அவுஸ்திரேலியாவை நோக்கி அரசியல் தஞ்சம் கோரிச் சென்ற 153 அகதிகளும் அலைகடலின் நடுவே காற்றுப்புகாத சுங்கக் கடற்படைக் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என இன்று முதலாவது தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் கடந்த ஜூன் 13 ஆம் திகதி இந்திய பாண்டிச்சேரி கரையில் இருந்து அவுஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டனர்.
இதன்போது அகதிகளுக்கு சுதந்திரமான நடமாட்டங்கள் இல்லை. அவர்கள் அறைகளில் இருந்து வெளியேறும்போது பாதுகாப்பு காவலர்கள் உடன் செல்கின்றனர் என்று அகதிகள் சார்பில் ஆஜரான
சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர். அவர்களுடைய கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அவர்கள் மீண்டும் இலங்கைக்கோ, நவுறு மற்றும் மானஸ் தீவுக்கோ கொண்டு செல்லப்படுவது சட்டவிரோதமானது என்று உத்தரவிட வேண்டும் என்று சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் கண்டன அறிக்கைகளை மட்டும் கண்துடைப்பிற்காக வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது. தவிர, உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் பிச்சைக்காரர்கள் போன்று அலைந்துதிரியும் வேளையில் புலம்பெயர் அமைப்புக்கள் தமது வியாபாரங்களை வளப்படுத்த மோதிக்கொள்கின்றன.
கடந்த வருடங்களில் அவுஸ்திரேலியாவிற்குப் பயணம்செய்த 800 அகதிகளைக் காணவில்லை. ஆழ்கடலில் மாண்டு போயினரா அன்றி அவுஸ்திரேலிய, இலங்கை அரசுகளின் கரங்களில் பலியாகினரா என்ற பல்வேறு சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.