Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ஆஸ்திரேலியாவில் உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும்

20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டுவரும் ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாம் மூடப்படவேண்டும்

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகுகளில் வந்தவர்களை ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாமுக்குள் அடைத்துவைக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் இவ்வாண்டுடன் முடிகின்றன.

இந்த அகதிகள் ஆதரவு வலயமானது அகதிகளின் உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் சகல குழுக்களையும் தனிநபர்களையும் உலக அகதிகள் தினத்தன்று ஒன்றாகத் திரண்டுவரும்படி அழைப்பு விடுக்கின்றது. அங்கு ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாமை இனி ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்ற தெளிவான செய்தியை ஒரே குரலில் அரசாங்கத்திற்குத் தெரியவைப்போம்.

தஞ்சம் கோரி வந்தவர்கள் 4783 பேர்கள் தடுப்புக்காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தடுப்புக்காவல் முறையானது வரவர ஆபத்தை அதிகரித்துக் கொண்டே போகின்றது என்பதை இது எடுத்துக்காட்டுகின்றது.

2010 ஜூலை மாதத்திற்கும் 2011 ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட 12 மாதகாலத்தில் தஞ்சம்கோரி வந்தோர் 6 பேர் இறந்திருக்கிறார்கள். 500க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் தஞ்சம்கோரி வந்தோரில் 32 வீதமானோர் 12 மாதங்களுக்கு மேலாக அடைபட்டுக் கிடக்கிறார்கள். மாதக்கணக்காக – ஏன் , ஆண்டுக்கனக்காகக் கூட – சிறையில் அடைபட்டுக் கிடந்தது வாடும் அகதிகளின் தொகை வரவர அதிகரித்துக் கொண்டே போகின்றது.

டார்வின் நகரில், சராசரியாக, தினமும் தஞ்சம்கோரி வந்தவர்களில் 5 பேர்களையாவது அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கின்றார்கள். இது ஒரு திகிலூட்டும் புள்ளிவிபரமாகும்.

தஞ்சம் கோருவோரினதும் தடுப்பு முகாம்களில் அடைபட்டுக் கிடப்போரினதும் நிலைமை வரவர நம்பிக்கை இழப்பாகவும் துணிகரச் செயல்களைத் தூண்டுபவையாகவும் பரிணமித்துக்கொண்டு வருகிறது. இந்த நிலை அவசியம் மாற்றப்படவேண்டும்.

இப் பிரச்னைக்கு மூலாதாரமாக உள்ளது, ஆணைக்குட்பட்ட தடுப்புக்காவல் நிலயமாகும். இது ஒரு குற்றமும் இழைக்காத, தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் நிம்மதியான வாழ்வைத் தேடும் அப்பாவி மக்களைப் பலியாக்கும் மனிதாபிமானமற்ற கொள்கையாகும்.

அண்மையில் குடிவரவுத் திணைக்களம் பிரதிமாதமும் 500 தஞ்சம் கோரி வந்தோரை இணைப்புபால விசாவில் விடுதலை செய்துவந்திருக்கிறது. அந்த ஒழுங்கு முற்றிலும் சரியானதென்று ஏற்றுக்கொள்ள முடியாததெனினும், தஞ்சம் கோரி வந்தோரில் சிலராவது தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்பது வரவேற்க்கத்தக்க விடயமாகும்.

அகதிகள் இயக்கம் இதுவரை பரப்புரை செய்து வந்த முயற்சி கைகூடுவது சாத்தியம் என்பதை இது நிரூபிக்கின்றது.

தஞ்சம்கோரி வருவோரின் உரிமைகளைக் காப்பாற்றும்படி ஆஸ்திரேலியா அரசாங்கத்தை எமது அகதிகள் ஆதரவு வலயம் வேண்டி நிற்கின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மெல்பேர்னில் நடந்த உலக அகதிகள் தின அமைப்பின் ஒன்றுகூடல்களுக்கு ஐம்பதிற்கும் மேற்ப்பட்ட அமைப்புக்கள் தங்கள் ஆதரவைத் தந்தார்கள். இந்த ஆண்டு இன்னும் அதிகமான அமைப்புக்கள் தங்கள் ஆதரவை நல்குவார்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

ஆகவே – 2012 உலக அகதிகள் தினத்திற்கு மெல்பேர்னில் இருந்து அதரவு தரவிருக்கும் குழுக்கள் தங்கள் ஆதரவு குறிப்புக்களை refugeeadvocacynetwork@gmail.com என்ற மின்னஞ்சல் விலாசத்திற்கு அனுப்பவும் அல்லது Sue Bolten ஐ 0413377978 எனும் கைத் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

அகதிகளின் உரிமைகளுக்கு ஆதரவளிக்கும் சமூக அமைப்புக்கள் யாவும் இந்த ஒன்றுகூடல் முயற்சி வெற்றியளிக்கக்கூடிய விதத்தில் தங்கள் செயற்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்யவேண்டுமென வேண்டுகிறோம்.

ஜூன் மாதம் 17ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுவோம். பேச்சாளர்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) “வெளிப்பாடு” நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.

 

Exit mobile version