Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இங்கிலாந்தில் 16ம் திகதி 4.30 மணிக்கு;லசந்த கொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்.

14.01.2009.

தனது மக்கள்மேல் தொடர்ந்து குண்டுபோட்டு கொன்று கொண்டிருக்கும் ஒரே ஒரு நாடு இலங்கை என்று தான் இறந்த பிறகு வெளியிட எழுதிய தலையங்கத்தில் எழுதினார் லசந்த விக்கிரமதுங்க. தினமும் குறைந்தது மூன்று உயிர்களாவது இலங்கை இராணுவ குண்டுகளுக்கு பலியாகி வரும் தருணத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் செய்வதாக அதை நியாயப்படுத்தி வருகிறது அரசு. அரசின் பிரச்சாரத்துக்கு உறுதுணையாக தெற்கின் இனவாதிகள் உக்கிர பணி செய்துவருகிறார்கள். ராஜபக்ச சகோதரர்கள் தமது கூலிக்குழுக்களை வைத்து கட்டற்ற பயக்கெடுதியை ஏற்படுத்தி பக்கச்சார்பற்ற குரலை ஒட்டுமொத்தமாக நசுக்கி வருகிற இத்தருணத்தில் துணிந்து எழும் ஒவ்வொருவரும் சாவை நோக்கியே எழுகிறார்கள். சமரசமற்ற ஊடகவியலை செய்ய விரும்பிய லசந்த தனக்கு சாவு நிச்சயம் என்று நம்பியிருந்ததில் யாருக்கும் ஆச்சரியம் வரப்போவதில்லை. ராஜபக்ச மன்னராட்சிக்கு எதிராக மூச்சு பேச்சு வரமுடியாத படிக்கு வன்முறை குழுக்கள் -கைக்கூலிகள் பயக்கெடுதி பரப்பி வைத்திருக்கிறார்கள்.

சன்டே லீடர் லசந்தவின் கொலை ராஜபக்ச அதிகாரத்தின் திரையை உலகுக்கு கிளித்து காட்டியுள்ளது. அரசின் யுத்த முன்னெடுப்புகளின் பின்னிருக்கும் அதிகார வெறியையும் மனித உரிமை மீறல்களையும் ஊழலையும் வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது இக்கொலை.

ஊடகத்துக்கெதிரான வன்முறையில் இலங்கை உலகின் முன்ணனி நாடு. அதிலும் தற்போதய அரசு ஊடகங்களுக்கு எதிரான வன்முறையை புதிய உச்சத்துக்கு இட்டுசென்றுள்ளது. இந்த போக்குக்கு எதிராக நாம் கடும் எதிர்ப்பு கிளப்பியாக வேண்டும். மக்களை வேட்டையாடிக்கொண்டு அதை எழுத முற்பட்ட ஒரு தரமான ஊடகவியலாளனை நாயை சுடுவது போல் சுட்டு தள்ளிக்கொண்டு சர்வாதிகாரம் செய்யும் இந்த அரசுக்கெதிரான எல்லாவித எதிர்ப்பையும் நாம் செய்தாகவேண்டும்.

லசந்தவின் கொலையை கண்டித்து ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ (Committee for Worrkers International) பல நாடுகளில் எதிர்ப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்துள்ளது.


இங்கிலாந்தில் வெள்ளிக்கிழமை 16ம் திகதி 4.30 மணிக்கு, இலங்கை தூதரகத்துக்கு வெளியே நடக்க இருக்கும் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.

இந்த எதிர் நடவடிக்கைக்கு முழு ஆதரவும் வழங்கி கலந்து கொள்ளுங்கள். நன்றி

தேசம்நெற்

எக்சைல் யேர்னலிஸ்ட் நெட்வேர்க் –

இக்கொலை சம்பந்தமாக ‘தொழிலாளர் அகிலத்துக்கான அமைப்பு’ வெளியுட்டுள்ள அறிக்கையின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. (இது நேரடி மொழிபெயர்ப்பல்ல)

கடந்த 8ம் திகதி சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரதுங்க கொல்லப்பட்டதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

எம் ரி வி நிலையதின் மேலான காடைத்தனமான தாக்குதல் நடந்து மூண்று மணித்தியாளத்துக்குள் இன்னுமொரு முக்கிய ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் ஊடகவியலாளர் மேலான அரச வன்முறையை நாம் வன்மையாக கண்டிக்கிறோம். துணிந்து உண்மையை கதைக்க நினைப்பவர்களை ராஜபக்ச அரசு எவ்வாறு அடக்க முயலுகிறது என்பதற்கு இந்த இரண்டு உதாரனங்களும் நல்ல உதாரனம்.

உண்மைகள் – இலங்கை மக்கள் படும் துன்பங்கள் வெளியில் வராமல் இருக்க இந்த அரசு எதைச்செய்யவும் தயாராக இருக்கிறது. புலிகளுக்கு எதிரான தமது புதிய வெற்றி பெருமித்துடன் அரசின் அட்டூளியங்கள் கேட்பாரற்று கூடிக்கொண்டிருக்கிறது. தமது ஊழல்களையும் சர்வாதிகார முறைகளையும் கபடமாக மறைக்கவும் இவர்கள் ஊடகங்களுக்கு எதிராக தமது பலத்தை காட்டி வருகிறார்கள்.

நாட்டின் மிக முக்கியமான ஒரு ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இக்கதி சாதாரன மனித உரிமை போராளிகள் மற்றும் அரசியல் போராளிகள் ஆகியோரின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பக்கசார்பற்ற ஊடகவியலாளர் மற்றும் மனித உரிமைவாதிகள் தொழிலாளர் பிரதிநிதிகள் கொண்ட தனியார் விசாரனைக்குழு உடனடியாக உருவாக்கப்பட்டு லசந்த விக்கிரமதுங்கவின் கொலை உட்பட யுத்த காலகட்டத்தில் கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகளும் சரியாக விசாரிக்கப்படவேண்டும்.

யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு அரச எதிர்தரப்பினரையும் ஊடகவியலாளர்களையும் கொல்வதும் தாக்கப்படுவதும் முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

ஊடகங்களுக்கான உண்மையான சுதந்திரம் வழங்கப்படுவதுடன் ஜனநாயக மனித உரிமைகள் மீளமைக்கப்படவேண்டும்.

சேனன்.

Exit mobile version