Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

இங்கிலாந்திற்கு 9 ஆண்டு இலங்கைக்கு 9 மாதம் : ராஜபக்ச ஆட்சி குற்றச்சாட்டு

ஈராக்கில் இ‌ங்‌கிலா‌ந்து தலையிட்டது குறித்து விசாரணை ஆணைக்குழு ஒ‌ன்றை நியமிப்பதற்கு 9 ஆ‌ண்டு எடுத்த ஐ.நா சபை, இலங்கை தொடர்பாக 9 மாதங்களுக்குள் நிபுணர்கள் குழுவை அமைக்கப்போவதாக கூறி இரட்டை வேடம் போடுகிறது என்று இலங்கை குற்றம்சா‌ற்‌றியுள்ளது.

இலங்கை தொடர்பாக இத்தகைய குழு ஒன்றை அமைப்பதற்கும் ஐ.நா சபை அவசரப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, செயலாளர் நாயகம் பான் கீன் முன்வைத்த பிரச்சனைகளுக்கு பதிலளிக்க இலங்கைக்கு போதிய கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

இலங்கையில் பயங்கரவாதத்தை தோற்கடித்து 9 மாதங்களே சென்றுள்ளன. இப்பொழுது 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமாகியுள்ளது. எனவே செயலர் நாயகம் எமக்கு மேலும் கால அவகாசம் தந்திருக்க வேண்டும் என்று அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார்.

பிரிட்டனை பொறுத்த வரையில் அந்த நாடு ஈராக்கில் படைகளை நிறுத்தியமை, மனித உரிமைகளை மீறியமை ஆகியன தொடர்பாக விசாரணை செய்ய ஆணைக்குழுவை நியமிக்க ஐ.நா சபை 9 ஆ‌‌ண்டுக‌ள் எடுத்தன. இந்த ஆலோசனைக் குழுவை நியமிக்கும் காலநேரம் குறித்தும் அரசாங்கம் சந்தேகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் ஏன் இந்த ஆலோசனைக்குழு நியமிக்கப்படுகிறது என்பதே அரசாங்கத்தின் சந்தேகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் அதனால் குறித்த நோக்கம் நிறைவேறப் போவதில்லை என்று அமைச்சர் தெரிவித்தார். பொதுத் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கும் வேளையில் செயலர் நாயகம் எதற்காக இத்தகைய குழுவை நியமிக்கிறார் என்பதே எமது கவலையாகும்.

இத்தகைய குழு ஒன்று அவசியமும் இல்லை. மேலும் அதற்கான காலநேரமும் பொருத்தமாக இல்லை. எனவே இக்குழுவை நியமிப்பதற்கு செயலர் நாயகத்திற்கு உரிமையும் இல்லை என்று அமைச்சர் மேலும் கூறினார்.

இன்னொரு நாட்டின் விவகாரங்கள் சம்பந்தப்பட்டது என்பதால் செயலர் நாயகம் குழுவொன்றை அமைப்பதற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர் போகொல்லாகம, இத்தகைய நடவடிக்கை உள்ளூர் தேர்தலை மிக மோசமாக பாதிக்கும் என்பதால் பான் கீ மூன் இதனை தவிர்த்துக் கொள்வா‌ர் என தாம் நம்புவதாகவும் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version