுமார.

 

ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு வங்கியாக பயன்படுத்தவே 3 இலட்சம் மக்களும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி.பாராளுமன்றக் குழுத்தலைவரான அநுரகுமார திசாநாயக்க அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒரு நாளையேனும் அந்த முகாம்களில் கழிக்க முடியுமா என்றும் தமது பிள்ளைகளை முகாம் பகுதியில் தற்போதுள்ள வெள்ளச்சகதியில் நடக்கத்தான் அனுமதிக்க மனம் வருமா? என்றும் கேள்வி எழுப்பியதுடன் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது அனுபவிக்கும் அவலத்தை சபைமுன் கவலையுடன் விபரித்தார்.

அரசாங்கத்தில் உள்ளோருக்கு அரைவாசி மூளை இருந்தாலாவது யாழ்ப்பாணம், வவுனியா தேர்தலில் தமிழ்மக்கள் அளித்த தீர்ப்பை உணர்ந்து கொண்டிருப்பீர்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், 3 இலட்சம் மக்களையும் அலட்சியமாக புறக்கணித்தால் அங்கிருந்துதான் தற்கொலைப் போராளிகள் தோன்றுவார்கள் என்றும் எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வவுனியா அகதிமுகாமிலுள்ள மக்களின் அவலநிலை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியதாவது;

வவுனியா அகதி முகாம்களிலுள்ள வசதி வாய்ப்புகள் குறித்து சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறுவதைப் பார்த்தால் அவர் ஏன் அங்கு சென்று குடியேறவில்லையென்று எண்ணத் தோன்றுகின்றது.

அவர் கூறுவதைப் பார்த்தால் இங்குள்ள வசதிகளைவிடவும் அங்கு அதிகம் உள்ளது போல் தெரிகின்றது. அவ்வாறானால் இங்கு தங்குமிடங்கள் பெற முண்டியடிக்கும் அமைச்சர்கள், எம்.பி.க்களை அங்கு அழைத்துச் சென்று குடியேற்றலாமே? சிங்கள இனவாதமும் தமிழ் இனவாதமும் மோதிக் கொண்டதால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சம் தமிழ் மக்கள் அங்குள்ளனர். இந்த மக்களின் பிரச்சினையை குறுகிய அடிப்படையில் பேசக்கூடாது.

வவுனியா, யாழ்ப்பாண தேர்தல்களில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை கண்ணைத் திறந்து பாருங்கள். உங்களுக்கு அணுவளவாவது மூளையிருந்தால் உணர்ந்து கொள்வீர்கள். அகதி முகாம்களிலுள்ள 50 ஆயிரம் குழந்தைகளின் வாழ்வுடன் விளையாடாதீர்கள்.

கர்ப்பிணித்தாய்மார்கள் சேறு சகதிக்குள் கிடக்கின்றனர். கை, கால் இழந்தவர்கள், காயமடைந்தவர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். சேற்று நீருக்குள் இருந்து கொண்டு மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றனர்.

இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா? அல்லது உங்கள் பிள்ளைகளைத்தன்னும் அங்குள்ள சேற்று நீரில் இறங்க விடுவீர்களா?

நீங்கள் இங்கு உங்கள் மனைவிமாருடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். ஆனால் அங்கு மனைவி ஒருமுகாமில், கணவன் ஒரு முகாமில், பிள்ளை ஒரு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலைக்குச் சென்ற உங்கள் குழந்தை வீடு வருவதற்கு ஒரு மணிநேரம் தாமதித்தால் கூட நீங்கள் துடிக்கின்றீர்கள். ஆனால் அங்கே தமது பிள்ளை உயிருடன் இருக்கின்றதா இல்லையா என்பது கூடத் தெரியாமல் துடித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமை உங்களுக்கு ஏற்பட்டால் எப்படியிருக்குமென்பதை சிந்தித்துப் பாருங்கள்.

அகதி முகாமில் உள்ளவர்களில் 10 ஆயிரம் பேரை கைது செய்துள்ளதாக இராணுவத் தளபதி கூறுகின்றார். நீதி அமைச்சோ 15 ஆயிரம் பேரைக் கைது செய்ததாக கூறுகின்றது. உண்மைநிலை என்ன? கைது செய்யப்பட்டவர்களின் பெயர், விபரங்களை சபையில் சமர்ப்பியுங்கள்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கே செல்ல ஏன் அனுமதி மறுக்கின்றீர்கள்? எதை மறைக்க முயற்சிக்கின்றீர்கள்? ஜனாதிபதியின் மகனுக்கு அங்கு செல்ல என்ன உரிமை இருக்கின்றது? மக்கள் பிரதிநிதிகளான எமக்கில்லாத உரிமை அவருக்கு எப்படி வழங்கப்பட்டது?

அந்த மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஏன் அவர்களை அடைத்து வைத்துள்ளீர்கள்? ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்தவே அடைத்து வைத்துள்ளீர்கள். ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இந்த மக்களை புறக்கணித்தால் அகதிமுகாம்களிலிருந்து தான் தற்கொலைப் போராளிகள் உருவாகுவார்கள்.

அகதி மக்கள் தொடர்பான உங்கள் செயற்பாடுகளால் வேறு ஒரு நாடு தலையிடும் நிலைமையை ஏற்படுத்துகின்றீர்கள். இந்த மூன்று இலட்சம் மக்களும் இயற்கை அனர்த்தங்களால் அகதிகளாக்கப்பட்டவர்களல்ல. எமது செயற்பாடுகளால் அகதிகளாக்கப்பட்டவர்கள்.

இந்த மக்களின் பிரச்சினையை தீர்க்க பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவொன்றை உருவாக்குங்கள். நாம் பூரண ஒத்துழைப்புத் தருகின்றோம்.

Exit mobile version